சனி, 3 ஏப்ரல், 2010


நமது தேசிய தலைவர் வரலாறு என் வழிகாட்டி என்று அடிக்கடி குறிப்பிடுவார். அவரின் அடிப்படை தத்துவங்களில் இதுதான் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இயற்கையை தோழனாக பார்த்தார். வரலாற்றை வழிகாட்டியாக துணை கொண்டார். எந்த ஒரு நிகழ்கால நடவடிக்கையும் கடந்த காலத்தின் நிகழ்வுகளிலிருந்து கற்றுக் கொண்டவையாக இருக்க வேண்டும். அதுதான் நம்மை சரியான வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். இழப்புகள் என்பது கால சுழற்சியின் கட்டாயம். எதையுமே இழக்காமல், எதையுமே பெற முடியாது. ஒன்றை இழப்பதின் மூலம்தான் மற்றொன்றை பெற முடியும். ஆகவே, இழப்பு என்பது நம்மை அச்சமூட்டுவதற்குப் பதிலாக, நம்மை அது வழிநடத்த வேண்டும். அதிலிருந்து கற்றப் பாடத்தை நாம் உள்வாங்கிக் கொண்டு, நமது நகர்வை மீண்டும் துள்ளியமாக தீர்மானமாக சிதைவு ஏற்படாமல் எச்சரிக்கையோடு, ஆனால், கொண்ட இலக்கை அடைவதற்கு பயன்படுத்தவேண்டும். ஆகவே நாம், வறண்ட காலத்தில் இருக்கிறோம் என்கிற மனப்போக்கிலிருந்து மாறி, நாம் வசந்த காலத்தை நோக்கி பயணிக்கிறோம் என்கின்ற உளவியல் கோட்பாட்டை இந்த நேரத்தில் தமிழ் உறவுகள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு என்று ஒன்று இருந்தும்கூட நாம், இந்தியாவின் காலணியாக அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதால், தமிழர்களின் உரிமை குறித்து பேசுவது, தமிழரின் வாழ்வை நேசிப்பது, தமிழர்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்திப் பிடிப்பது, இந்திய ஏகாதிபத்திய சட்டத்தின்படி குற்றமாக கருதப்படுகிறது. அது, நமது நாட்டை துண்டாடுவதற்கான ஒரு செயல் என்று பேசுவதோடு, பிரிவினைவாதம் என்கின்ற ஒரு வார்த்தையை தேசியவாதிகள் தவளையைப் போல் கத்தத் தொடங்கிவிடுகிறார்கள். தேசியங்கள் என்பது ஒரு தேசிய இனத்தை ஒடுக்குவதிலிருந்து துவங்குவது கிடையாது. மாறாக, அது வேறொரு தேசிய இனத்தை உயர்த்திப் பிடிப்பதிலிருந்தே உயர்வு பெறுகிறது. ஒரு தேசிய அடையாளத்தின் தன்மையை அதன் இறையாண்மையை ஒடுக்கிவிட்டு, பொதுவான ஒரு தேசிய அடையாளத்தை அறையலாம் என்று நினைப்பது அடக்குமுறை மட்டுமல்ல, அது அரசியல் ரீதியாக ஒரு எழுச்சியை ஒடுக்கப்பட்ட தேசிய இனத்திலிருந்து உண்டாக்கும் என்பதை வரலாறு பலமுறை நமக்கு சொல்லித் தந்திருக்கிறது. வரலாற்றின் வழிகாட்டுதல் படியே நமது போராட்ட வாழ்வும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த காலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை நாம் கூர்ந்து பார்க்கும்போது, தமிழீழத்தின் உறுதியான செயல்பாடு நிச்சயமாகிவிட்டது. தமிழீழ அரசு அமைவதை உலக ஆதிக்கத்தாலோ, அல்லது நடைமுறை அடக்குமுறையாலோ அணைத்துப் போட முடியாது என்பதே உண்மை. கடந்தகால போர் நிறுத்தப்பட்டதற்கு நமக்கு வரலாறு காட்டிய வழிதான் காரணம். தம்மை சுற்றி எதிரிகள் ஒரேநேரத்தில் சூழ்ந்திருக்கும்போது, அவர்களை ஒரேநேரத்தில் எதிர்த்துப் போரிடுவதென்பது முட்டாள் தனம் மட்டுமல்ல, அது மீண்டும் நம்மை அடிமை தனத்திற்கே அழைத்துச் செல்லும் என்பதை நமது தேசிய தலைமை உணர்ந்திருந்த காரணத்தால், அந்த போரை தவிர்த்தார். ஒருமுறை வியட்நாமிய அதிபர் கொரில்லா யுத்தத்தில் வழிகாட்டியான தோழர் ஹோ சி மின்னிடம் சகத்தோழர் ஒருவர் மிகக் கடுமையாக கேள்வி ஒன்றை முன் நிறுத்தினார். எவ்வளவு காலத்திற்குத்தான் நாம் இந்த கொள்ளைக்காரர்களை பொறுத்துக் கொண்டிருப்பது? நீங்கள் உத்தரவிடுங்கள் தோழர். அவர்களை நாங்கள் முற்றாக அழித்துவிடுகிறோம் என்றபோது, ஹோ சி மின் ஒரு புன்னகை சிந்தினார். பின்னர் அவர் கீழ்க்கண்டவாறு அந்த தோழருக்கு பதிலுரைத்தார். இந்த அறையினுள் எலி ஒன்று நுழைந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? அதன்மீது கல் எறிவீர்களா? அல்லது அதை பிடிக்க முயற்சி செய்வீர்களா? என்று கேட்டார். அந்த தோழர் அறைக்குள் கல்லெறிவது முட்டாள்தனம் என்றார். அதற்கு தோழர் ஹோ சி மின் சொன்னார், அரசியலிலும் அப்படிதான். எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். ஒருசிறு துரும்பை அசைத்தால் ஒரு காடே அதிரும் என்றார். இன்று தமிழீழத்திற்குள் புகுந்துவிட்ட சிங்கள எலிகளைக்கூட நாம் கருவி கொண்டு துரத்தி அடிக்க முடியும். ஆனால் அதை பிடிப்பதற்கான காலத்தையே நமது தேசிய தலைமை முடிவு செய்திருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு நமது தேசிய தலைவரின் நடைமுறை வாழ்வில் எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது. நமது தேசிய தலைவரின் முடிவெடுப்புத் திறன் எவ்வளவு தொலைநோக்கோடு இருந்திருக்கிறது என்பதை கடந்தகால போர் நிறுத்தத்தில் அவர்கள் செய்த நடைமுறை செயல்களிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவேளை உணர்ச்சி வசப்பட்டு, நமது தேசியப்படை தமிழீழத்தைத் தவிர்த்து, சிங்கள மக்களின்மீது தாக்குதல் நடத்தியிருக்குமேயானால், இன்று உலகளவில் தமிழீழத்திற்கு கிடைத்துவரும் ஆதரவுக்கு சிதைவு ஏற்பட்டிருக்கும். இன்று உலக நாடுகள் அங்கே நடந்தது இனப்படுகொலை என்று அறிவிக்கின்றன. நடைபெற்றது இன விடுதலைக்கான போராட்டம் என்று அறியத் தொடங்கி இருக்கின்றன. நமது தேசிய தலைவரின் அரசியல் முதிர்ச்சி, சரியான திட்டமிடல், இந்தகால அரசியலின் தேவையை இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்குகிறது. தமிழீழ மக்கள் விடுதலையோடு வாழ்வதற்காக தம்மை இழக்கவும் தயாராக இருக்கிறார்கள். உடல் மற்றும் உளவியல் ரீதியாக அவர்கள் இன்று ஒன்றுதிரண்டு போராட முடிவு செய்திருக்கிறார்கள். அதற்காக தமது உயிரையும் உடமைகளையும் இழப்பதற்கு மிகவும் விருப்பத்தோடு களம் கண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வு ஏற்பட அல்லது இந்த உணர்வு ஏற்பட ஒரேஒரு காரணம்தான் இருக்கிறது, அது போர்க்களத்திலே தேசிய தலைவர் எடுத்த அரசியல் முடிவுதான். அந்த முடிவே இன்று உலகத்தை ஒன்றிணைத்திருக்கிறது. சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு எதிரான அணிச்சேர்ப்பை உறுதி செய்திருக்கிறது. எந்த நிலையிலும் தமிழீழம் வீழ்ந்து விடாமல் இருக்க, அந்த நகர்வே நமக்கு துணைபுரிந்தது. தோழர் லெனின் அடிக்கடி ஒரு வார்த்தையைச் சொல்லுவார். ஆயுத எழுச்சி என்பது ஒரு கலை என. ஆகவே, அந்த கலையை கையாளும் விதத்தை நம் தேசிய தலைவர் நன்கு அறிந்திருந்தார். தேவை ஏற்பட்டபோது அந்த கலையை அவர் சிறப்பாக பயன்படுத்தினார். தேவை இல்லாதபோது அதை மிக நேர்த்தியாக நிறுத்தி வைத்தார். காரணம், அவசரம் காட்டுவதற்கோ, ஆத்திரப்படுவதற்கோ ஆயுதக்கலை என்பது சாதாரணமானது கிடையாது. காரணம் அதில் எவ்வளவு வெற்றி கிட்டுமோ அதே அளவிற்கு ஆபத்தும் இருக்கிறது என்பதை மிக சரியாக தேசிய தலைவர் வரலாற்றிலிருந்து கற்றுக் கொண்டதால் தமது மக்களைவிட மேலானது ஒன்றுமில்லை. வெறும் கௌரவத்திற்காக தமது மக்களை இழக்க தயாராக இல்லை என்பதை அவர் நிகழ்த்திக் காட்டினார். ஆயுத எழுச்சிக்கான சூழல் மீண்டுமாய் ஏற்பட வேண்டுமென்றால் அது தேசிய ராணுவத்தை கடந்து, மக்கள் ராணுவமாக மாற்றப்படும்போது கட்டாயமாக்கப்படும் என்பதை பல்வேறு வரலாற்று ஆவணங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன. ஆகவே, இப்போது நாம் கருவி களத்திலிருந்து சற்று திரும்பி, அரசியல் களத்திற்கு வந்திருக்கின்றோம். உலகெங்கும் நமது அரசியல் தன்மைகளை நிலைநிறுத்த, நமது அரசியல் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள, தமிழ் தேசிய அடையாளத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், தனக்கான விடுதலையை நாம் பெற்றுக் கொள்வதற்கு வெறும் சாதாரண போர் முறைகளோடு நமது போராட்டம் நின்றுவிடக் கூடாது. அதைக்கடந்து மக்கள் எழுச்சியை உண்டாக்க வேண்டும். நாடு தழுவிய கிளர்ச்சியை செய்வதற்கு சரியான பரப்புரை கட்டமைப்புகளை நாம் படைக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே ஒரு சிறிய நாடு, குறைந்த மக்கள் தொகை கொண்ட ஒரு தேசிய இனம், பலம் பொருந்திய ராணுவத்தை எதிர்த்து வெற்றியடைய முடியும் என்பதை நமது தேசிய தலைமை சரியாக அறிந்த காரணத்தினால் இப்பொழுது தமிழீழத்தை சர்வதேச அளவில் அமைப்பதற்கான திட்டமிடல் மிக சிறப்பாக தொடங்கியிருக்கிறது. இந்த நடைமுறை செயல்களின் மூலமே தமிழீழ குடியரசிற்கான சாத்தியங்கள் மேலும் அதிகரிக்க முடியும். நமக்கான விடுதலை என்பது, தானாக நிகழப் போவதில்லை. அதை போராடித்தான் பெறவேண்டும் என்பதை நமது உறவுகள் உணர வேண்டும். எந்த நிலையிலும் போராட்டம் இல்லாத வெற்றி நிலைப்பது கிடையாது. நாம் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற போராட்டங்கள் கிடைத்த படிப்பினைகளை வருங்கால போராட்டத்திற்கு செம்மையாக பயன்படுத்த வேண்டும். நமக்கான விடுதலைக்கு நாம் போராடுவதற்கு மனரீதியாக நாம் பக்குவப்பட வேண்டும். எமது தாய்நாடு எந்த நிலையிலும், வேறொருவன் கையில் அடிமையாக இருப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்கின்ற உணர்வு, தமிழ் உறவுகள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். இந்த மனநிலையோடு நாம் களத்திற்கு வரும்போது, நமது வெற்றி தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். இரத்தக் கரை படிந்த இனவெறியர்கள் நம்மைப் பார்த்து கோரை பற்களில் வழியும் குருதி கரையோடு சிரிக்கலாம். நமது இன ஒடுக்குமுறைக்கெதிரான சமருக்கு துரோகம் செய்த தமிழ் உறவுகளே நம்மைப் பார்த்து நகைக்கலாம். ஆனாலும் அதையும்தாண்டி நமது வெற்றி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நமது வெற்றியின் தொடக்கம் பக்கத்தில் வந்துவிட்டது. இனி நாம் செய்ய வேண்டியது ஐந்து அடிப்படை கட்டமைப்புகளை. ஒன்று, நமது தேசிய அளவிலான ஒடுக்குமுறைக்கெதிரான எதிர்ப்பை முன்னிருத்துவது. இரண்டு, கடந்த காலத்தில் கடும் துயருக்கு உள்ளான நமது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. மூன்று, நமக்கான விடுதலையை வென்றெடுக்க நாமே மக்கள் குழுவை உருவாக்க, தேசிய தலைமையோடு இணக்கம் காட்டுவது. நான்கு, உலக நாடுகளில் உள்ள மக்களோடு இணைந்து நமது அடிமையின் நிலையிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் போராட்டத் தளத்தில்தான் இதுவரை நாம் செயல்பட்டோம் என்பதை வலியுறுத்துவது. அவர்களை நமது களத்திற்கு துணைக்கு அழைப்பது. ஐந்து, தேசிய தலைமையின் வழிகாட்டுதலை முழுமையாக ஏற்று அதன்படி நடப்பது. இவைகளின் மூலம் நமது வெற்றியை நம்மால் உறுதியாக தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்கான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது நமது கட்டாய கடமை. இதைநாம் மறக்கக்கூடாது. இது நமது தேசிய தலைவரின் தத்துவத்திலிருந்து பெற்றுக் கொண்ட படிப்பினைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக