சனி, 18 டிசம்பர், 2010

"போர் குற்றம்"-ஐநா குழுவுக்கு அனுமதி

இலங்கை அரசு, அதன் முன்னைய நிலைப்பாட்டிலிருந்து விலகி, ஐநாவின் தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாக கூறப்பட்ட போர்க்கால குற்றங்கள் பற்றி ஆராய்ந்து பான் கிமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூவரடங்கிய நிபுணர்குழு நியமிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் முன்னர் கடுமையாக விமர்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது..
இலங்கையில் இடம்பெற்று முடிந்த போரின் போது தனது படைகள் சர்வதேச மனிதாபிமான சட்டவிதிகளை மீறியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்தே வருகின்றது,
ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீமூன்- அவரது நிபுணர் குழு இலங்கைக்கு செல்லும் என்று கூறியதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், நாடு முழுவதும் திரிந்து விசாரணைகளை மேற்கொள்ளும் அளவுக்கு இந்த நிபுணர் குழுவுக்கு சுதந்திரம் இருக்காது என்றே கருதப்படுகின்றது. அதாவது, யுத்தத்தின் இறுதி ஆண்டுகள் பற்றி மீளப்பார்க்கும் பொருட்டு தான் அமைத்துள்ள உள்ளக ஆணைக்குழுவின் முன்னிலையில் எவரும் தமது கருத்துக்களை முன்வைக்கமுடியும் என்ற அடிப்படையிலேயே, இந்த நிபுணர் குழுவும் இலங்கை வந்து தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த இடமளிக்கப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.
இந்த நிபுணர் குழுவின் இலங்கைப் பயணத்துக்கான திகதியும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.விமல் வீரவன்ஸ உண்ணாவிரத போராட்டத்தின் போது
ஐநாவின் நிபுணர் குழுவிலுள்ள இந்தோனேசியர், அமெரிக்கர் மற்றும் தென்னாபிரிக்கர் ஆகிய மூவருக்கும் இலங்கை வருவதற்கான வீசா அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஆறு மாதங்களுக்கு முன்னர் கூறிய வெளியுறவு அமைச்சர், ஐநாவின் இந்த முயற்சியை 'தேவையற்ற தலையீடு' என்று வர்ணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக