திங்கள், 22 மார்ச், 2010

போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்குழு அமைப்பதில் பான் கீ மூன் உறுதி


சிறீலங்காவில் கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் துணையுடன் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் திட்டமிட்டுள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்த விசாரணைக்குழுவை அமைப்பது தொடர்பில் தான் அழுத்தங்களை மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரை அண்மையில் சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்களை தான் புறக்கணிக்கப்போவதில்லை என பான் கீ மூன் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கிவருகின்ற போதும், சிறீலங்கா அரசு மீது காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நவநீதம்பிள்ளை பான் கீ மூனுக்கு அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இதனிடையே சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து தனக்கு ஆலோசனைகளை வழங்கும் குழுவை அமைப்பதில் பான் கீ மூன் தீவிரமாக உள்ளதாகவும், அந்த குழுவில் இடம்பெறும் நிபுணர்கள் குறித்து நவநீதம்பிள்ளையுடன் அவர் பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாகவும் ஐ.நாவின் இணைப்பு பேச்சாளர் பார்ஹான் ஹாக் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக