சனி, 13 பிப்ரவரி, 2010

நாடு செய்வோம்!

ஆடுகள் ஒருமேய்ப் பன்கீழ் ஆனநாம் வீழ்ந்து விட்டோம்! கூடுகள் கலைந்த தாகக் குலவுமண் சாம்பல் ஆகப் பாடுகள் பெற்றோம்! என்றே படுத்திருப் போமோ சொல்வீர்? நாடுகள் கடந்த நாடு நமக்கது வேண்டும் வெல்வீர்! துருக்கியக் கரையில் யூதர் துடிப்பொடு பசுமை செய்து பொருப்பிலே ஆற்றை ஏற்றிப் பூம்பொழில் அமைத்த போதில் கருக்கொடு நின்ற வையம் காணவே எரித்த பின்னும் நெருப்பிலே இஸ்ரேல் பூத்த நிகழ்வதை நெஞ்சிற் கொள்ளீர்! வயலெலாம் எரிந்த பின்னும் வளமெலாம் புகைந்த பின்னும் அயலெலாம் மக்கள் தீயில் அவலமாய்த் தொலைந்த பின்னும் வியட்னமின் சுதந்தி ரத்தை வீழ்த்தவா முடிந்த தப்பா? அயற்சிகொள் ளாதீர் ஈழ அரசொன்று புலத்திற் செய்வீர்! இராட்சதன் அவத ரித்த இந்தநூற் றாண்டு என்க இராசபக் சாவின் காலம் எழுதிய பின்னும் வையம் தராசிலே இட்ட தாமோ? தரணியின் அயினா! அந்தத் துரோகியைக் கட்டுப் போடத் துணிந்ததாய் இன்னும் காணேன்! இந்தியப் பருக்கை நாடு ஈழத்தை எரித்து விட்டு மந்திரிப் பதவிக் காய்ச்சல் மசக்கையில் கிடந்தார் எங்கள் வெந்தவோர் பிஞ்சைப், பெண்கள் வேதனைக் குரலைக் கேட்டும் அந்தகர் நொந்தா ரில்லை! அழுததும் கிடையா தப்பா! துச்சமாய் மனிதம் தீய்த்துத் துட்டராய் மகிந்த னாட்சிக் கச்சித மாகக் கொல்லக் கனித்தமிழ் மாந்தர் செத்தார்! அச்சமும் இல்லை யார்க்கும் அடிபணிந் தானும் இல்லை! உச்சனாய் இராச பக்சா உயிரொடு எரிக்கின் றானே! பிச்சையர் இல்லாச் சாதி பிச்சையர் ஆனார்! முட்டுக் குச்சிலே நூறு பேராய்க் கூட்டிலே யடைந்தார்! கொட்டும் நச்சுவேர் பரந்த பக்சர் நங்கையர்க் கிழிவு செய்தார்! மிச்சமாய்த் தமிழன் இன்றி முடிவது செய்தார் கெட்டார்! எரிந்திடும் வீட்டில் அள்ளி எடுத்தவர் வேண்டாம்! எம்மைக் கரந்தவர் காசை அள்ளிக் கடந்தவர் ஒருவர் வேண்டாம்! புரந்தனில் முடியே சூடிப் போனவர் வேண்டாம்! வேண்டாம்! சிரசிலே பொய்ம்மை இல்லார் சேருக நாடு செய்வோம்! அறப்புயல் எங்கள் தேசம்! அறவழி எங்கள் தர்மம் திறப்பது உண்மைத் தொண்டர் திருக்கரம் தானே காட்டும் கறப்பது மட்டும் காணக் கந்தல்கள் வருவார்! ஆயின் சிறப்பது கொள்ளத் தூய்மைச் சிந்தனை யாளர் வாரீர்! அரசொன்று செய்வீர்! இந்த அகிலமெல் லாமும் நெய்வீர்! முரசொன்று வைப்பீர்! லங்கா மூர்க்கனை எங்கும் தைப்பீர்! அரசியற் பாதை யோடு அகிலத்தை மீட்பீர்! நாளை சுரமிடும் சுதந்தி ரத்தின் தொடுகரம் நீங்கள் தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக