புதன், 28 ஏப்ரல், 2010

நல்லூர் வளாகத்தில் சங்கிலியன் மன்னனின் நிலத்தில் நட்சத்திர விடுதி

இந்துக்கள் புனிதமாகப் போற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில், யாழ்ப்பாணத்தின் இறுதி மன்னனான சங்கிலயனின் நினைவாகவுள்ள காணியில் 80 அறைகள் கொண்ட நட்சத்திர விடுதியொன்றை 400 மில்லியன் ரூபா செலவில் அமைக்க சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு யாழ் வர்த்தகர் சங்கமும், பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற போதிலும், துணைப்படை ஈ.பி.டி.பி குழுவும், அதன் சார்பில் யாழ் நகரசபைத் தலைவராகவுள்ள யோகேஸ்வரி பற்குணராஜாவும் அரசிற்கு வழமைபோன்று துணைபோவதுடன், அதன் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி சங்கதிக்குக் கருத்துரைத்த யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதியொருவர், நல்லூர் புனித தலத்தில், அதுவும் சங்கிலி மன்னனுக்குச் சொந்தமான நிலத்திலும் இவ்வாறான நட்சத்திர விடுதி கட்டப்பட இருப்பதை தாம் எதிர்ப்பதுடன், வாழ்வாதார மற்றும் பொருண்மியப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள யாழ் மக்களுக்கு 400 மில்லியன் ரூபா செலவில் விடுதி தேவையில்லை எனவும் கூறினார். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதிகளில் மொத்தம் 150 அறைகள் மட்டுமே தற்பொழுது இருப்பதால், தென்னிலங்கை சிங்கள மக்களிற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த விடுதியை அமைத்து, அதன் மூலம் இலாபம் பெற சிறீலங்கா அரசு முனைவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அரசின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ள, துணைப்படை ஈ.பி.டி.பி குழுவும், அதன் சார்பில் யாழ் நகரசபைத் தலைவராகவுள்ள யோகேஸ்வரி பற்குணராஜாவும், இந்த விடுதி நல்லூர் ஆலயத்தில் இருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் கருத்துரைத்த யோகேஸ்வரி, குறிப்பிட்ட விடுதியை தமது அரசு சங்கிலியன் மன்னனின் காணியில் கட்ட முனையவில்லை எனவும், போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து தனியாருக்குச் சொந்தமாக இருந்த நிலத்திலேயே கட்டப்பட இருப்பதாகவும் வியாக்கியானம் அளித்துள்ளார். தமது அரசின் இந்தத் திட்டம் பற்றி உள்ளுர் தலைவர்களுடன் எதிர்வரும் மே மாதம் 10ஆம் நாள் பேச்சு நடத்தப்படும் எனவும் யோகேஸ்வரி மேலும் கூறியிருக்கின்றார். சிறீலங்கா அரசு மற்றும் துணைப்படை ஈ.பி.டி.பி குழுவின் இந்த முயற்சிக்கு எதிராக அனைவரும் இணணைந்து குரல்கொடுக்க வேண்டும் என குறிப்பிட்ட வர்த்த சங்கப் பிரதிநிதி கேட்டுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக