செவ்வாய், 21 டிசம்பர், 2010

இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் பம்மாத்து .பெரும்பாலானவை புனரமைப்புக்குள்ளேயே அடங்கும்.

புதுடில்லி முன்னர் தெரிவித்தது போன்று வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட மாட்டா என்று தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு என 300 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பகுதி சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்துக் கொடுப்பதற்கே வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 5,000 வீடுகள் மட்டுமே புதிதாக அமைத்துக் கொடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஏனைய 45,000 வீடுகளும் புனரமைப்பு மட்டுமே செய்யப்பட உள்ளன எனவும் அது தெரிவிக்கிறது.  30 வருடங்களாகப் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவும் திட்டத் தின் கீழ் இந்தியா 50,000 வீடுகளைக் கட்டித்தரும் என்று பிரதமர் மன் மோகன்சிங் அறிவித்திருந்தார். இந்தியாவின் இந்தத் திட்டம் நேரடியாக ஈழத் தமிழர்களுக்கு வழங் கப்படும் என்றும் திட்டப் பயனாளிகள் நேரடியாக இந்தியாவாலேயே தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தமிழக முதல்வர் மு.கருணாநிதியிடம் நேரில் உறுதியளித்திருந்தார்.
கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, 50,000 வீடுகளைக் கட்டித்தரும் திட்டத்தின் தொடக்கமாக ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல்லை அரியாலையில் நட்டு வைத்தார். அதுவரை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு 50,000 வீடுகளைக் கட்டித்தரும் என்றே சொல்லப்பட்டு வந்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 5,000 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் 45,000 வீடுகள் புனரமைத்து மட்டுமே கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது விடயத்தில் அறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் எத்தனை வீடுகளைப் புதிதாக அமைப்பது, எத்தனை வீடுகளைப் புனரமைப்பது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இலங்கை அரசு இப்போது வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இறுதியானது அல்ல" என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. 50,000 வீடுகளும் புதிதாக அமைத்துக் கொடுக்கப்படப் போவதில்லை என்பதையும் இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியது. புதிதாக வீடுகளை அமைத்தல், பகுதி சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்தல், சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் விருப்பப்படின் அவர்களுக்குக் கொடுப்பனவை வழங்குதல் ஆகிய பிரிவுகளில் திட்டம் செயற்படுத்தப்படும் என்று தூதரகம் தெரிவிக்கிறது.
சேதமடைந்த, அழிவடைந்த வீடுகளை மதிப்பீடு செய்யும் பணியை இலங்கை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இந்தியத் திட்டத்துக்கான பயனாளிகளை அது தெரிவு செய்து வழங்கும்.
இலங்கை வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமையவே இந்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தும் என்றும், முன்னர் அறிவித்தது போன்று பயனாளிகளை நேரடியாகத் தெரிவு செய்து உதவிகளை வழங்குவது என்ற தனது நிலைப்பாட்டில் புதுடில்லி இறுக்கமாக நிற்காது என்றும் சென்னையில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. ஈழத் தமிழர் விடயத்தில் இதுபோன்ற இறுக்கமான நிலைப்பாடுகள் இரு நாட்டு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தனது நலன் கருதி இந்திய அரசு வடக்கு, கிழக்குத் தமிழர் விவகாரத்தைக் கைகழுவிவிடத் தயங்காது என்றும் அவை விளக்கம் அளித்தன.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த கட்டடங்களைப் புனரமைப்பதே முன்னுரிமை கொடுத்துக் கவனிக்கப்பட வேண்டி இருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் பொருளாதார அபவிருத்தி அமைச்சு, புதிதாகக் கட்டங்கள் கட்டுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரச அதிகரிகளுக்கு கடந்த வாரத்தில் உத்தரவு பிறப்பத்திருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக