ஞாயிறு, 19 டிசம்பர், 2010

சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவே செஞ்சிலுவை வெளியேற்றப்படுகின்றது!!

சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதற்காகவா இலங்கையின் வட மாகாணத்திலிருந்து சர்வதேச செஞ்சிலுவை சங்க குழு வெளியேற்றப்படுகின்றது என்று பிரித்தானிய நாடாளுமன்ற பொதுச் சபையில் – தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.



தமிழ் மக்களுக்கு அதிக உதவிகள் தேவைப்படும் இக்கால கட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில்இருந்து செஞ்சிலுவைச் சங்க குழு அலுவலகம் மூட வைக்கப்பட்டிருப்பது சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை அவமதிக்கும் ஒரு செயல்.


காணாமல் போன தமிழ் இளைஞர்களை கண்டுபிடித்து உறவினர்களோடு இணைத்து வைக்கும் பணியிலும் செஞ்சிலுவைச் சங்க குழு ஈடுபட்டு வந்தது. தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் திட்டமிட்ட வகையில் சனத்தொகை விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் அரசின் நோக்கத்துக்காகவே செஞ்சிலுவைச் சங்க குழு வெளியேற்றப்படுகின்றதா என்று பிரித்தானிய தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.


இதற்கு பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார உதவி அமைச்சர் அலிஸ்டர் பேர்ட் பதில்கள் வழங்கினார். பிரித்தானிய அரசு இது குறித்து அறிந்து வைத்துள்ளது என்றும் – யுத்தத்துக்கு பிந்திய இந்நாட்களில் இலங்கை அரசு சொன்ன சொல் தவறாமல் நடக்க வேண்டும் என பிரிட்டன் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்றும் அமைச்சர் பதிலளித்தார்.


இதேசமயம்


சர்வதேச செஞ்சிலுவைச் சங்க யாழ்ப்பாண அலுவலகமும் இவ்வாண்டின் இறுதியுடன் தனது முழுமையான செயற்பாடுகளை இடைநிறுத்துகின்றது. அடுத்த ஆண்டின் ஜனவரியுடன், அதன் பணியாளர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.


முன்னதாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் செயற்பட்டு வந்த செஞ்சிலுவைச் சங்க கிளை அலுவலகங்கள் படிப்படியாக பூட்டப்பட்டிருந்தது. தற்போது எஞ்சியிருந்த நல்லூர் கோவில் வீதியிலுள்ள அதன் யாழ். மாவட்ட தலைமை அலுவலகமும் மூடப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக