புதன், 28 ஏப்ரல், 2010

இளம் பெண் கடத்தல்; தம்பதியர் கைது

கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை பொலிகண்டியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் துன்னாலையிலுள்ள உறவினர் வீட்டிற்கு மிதிவண்டியில் சென்றிருக்கின்றார். அப்போது வெள்ளை வானில் சென்ற சிலர் பெண்ணை மிதிவண்டியுடன் கடத்திச் சென்று அவரைக் கொல்வதற்காக கழுத்தை நெரித்திருக்கின்றனர். சற்று நேரத்தில் குறித்த பெண் மயக்கம் அடைந்துள்ளார். அவர் இறந்து விட்டதாக கருதிய கடத்தல்காரர்கள் அவரை அருகில் இருந்த புதருக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த பெண் மறுநாள் காலையில் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று நடந்ததைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நெல்லியடி பொலிசில் முறையிடப்பட்டுள்ளது. நெல்லியடிப் பொலிஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் இளம்பெண்ணை விசாரணை செய்து, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கரவெட்டி இராஜ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றை அதிகாலை 4 மணிக்கு சுற்றிவளைத்தனர். அங்கு பெண்ணின் சைக்கிளும் அவரது நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. அங்கிருந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்த பொலிஸார், விசாரணை செய்த பின்னர் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரணை செய்த பருத்தித்துறை நீதிவான் திருமதி ஜோய் மகாதேவா, சந்தேக நபர்கள் இருவரையும் அடுத்தமாதம் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு, பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறும் பொலிஸாரைப் பணித்தார். இளம் பெண் கடத்தல் அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்பதும் தனிப்பட்ட விவகாரம் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தகைய சம்பவம் ஏதும் இடம்பெற்றால் உடன் பொலிஸாருக்கு அல்லது நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக