வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

காணி பிடிக்கிறார் கெளதம புத்தர் உறுதிக்காரச் சிவன் எங்கே?........

வடக்கில் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் நடக்கின்றதோ இல்லையோ கெளதம புத்தபிரான் மட்டும் வடக்கில் அதிக காணிகளைக் கைப்பற்றி விட்டார்.


வீதிகள், குளங்கள், அரசமரங்கள், கடற் கரையோரங்கள் எங்கும் கெளதம புத்தபிரானின் குடியிருப்புகள் எதற்காக இப்படி? அறத்தின் வழியில் அகிம்சையின் பாதையில் மனுக்குலத்தை வழிப்படுத்த போதித்த கெளதம புத்தபிரானுக்கு சிவனின் குடும்பம் குடியிருக்கும் வடக்கில் ஏன் இத்தனை விருப்பு?


ஓ! தன் பக்தர்கள் வடபுலத்தில் குடியேற்றப் படுவதற்கு முன்னதாக தான் குடியிருக்க வேண்டும் என்பதற்காகவா?பரவாயில்லை, நிலையில்லாத இந்த உலகில் இவை மட்டும் நிலையாகிவிடுமா என்ன? இவையெல்லாம் தற்காலக் கவலைகள் தான். யுத்தத்தில் தோற்றவனைவிட வென்றவனுக்கே அதிக கவலை என்று கூறியவர் கெளதம புத்தபிரான்.


எனவே அவரின் காணி சுவீகரிப்புக் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனா லும் சொந்தக்காணிக்காரச் சிவன் குடும்பம் தம் வீட்டில் குடியிருக்க முடியாமல் இருப்பதை நினைக்கும் போதுதான் மனம் வெதும்புகின்றது.எத்தனையோ சைவாலயங்கள் யுத்தத்தால் உடைந்து சிதைந்து போயுள்ளன. பல ஆலயங்கள் கவனிப்பாரற்று பூசை வழிபாடுகள் ஏதும் அற்று இருண்டு போயுள்ளன.


நிலைமை இதுவாக இருக்கும் போது அவசர அவசரமாக கெளதம புத்தபிரான் காணி பிடிப்பது அவ்வளவு நல்லதல்ல. இந்து மதத்திற்கும் பெளத்தத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்புண்டு.இந்து மதக்கடவுள்கள் அதாவது சிவனின் குடும்ப உறுப்பினர்கள் பலர் விகாரைகளில் வைத்து வழிபாடாற்றப்படுகின்றனர்.


அதேநேரம் சமய கிரியை முறைகளிலும், அனுஷ்டானங்களிலும், சிற்ப சாஸ்திரங்களிலும் இந்து-பெளத்த கொள்கைகள் ஒத்துப் போவதை அவதானிக்க முடியும்.நிலைமை இதுவாக இருக்கும் போது வட புலத்தில் அதிலும் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாக வன்னிப் பெருநிலப்பரப்பிலும், யாழ். குடாநாட்டிலும் புத்தபிரானை பிரதிஷ்டை செய்வதென்பது உள்நோக்கம் கொண்டதாகும்.


எனவே சமயங்கள் கூறும் அறவழிகளைப் பின் பற்றுவதே மனித குலம் மேன்மையுறுவதற்கான வழியாகும். இதைவிடுத்து சமயத்தால், இனத்தால் மக்களை பிரித்து விரோதங்களை தோற்றுவிப்பதை தெய்வங்கள் ஒரு போதும் ஏற்பதும் இல்லை; அவை நிலைக்க விடுவதும் இல்லை.


ஆகையால் இலங்கை திருநாட்டில் அவரவர் வாழ்வியல் கோலங்களைப் பின்பற்றவும் தத்தம் சமய விழுமியங்களைத் தாம் வாழும் இடங்களில் நிலைநிறுத்தவும் கூடிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இல்லையேல் பிரதிஷ்டைகளுக்கு தனியான பாதுகாப்பு அமைப்புகள் தேவையானவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக