வெள்ளி, 23 ஏப்ரல், 2010

புத்திஜீவி பிள்ளையான் தமிழ் மக்களுக்கான அறிவுரை ........!


வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திக்கின்றார்கள் என்றும் அரசியலில் இன்னும் தெளிவுபெறவில்லை என்றும் பிள்ளையான் எனப்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தை நோக்கிய போது சிரிப்புத்தான் வருகின்றது. வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திக்கின்றார்கள் என்றும் அரசியலில் இன்னும் தெளிவுபெறவில்லை என்றும் பிள்ளையான் எனப்படுகின்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்துள்ள கருத்தை நோக்கிய போது சிரிப்புத்தான் வருகின்றது. பிள்ளையானின் பிள்ளைத்தனமான கருத்தைக் கேட்கும் போது அவர் மீது அனுதாபம்தான் மேலிடுகின்றது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக அணிதிரண்டு, பிரதேச வாதம் பேசியபோது கிழக்கு மக்கள் உண்மையிலேயே கருணா மற்றும் பிள்ளையான் குழுவினர் தமக்கு நல்லதொரு வழிகாட்டுவார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பது உண்மைதான். ஏனென்றால் கருணாவும் பிள்ளையானும் தமது பிரதேசத்திற்காக - பொதுமக்களுக்காகப் பாடுபடுவார்கள் என்று கிழக்கு மாகாண மக்கள் எண்ணினார்கள். அவர்கள் ஆரம்பத்தில் கூறியதுபோன்று, கிழக்கு மாகாணத்தை வளப்படுத்தத்தான் போகின்றார்கள் என உண்மையாகவே மக்கள் நம்பினார்கள். ஆனால் இந்த இரண்டுபேருமே, அரசாங்கத்தின் அடிவருடிகளாக மாறி, ஜனாதிபதிக்கும் அவரது குடும்ப அரசியல்வாதிகளுக்கும் வக்காளத்து வாங்கும் மலினமான அரசியல் நடத்துவார்கள் என்று கிழக்கு மாகாண மக்கள் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. மட்டக்களப்பு மாநகரசபைக்கான தேர்தலிலும், கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலிலும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பற்றியும் அந்த மாகாணத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடுவது பற்றியும் இந்தப் புதிய தலைவர்கள் காட்டிய கற்பனைப் படங்களையும் கலர் கலரான எதிர்காலக் கனவுகளையும் எப்படியும் தாங்கள் அடைந்துவிடுவோம் என்ற நப்பாசை மக்கள் மத்தியில் ஏற்படத்தான் செய்தது. இதனால் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து மாநகரசபை மற்றும் மாகாணசபை தேர்தல்களில் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் நகர மேயர் சிவகீதா பிரபாகரன் பதவிக்கு வந்ததும், தேர்தல் காலத்தில் வாக்களித்ததைப் போன்று, நகரத்தை அபிவிருத்தி செய்வதில் அக்கறை காட்டவில்லை. ஏதோ அரசாங்க ஊழியரைப்போன்று அரசாங்கம் சொல்லியதைச் செய்து கொண்டு. ஜனாதிபதிக்கு நல்லபிள்ளையாக வலம் வந்தார். திடீரென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அவர் இணைந்தார். பின்னர் அந்தக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து ஜனாதிபதி தேர்தலின்போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டார். பிள்ளையானும் கருணாவும் சுயநல அரசியல் செயற்பாடு காரணமாக ஓரணியில் இருந்தும் வாக்குவாதப்பட்டார்கள். மோதிக்கொண்டார்கள். தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை உலகத்தின் முதல்தரமான பயங்கரவாதம் என படம் காட்டி அதனை அனைத்துலக சக்திகளின் உதவியோடு ஒழித்துக் கட்டுவதில் வெற்றிகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தங்களில் யார் அதிக விசுவாசமிக்கவர் என்பதைக் காட்டுவதற்காகப் பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார்கள். இதனால் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்தன. மக்கள் என்ன நினைப்பார்கள் - என்ன நினைக்கின்றார்கள் என்பதை நாடிப்பிடித்துப் பார்த்துச் செயற்படத் தவறிப் போனார்கள். தாங்கள் சொல்வதே வேதவாக்கு. அதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது - இருக்கக் கூடாது என்ற மனப்பாங்கில் செயற்பட்டதன் விளைவையே நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் அவர்கள் அறுவடையாகப் பெற்றுள்ளார்கள். கிழக்கு மாகாண மக்களின் தலைவர்களாகத் தோற்றம் பெற்ற கருணாவும், பிள்ளையானும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கத்தக்க வகையில் என்ன செய்திருக்கின்றார்கள், எந்த அளவிற்கு சேவையாற்றியிருக்கின்றார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் பிரதிபலித்துள்ளன. கிழக்கு மாகாண மக்களின் மனங்களை எந்த அளவிற்கு இவர்கள் வென்றிருக்கின்றார்கள் என்பதையும் இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன என்றாலும் மிகையாகாது. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அரசாங்கத்துடன் இணைந்து முரண்படாத வகையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் எத்தனை பிரச்சினைகளை கருணாவினாலும், பிள்ளையானாலும் தீர்க்க முடிந்திருக்கின்றது என்பதை இவர்களால் கூறமுடியுமா? கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் அடையக் கூடிய இலக்குகளில் எத்தனையை பிள்ளையான் என்ற சந்திரகாந்தனால் அடைய முடிந்திருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்த முடியுமா? பொதுமக்கள் மத்தியில் இருந்து அவர்களுக்காகப் பாடுபட்டு. அவர்களில் ஒருவராக இருந்து மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி தலைமைப் பதவிக்கு வருகின்றவர்களும் சரி, சூழ்நிலை காரணமாக அரசியலில் புகுந்து மக்கள் மத்தியில் தலைமைப் பதவிக்கு வருகின்றவர்களும் சரி, எப்போதும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களாகவும், மக்களின் நலன்களை இலக்கு வைத்துச் செயற்படுபவர்களாக இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறுகின்றவர்கள் எவராக இருந்தாலும், மக்களின் நம்பிக்கையை வென்ற தலைவர்களாகத் திகழ முடியாது. இதுதான் நடைமுறை அரசியலாக இருந்து வருகின்றது. ஆயுதக்குழுக்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களாயினும் சரி, பாரம்பரிய அரசியல் கட்சிகளில் இருந்து அரசியல் நடத்தியவர்களாயினும் சரி அவர்கள் தமது தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து இருக்க முடியாமல் மக்களினால் தூக்கி எறியப்பட்ட எத்தனையோ உதாரணங்களைக் கடந்த கால அரசியல் வரலாற்றில் கண்கூடாகக் காண முடியும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பது நேற்று தற்செயலாக அரசியலுக்கு வந்த பிள்ளையான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் வடக்கு கிழக்கு மக்கள் இல்லையென்பதை பிள்ளையான் கருணா போன்றவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் அரசாங்கத்துடன் எந்தவிதமான முரண்பாடுகளுமின்றி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் எமது முன்னோர்களான அனைத்துத் தமிழ்த் தலைவர்களும் விரும்பினார்கள். அதற்காகத் தம்மாலியன்ற விட்டுக்கொடுப்புகளைச் செய்து எத்தனையோ வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அவர்கள் தமது அரசியல் அனுபவத்தின் மூலம் சிங்களப் பேரினவாதத்தின் மோசமான வஞ்சகம் நிறைந்த பிற்போக்குத் தனமான அரசியல் செயற்பாடுகளையே கண்டார்களே ஒழிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முன்னேற்றத்தை ஆக்கபூர்வமாகக் காணவே முடியவில்லை. தந்தை செல்வா முதல், அமரர் அமிர்தலிங்கத்திலிருந்து அனைத்து மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர்களினதும் அரசியல் அனுபவம் இதுவாகத்தான் இருந்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் தான் ஆயுதப் போராட்ட வழிமூலம் இலங்கையின் பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்களை வழிக்குக் கொண்டு வரலாம் என தமிழ் இளைஞர்கள் ஆயுதக்குழுக்களில் இணைந்து செயற்பட்டார்கள். அவர்களின் அளப்பரிய தியாகங்களை கருணா, பிள்ளையான் போன்றவர்கள் கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்து சரணாகதி அரசியலில் இறங்கியிருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் அடையப்போவது எதுவுமே இல்லை என்பதை அவர்கள் இதுகால வரையில் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய வடக்கு கிழக்குத் தாயகப் பிரதேசத்தைப் படிப்படியாகக் கபளீகரம் செய்து, தமிழ் மக்களின் கலை கலாசாரம், பொருளாதார நிலைமைகளைத் தவிடு பொடியாக்கி அவர்களைக் கையேந்தி நிற்கின்ற ஒரு நிலைமைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு, உறுதியாகவும் இராஜதந்திர ரீதியிலும் சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் செயற்பட்டு வருகின்றார்கள். இந்தப் பேரினவாத அரசியல் போக்கைப் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரிந்து கொள்ளாதவர்களைப் போல செயற்படுகின்ற கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் தலைவர்களாக இருக்க முடியாது. இதனைத் தமது வாக்களிப்பின் மூலம் தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். எதிர்ப்பு அரசியல், இணக்கப்பாட்டு அரசியல், சரணாகதி அரசியல் என்ற மூன்று விதமான அரசியல் சாணக்கியச் செயற்பாடுகளின் விளைவாக ஏற்பட்டு வந்துள்ள அரசியல் சூழ்நிலைகள் - அரசியல் சூறாவளிகளில் வடக்கு கிழக்கு மக்கள் சிக்கி இன்ப துன்பங்களை அனுபவித்து வந்துள்ளார்கள். இந்த அரசியல் போக்குகளில் அவர்கள் அளப்பரிய அனுபவங்களை அடைந்துள்ளார்கள். சொல்லொணாத துயரங்களையும், சோகங்களையும், அவமானங்களையும், அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சரியான தலைவர்களை அடையாளம் காண்பதில் அவர்கள் பல்வேறு சிரமங்களையும், சங்கடங்களையும் சந்தித்து வருகின்றார்கள். இதன் மூலம் பழுத்த அனுபவசாலிகளாக அவர்கள் மாறியிருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் தமது முன்னால் வருகின்ற கோமாளிகள், வஞ்சகர்கள், தில்லுமுல்லு நிறைந்தவர்கள், நேர்மையானவர்கள், கபடம் நிறைந்தவர்கள், அமைதியான ஆதரவான தோற்றம் கொண்ட அரசியல் சாணக்கியம் நிறைந்த சண்டியர்கள் என பலதரப்பட்டவர்களை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், வடக்கு கிழக்கு மக்கள் அனைவருமே இத்தகைய தேர்தல் சந்தர்ப்பங்களில் சிலர் தெளிவானவர்களாகவும், உறுதியானவர்களாகவும், பலர் சூழ்நிலைக் கைதிகளாகவும் இருந்து தமது வாக்குகளை அளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அண்மைக்கால தேர்தல்களின் வாக்களிப்பு வீதத்தைப் பார்த்தால், இவர்களில் பலர் இந்த நாட்டின் அரசியல் போக்குகளில் மனம் கசந்து சலிப்புற்று அக்கறையற்றவர்களாக மாறி தமது அதி உன்னத வாக்களிக்கும் உரிமையை உதாசீனம் செய்தவர்களாக இருப்பதை மிக மிகத் தெளிவாகக் காண முடியும். மொத்தமாகச் சொல்லப்போனால், வடக்கு கிழக்கு மக்கள் சிங்களப் பேரினவாதிகளினாலும், அவர்களது அடிவருடிகளின் ஊடாகவும் திட்டமிட்ட வஞ்சகமான அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள். இதுதான் யதார்த்தம். வடக்கு கிழக்கு மக்கள் அடைய முடியாதவற்றைக் கேட்கவில்லை. அடைய முடியாதவற்றை இலக்காக வைத்துக் கொண்டு ஆசைப்படவும் இல்லை. சுதந்திரமாக, கௌரவத்தோடு, கண்ணியமாகத் தமது பாரம்பரிய பிரதேசத்தில் தமது நிர்வாகக் கடமைகளைத் தாங்களே செய்து வாழ வேண்டும் என்பதைத்தான் அவர்கள் கேட்கின்றார்கள். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் இது சாத்தியப்படமாட்டாது என்று எவரும் கூறமுடியாது. இது அடைய முடியாத இலக்கு அல்ல என்று எவரும் கூறமுடியாது. இவ்வாறான ஒரு நிலைமைக்கு வடக்கு கிழக்கு மக்கள் ஆசைப்படக் கூடாது என்று கூறுவதற்கு எவருக்கும் அருகதையும் கிடையாது. எனவே வடக்கு கிழக்கு மக்களைப் பார்த்து, “நீங்கள் விழிப்படையவில்லை. அடைய முடியாத இலக்குகளுக்கு ஆசைப்படுகின்றீர்கள்” என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறுவது சிறுபிள்ளைத் தனமாதே தவிர வேறொன்றுமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக