ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு .....

எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ் மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை. என தாய் நாடு இணைய ஏடு தனது அரசியல் களம் பகுதியில் தெரிவித்துள்ளது மேற்குலகின் பின்புல ஆதரவுடன் இலங்கையின் ஜனாதிபதியாக முடிசூடிக் கொள்ள ஆசைப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா- இப்போது காற்றோட்டமில்லாத அறையொன்றுக்குள் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவரைப் பதவியில் அமர்த்துவதற்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை அள்ளி வழங்கியதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்த நாடுகள் மறுத்துள்ள போதும்- அதை இலங்கை அரசாங்கம் பெரிதாகக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகவே தெரியவில்லை. மேற்குலகின் செல்லப்பிள்ளையாக வளரவிருந்த மற்றொரு ஜியா- உல்- ஹக் தான், சரத் பொன்சேகா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவரையே தூக்கி உள்ளே போட்டிருக்கிறது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம். ஆனால் அதற்கு எதிராக வாய் திறந்து கண்டனம் தெரிவிக்க முடியாதபடி இருக்கிறது மேற்குலகம். சரத் பொன்சேகா அமெரிக்க வதிவிட உரிமை பெற்ற ஒருவர். ஆனாலும் அவரை விடுதலை செய் என்று கோர முடியாமல் தவிக்கிறது அமெரிக்கா. ஐ.நாவும் சரி- வேறெந்த நாடும் சரி அவரை விடுவிக்குமாறு கோரவில்லை. அப்படிக் கோர முடியாத வகையில்- அவரைக் கைது செய்திருக்கிறது அரசாங்கம். இராணுவத் தளபதியாக இருந்த போது அதிகாரத்தைக் கைப்பற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சதி செய்தார்- ஊழல்களில் ஈடுபட்டார் என்று அவர் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியல் நீண்டு செல்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை சாதாரண நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டியதில்லை. இராணுவத்தில் இருந்தபோது செய்த தவறுகள் என்பதால்- அவர்களே விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. இதனால் வெளிநாடுகள் வாயைத் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றன. இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைத்து- குட்டையக் குழப்பி வந்த சர்வதேசத்தின் முகத்தில் கரியைப் பூசுகின்ற வகையிலான இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் ஒன்று தான் ஜனாதிபதித் தேர்தல். இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதோ- சரத் பொன்சேகா தோல்வியுற்றதோ பெரிய விடயமல்ல. ஆனால் தமிழ்மக்களில் பெரும்பான்மையினர் தமக்கும் இந்தத் தேர்தலுக்கும் தொடர்பே இல்லை என்ற செய்தியைக் கூறியது தான் முக்கியமானது. இது சர்வதேசத்துக்குக் கொடுக்கப்பட்ட அடி. 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மேற்குலகம் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை விரும்பியது. மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றால் தமது கைக்குள் நிற்கமாட்டார் தமது சொற்படி ஆடமாட்டார் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெற வைப்பதற்கு பெரும் முயற்சிளை எடுத்தது மேற்குலகம். ஆனால் விடுதலைப் புலிகள் அதை விரும்பவில்லை. ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் சமாதானம்... சமாதானம்...என்று பேசிப்பேசிக் காலத்தைக் கடத்தியே போராட்டத்தை அழித்து விடுவார் என்பது அவர்களின் கணிப்பு. எனவே சண்டைக்காரனான மகிந்தவை ஆட்சியில் ஏற்றி தமது படைபலத்தின் மூலம் மேலாதிக்கத்தை அடைந்து விடலாம் என்று கணக்குப் போட்டது விடுதலைப் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழ்மக்களிடம் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக் வேண்டும் என்று வலியுறுத்தியதை மேற்குலகத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் ரணில் விக்கிரமசிங்க குறைந்தளவு வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போது மேற்குலம், தமிழ்மக்களின் வாக்குகளைக் கணக்குப் போட்டுப் பார்ததது. இவர்கள் அத்தனை பேரும் வாக்களித்திருந்தால் நிச்சயம் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார் என்று கருதியது. அந்த வாய்ப்பை இழக்க செய்து-தேர்தல் முடிவைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட புலிகள் இயக்கத்தை தண்டிக்க முடிவு செய்தது. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடைவிதித்தது. இந்தத் தடையின் விளைவாகப் புலிகள் இயக்கம் சமாதான முயற்சிகளில் இருந்து புறம் தள்ளப்பட்டு- அதில் நம்பிக்கையிழந்து போகும் நிலையை ஏற்படுத்தியது. ஒரு வகையில் நான்காவது கட்ட ஈழப்போருக்கு புலிகளை உந்தித் தள்ளியதற்கு காரணமாக இருந்தது மேற்குலகம் தான். புலிகள் போரின் மீது விருப்புக் கொண்டிருந்தார்களா என்பதை விட சாதானத்தின் மீதான நம்பிக்கையை அவர்கள் இழப்பதற்கு காரணமாக இருந்தது மேற்குலகமே. இன்று அதே மேற்குலகம் விரும்பிய சரத் பொன்சேகாவை மகிந்த ராஜபக்ஸ தோற்கடித்திருக்கிறார். அதுவும் முன்னரைப் போன்று இல்லாமல் 18 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தோல்வி. இதிலிருந்து மேற்குலகுக்கு இரண்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. முதலாவது- தமிழ்மக்களின் ஆதரவைப் பெற்ற எந்த வேட்பாளரையும் சிங்கள மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பது. அடுத்தது- கடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல என்பது. 2005 ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருந்தால் கூட ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் இந்தமுறை தமிழ்மக்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதற்குப் புலிகள் இருக்கவில்லை. ஆனாலும் பெருமளவிலான தமிழ்மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களிப்பைப் புறக்கணித்தார்கள். ஏனென்றால் இது சிங்களதேசத்தின் ஜனாதிபதியைத் தெரிவு செய்தற்கான தேர்தலே என்ற கருத்தில் இருந்து அவர்கள் இன்னமும் விடுபடவில்லை. இந்தக் கருத்து இப்போதைய விட, 2005 இல் மிகவும் வலுவானதாக இருந்ததை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. எனவே தமிழ் மக்களிடம் புலிகள் வாக்களிப்பைப் புறக்கணக்குமாறு கோரா-திருந்தாலும் கூட- ரணிலுக்கு அவர்கள் வாக்களித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இது மேற்குலகுக்கு இப்போது ஓரளவுக்கேனும் புரிந்திருக்கும். அதாவது 2005 ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ்மக்கள் புறக்கணித்த விவகாரத்துக்கு புலிகள் மட்டும் பொறுப்பாளிகள் அல்ல. அடுத்து இந்தமுறை சரத் பொன்சேகாவின் தோல்வியடைந்ததற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடே காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற- அவர்களுடன் கூட்டு வைக்கத் தயாராக இருக்கின்ற-எவரையும் ஆட்சியில் அமர்த்துவதற்கு சிங்கள மக்கள் தயாராக இல்லை. இது இப்போது தெளிவாகப் புரிந்திருக்கிறது. இதுபோலவே கடந்த முறை ரணிலுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்கப் போவதாக சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருந்தால் நிச்சயம் சிங்களப் பேரினவாதம் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கும். அது ரணிலுக்குத் தென்னிலங்கையில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து விட்;டிருக்கும். வடக்கு,கிழக்கில் ரணிலுக்குத் தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கப் போவதாக உணர்ந்திருந்தால் சிங்கள மக்கள் மகிந்தவின் பக்கம் முற்றாகச் சாய்ந்திருப்பர். இந்தக் கட்டத்தில் ரணிலின் வெற்றி ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது. தாம் விரும்பியது போன்று ரணில் ஜனாதிபதியாகவில்லையே என்ற ஆத்திரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அப்போது எடுத்த தான் தோன்றித்தனமான முடிவு தமிழ் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிவிட்டிருப்பதை இப்போதாவது உலகம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு அவர்களைத் தண்டித்தது மேற்குலகம். அந்தத் தண்டனையை புலிகள் இயக்கம் மட்டும் அனுபவிக்கவில்லை- தமிழ்மக்களையே பெரிதும் பாதித்தது. இன்றைக்கும் அதே மேற்குலகத்தால் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகவும் முடியவில்லை -அதேவேளை தாம் விரும்பிய ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக