சனி, 24 ஏப்ரல், 2010

கர்ணனுக்கு அங்கதேசம் மனோ கணேசனுக்கு… எங்கே தேசம்!

கொடைக்குக் கர்ணன் என்றுதான் நாம் அறிந்துள்ளோம். அந்தக் கர்ணனுக்கே கொடை கொடுத்தவன் துரியோதனன். இராஜகுமாரர்களுக்கான வில்வித்தைப் போட்டியில் கர்ணனும் கலந்து கொள்கின்றான். போட்டியில் கலந்து கொள்ள வந்த இராஜ குமாரர்கள் அத்தனை பேரும் கர்ணனைப் பார்த்து தேரோட்டியின் மகன் என ஏளனம் செய்கின்றனர். இராஜகுமாரர்கள் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய வில்வித்தைப் போட்டியில் தேரோட்டியின் மகன் எங்ஙனம் பங்கேற்ற முடியும் என சர்ச்சை எழுகின்றது.கர்ணன் நாணிக்கோணி தலைகுனிந்து நிற்கிறான். அந்த நேரத்தில் சபை நடுவே எழுந்து கர்ணனை நான் இராஜகுமாரன் ஆக்குகின்றேன் என துரியோதனன் முழுங்குகின்றான். கர்ணனை இராஜகுமாரனாக்கினால் அவனுக்கு தேசம் எங்கே என்று வினா எழுகிறது.‘அங்கததேசம்’ என்று துரியோதனன் மொழி கின்றான். துரியோதனனின் மொழிதலோடு கர்ணனுக்கு முடிசூட்டப்படுகிறது. இராஜகுமாரன் ஆனான் கர்ணன். இங்குதான் துரியோதனனின் உயர்ந்த குணம் வெளிப்படுகின்றது. கொடை வள்ளலான கர்ணனுக்கே கொடை கொடுத்தவன் அல்லவா துரியோதனன். அவன் கொடை கொடுக்காவிடில் பார்த்த சாரதிக்கு கொடை கொடுப்பதற்குக் கூட கர்ணன் இருந்திருக்க மாட்டான். எனவே கொடையில் சிறந்தவன் யாரென்றால் துரியோதனன் என்றுதான் கூற வேண்டும். இதை நாம் கூறினால் இதெல்லாம் இப்போது எதற்கு என்று நீங்கள் நிச்சயம் கேட்பீர்கள். இங்குதான் பிரச்சினையே ஆரம்பமாகின்றது. மனோ கணேசன் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி அவரின் காலை வாரிவிட்டது.தமிழ் மக்களுக்காக துணிந்து குரல் கொடுத்தவர் மனோகணேசன். இந்த உண்மையை தமிழ் மக்கள் மறத்தல் ஆகாது. மனோகணேசன் நாடாளுமன்றம் சென்றால் மச்ச இயந்திரத்தை வீழ்த்தும் வல்லமை தமிழருக்குக் கிடைக்கும். எங்கே மனோ கணேசனுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் ‘அங்கததேசத்தை’ கொடுக்குமா என்று பார்ப்போம். கொடுத்தால் நன்மை நமக்கே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக