சனி, 10 ஏப்ரல், 2010

தோற்றுப்போன அமைச்சர்கள்

சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருப்பு வாக்குகளின் விபரங்கள் இன்னமும் முழுமையாக வெளியிடப்படாத அதேநேரம் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றமையின் காரணமாக இரண்டு மாவட்டங்களில் [திருக்கோணமலை, கண்டி] மீள்வாக்குப்பதிவு மேற்கொள்ளுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குத் தாவிய அமைச்சர்களான வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம, நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொறொகொட ஆகியோர் தங்களது ஆசனங்களை இழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் மொத்த வாக்குகளில் 9.35 சதவீத வாக்குகளைப் மட்டும் பெற்றிருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையிலான 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' ஒரு ஆசனத்தையேனும் தனதாக்கவில்லை. அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னணியில் திகழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் அடுத்த நாடாளுமன்றில் 12 ஆசனங்களைப் பெற்றிருப்பதுடன் மூன்றாவது பலமான கட்சியாகவும் விளங்குகின்றது. இதுவரைக்கும் வெளியான விருப்பு வாக்குகளின் விபரத்தின்படி 200,000 விருப்புவாக்குகளைத் தனதாக்கியிருக்கும் தேசிய சனநாயக முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அதிகூடிய விருப்பு வாக்கினைப் பெற்று முன்னணியில் திகழ்கிறார். தேசியவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவினைச் சேர்நத சுற்றுச்சூழல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றவர்களில் இரண்டாம் நிலையில் இருக்கிறார்கள். இவரைத் தொடர்ந்து அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மூன்றாம் இடத்தில் இருக்கிறார். அரசியலுக்குள் புதிதாக நுழைந்திருக்கும் கிரிக்கெற் விளையாட்டு வீரரான சனத் ஜெயசூரிய மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுப் நாடாளுமன்றம் செல்கிறார். அதேநேரம், மகிந்த ராஜபக்சவினது கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த, நாட்டுக்கு உலகக்கோப்பையினை வென்றுகொடுத்த கிரிக்கெட் அணியின் தலைவர் அருச்சுனா ரணதுங்க குருணாகலை மாவட்டத்தில் ஆசனத்தினைக் கைப்பற்றியிருக்கிறார். மகிந்த அரசிலிருந்து விலகிய அருச்சுனா ரணதுங்க ஜெனரல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான சனநாயகத் தேசிய முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகூடிய விருப்புவாக்கினைப் பெற்றுப் நாடாளுமன்றம் செல்கிறார். முன்னாள் சிறிலங்காவும் மலேசியாவிற்கான சிறிலங்காவினது தூதுவருமான றோசி சேனநாயக்கவும் கொழும்பு மாவட்டத்தில் அதிகப்படியான விருப்பு வாக்குகளைத் தனதாக்கியிருக்கிறார். கம்பகா மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் குடியரசு அதிபரின் சிறப்பு ஆலோசகரும் அவரது சகோதரருமான பசில் ராஜபக்ச அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயினது துணைவியார் கலாநிதி சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே கம்பகா மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். சர்ச்சைக்குரிய அமைச்சர் கலாநிதி மேவின் சில்வா இந்த மாவட்டத்தில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்ட நிமல் சிறீபால டீசில்வா ஆகியோர் அந்தந்த மாவட்டங்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். அதேநேரம் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர் நந்தன குணதிலகை தனது ஆசனத்தினை இழந்திருக்கிறார். இரத்தினபுரி மாவட்டத்தினைச் சேர்ந்த அமைச்சரான வாசுதேவ நாயணக்கார பாராளுமன்றில் தனது இடத்தினைத் தக்கவைத்திருக்கும் அதேநேரம், அமைச்சர் மகிந்த ரத்தினதிலக தனது ஆசனத்தினை இழந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மீள்வாக்குப்பதிவு நடாத்தப்படும் வரைக்கும் நடைபெற்றுமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவு வெளியிடப்படமாட்டாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக