வெள்ளி, 17 டிசம்பர், 2010

ஜீவன் கூல் தொடர்பான செய்தி தவறானது! சண்முகலிங்கன் பதில் துணைவேந்தரானார்!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தெரிவானதாக அறிவிப்பு வெளியாகியுள்ளமை பொய்யான தகவல் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பில் கடந்த சிலமாதங்களாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்த நிலையில்  பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.  இந்நிலையில் குறித்த தகவல் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக சமூகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அந்தச் செய்தியில் உண்மையில்லை என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் யாழ்.பல்கலைக்கழகத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும், தமக்கு நெருக்கமான நண்பர்களுக்கு சிறிய தேநீர் விருந்து கொடுத்ததாகவும், இதனை அடுத்து அவருக்கு அந்தப் பதவி கிடைத்துவிட்டதாக கருதியவர்களே அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் என்ற தகவலை வெளியிட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய துணைவேந்தரின் பதவிக்காலம்  முடிவடையும் நிலையில், அவர் தொடர்ந்து பல்கலைக்கழக பதில் துணைவேந்தராக அறிவித்தல் வரும்வரையில் பணியாற்றுமாறு இலங்கை பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் சண்முகலிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிப்பது தொடர்பில் பல்வேறு அரசியல் தலையீடுகள் தமக்கு கிடைத்தவண்ணம் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யாழ்.பல்கலைக்கழகத்தின் முக்கியஸ்தர் ஒருவருக்கு  தெரிவித்துள்ளமை தொடர்பிலான தகவல்களும் வெளியாகியுள்ளன.
பேராசிரியர் செல்வி வசந்தி அரியரட்ணத்தினை நியமிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், ரட்ணஜீவன் கூலை நியமிக்குமாறு கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் தன்னிடம் கோரிக்கை விடுத்துவருவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாக தகவல் ஒன்று யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினை எட்டியிருக்கின்றது.
முன்னர் ரட்ணஜீவன் கூல் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக தெரிவாகியிருந்த போதிலும் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மேற்கொண்ட கடும் எதிர்ப்பினால் அவர் பதவி ஏற்காமலேயே கொழும்பு திரும்பியிருந்தார் என்பது தெரிந்ததே.அன்றைய அரச ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர் என்ற காரணத்தினாலேயே அவர் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் சமூகம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக