செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

புலிகளின் ஊடுருவல் இல்லாத தமிழ் கூட்டமைப்பை உருவாக்க இந்தியா வியூகம்,

.விடுதலைப்புலிகளோ அந்த அமைப்புக்கு தீவிரமாக ஆதரவளிக்கும் சக்திகளோ பங்காளிகளாக இல்லாத தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிறிலங்காவின் அரசியலில் உருவாக்கி அந்த கட்சியின் ஊடாக தமிழர் விவகாரத்தில் - விட்டுப்போன - தனது ஆதிக்கத்தை உள்நுழைப்பதற்கு இந்தியாவின் மத்திய அரசு காய்நகர்த்திவருகின்றது என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவில் போருக்கு பின்னரான அரசியல் நிலைவரங்களை ஆழமாக கண்காணித்துவரும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்கா விவகாரத்தில் தனது ஆதிகத்தை நுழைப்பதற்கு தமிழர் விவகாரம் ஒன்றே தற்போதைக்கு இந்தியாவுக்கு மீதமாக உள்ள ஒரே ஒரு துருப்புச்சீட்டு. இந்த விவகாரத்தை சிறிலங்கா அரசுடன் முரண்படாமல் கையாளுவதற்கு சிறிலங்காவில் அரசியல் அதிகாரம் படைத்த தமிழர் சக்தி ஒன்று இந்தியாவுக்கு அவசர தேவையாக உள்ளது. தனது இந்த தேவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரே சரியான தெரிவாக இருக்கமுடியும் இந்தியா கருதுகிறது. அப்படிப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த அரசதலைவர் தேர்தலில் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தபோது, தனது திட்டம் கைமீறிப்போய்விட்டதாக இந்தியா பீதியுற்றபோதும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் வசமான களமாக தற்போது வந்து வாய்த்திருக்கிறது. இந்த தேர்தலில் தமது ஆளுகைக்குள் செயற்படக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்குவதன்மூலம் மட்டுமே சிறிலங்காவில் தனது ஏனைய திட்டங்களை முன்னகர்த்த முடியும் என்று இந்தியா நம்புகிறது. அவ்வாறு தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரக்கூடிய கூட்டமைப்பினில், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தீவிர சக்திகள் இடம்பெறுமாயின், அது கூட்டமைப்பின் ஊடாக முன்னகர்த்த உத்தேசித்துள்ள எதிர்கால முயற்சிகளுக்கு பாரிய தடங்கலாக அமையும் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது. இதன் ஒரு கட்டமாகவே, விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர்களான கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் கூட்டமைப்பினுள் நிச்சயம் இடம்பெறக்கூடாது என்பதில் இந்தியா விடாப்பிடியாக நிற்கிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு தமிழ் காங்கிரஸ் பட்டியலில் போட்டியிடுவதற்கு தாம் இடமளிப்பதாக கட்சியின் செயலர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தபோது, அதற்கும் தமிழ் கூட்டமைப்பின் தலைமை ஒப்புதல் அளிக்காததிலிருந்து, கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலரை வெளியகற்றவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைமை எவ்வளவுதூரம் உறுதியாக நிற்கிறது என்பது புலனாகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பினை இந்தியாவின் மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துவிட்டால், ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழ்நாட்டின் அழுத்தத்துக்கு உள்ளாகவேண்டிய தேவையில்லை என்று சோனியா அரசு ஆழமாக நம்புகிறது. கருணாநிதி தலைமையிலான மாநில அரசு தனக்கு சார்பாக என்றென்றும் இருந்துகொள்ளும் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கு உள்ளபோதும், தெலுங்கானாவில் தற்போது தனிமானிலமாக அமைக்கக்கோரி மேற்கொள்ளப்படுகின்றன மக்கள் கிளர்ச்சி போல எனையா மாநிலங்களிலும் வேறு விடயங்களில் தலைதூக்குமா என்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, எந்த ஒரு விடயத்திலும் மாநில அரசுகள் மத்திய அரசினை பணயக்கைதியாக வைத்திருக்கக்கூடிய - சாத்தியமான - விடயங்களை விட்டுவைக்காமல் அவற்றை தானே நேரடியாக அணுகவேண்டும் என்பதில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் தெளிவாக உள்ளார்கள். இதன் ஒரு நகர்வாகவே, சிறிலங்கா அரசியலையும் தமிழகத்திலிருந்து தனிமைப்படுத்தும் ஒரு நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் அதனை தான் நினைத்ததுபோல வைத்திருக்கவும் இந்தியா தீர்க்கமான முடிவுடன் காய்நகர்த்திவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக