வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

உறவுகளைச் சந்திப்பதில் சிக்கல்கள்!!!!.....


கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு சென்றுவருவதில் அவர்களது குடும்ப உறவினர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இராணுவத்தினரிடம் சரணடைந்த 11 ஆயிரம் பேரில். எண்ணாயிரம் பேர் வரையில் வவுனியா, திருகோணமலை, பொலநறுவை போன்ற பல் வேறுமட்டங்களில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புனர் வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.


இவர்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சியளிப்பதற்காகவே இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. யுத்தம் முடிவடைந்து ஒருவருடத்திற்கு மேற்பட்ட நிலையில் இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருப்பவர்களை குறிப்பாக பொலனறுவை மாவட்டத்திற்கு சென்று பார்ப்பதில் அவர்களின் குடும்ப உறவினர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.


போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வின் விளைவாக அனைத்தையும் இழந்து நிர்க்கதியான நிலையில் அரசாங்கம் வழங்குகின்ற நிவாரண உதவிகளில் மாத்திரம் தங்கியிருக்கின்ற இந்தக் குடும்பங்கள் பெருமளவு நிதி செலவு, 5 மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து தமது கணவன்மாரை, அல்லது மகன்மாரை பார்க்க வேண்டியிருக்கிறது. இளம் மனைவியர் தம்முடன் சிறு குழந்தைகளையும் அழைத்துச்செல்லவேண்டிய நிர்ப்பந்தம்.


இந்த நிலையில் சர்வதேச செஞ்சிலுவைக்குழு, மற்றும் மனித உரிமைகளுக்கான இல்லம் போன்ற அமைப்புக்கள் இவர்களின் பிரயாணத் தேவைக்காக உதவ முன்வந்துள்ள போதிலும் அவர்களின் தேவை அளப்பரியதாக இருக்கின்றது. இந்த நிலையில் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள மூன்று புனர்வாழ்வு நிலையங்களுக்கும், தாங்கள் அடிக்கடி சென்று அவர்களைப் பார்ப்பதற்கான உதவிகளைச் செய்வதைவிட அவர்களை விடுதலை செய்வதால் தங்களுக்கும் தமது குடும்பங்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று கூறுகின்றார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக