செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சம்பந்தன் டக்ளசுடன் கூட்டு.......................

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடிப்படை கொள்கைகளை, கோட்பாடுகளை விட்டு கூட்டமைப்பு விலகுவதாக கூறியுள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தவிர பெரும்பாலானோர் கருத்தும் அதுவாக பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தன் கனேடிய வானொலிக்கு அளித்த உரையில் மூன்று முக்கிய விடயங்களை குறிப்பிட்டார். முதலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்றார். இரண்டாவது சுலோகம் எழுப்புபவர்களை வேட்பாளராக நிறுத்த முடியாது என கூறினார். அடுத்ததாக படித்தவர்கள் பண்பானவர்கள் செயற்திறன் உடையவர்களை, நம்பிக்கையுடையவர்களை புதிய வேட்பாளராக நிறுத்த போவதாக கூறினார். இவரது முதலாவது கருத்தான அடிப்படை உரிமைகளை விட்டு போகவில்லை என்று எதனை கூறுகின்றார். ஒற்றையாட்சியின் கீழ் தீர்வா? மா நில சுய ஆட்சியா அல்லது வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழ தாயக நாட்டினையா? இவருக்கு எதிலுமே தெளிவு இல்லை அல்லது தேர்தலிற்காக எதனையும் கூறி நொந்து போயிருக்கும் மக்களுக்கு ஏற்றால் போல் கதைத்து தேர்தலில் வெல்லவேண்டும் என்பதே நோக்கம். அதாவது இலங்கை அரசாங்கமோ அன்றி இந்திய அரசாங்கமோ வடக்கு கிழக்கை இணைக்கவோ அல்லது 13 வது சீர்திருத்தத்திற்கு மேலாக எதனையும் வழங்கவோ தயாராக இல்லை. இதனை மஹிந்த உறுதியாக கூறியுள்ளார். ஆகவே இதற்கு மேல் இலங்கை பாராளுமன்றில் எதனையாவது பெற முடியும் என மக்களுக்கு உறுதி மொழி கூறுவதில் எந்தவிதமான நியாயமும் இல்லை. ஆனால் ஆட்சிக்கு வரும் அரசுடன் மக்களுக்கான அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்போம் என கூறுவது ஒரு நியாயப்பாடாக இருந்தாலும் அதனை கூட கூட்டமைப்பினால் தீர்க்கமுடியாது மாறாக அரசாங்கத்திடம் தம்மை காப்பாற்றி கொள்வதற்காக எதனையாவது செய்ய வேண்டும். நேற்று குச்சவெளியில் 400 குடும்பங்களை அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என கூறியபோது. சம்பந்தன் என்ன செய்தார். உடனடியாக பசில் இராச பக்சவிடம் தொடர்பு கொண்டு தயவு செய்து தேர்தலிற்கு பின்னர் அவர்களை வெளியேற்றுங்கள் என கூறியுள்ளார். நிறுத்துங்கள் என ஒரு வார்த்தை கூறவில்லை. இதில் இருந்து அவரது அரசியல் சாணக்கியம் எப்படி இருக்கின்றது என கூறமுடியும். ஆகவே மக்களை வைத்து தனக்கு விருப்பம் இல்லாதவர்களை வெளியேற்றுவதும் மக்களின் துன்பங்களை வைத்து தேர்தலில் எவ்வாறு வெல்லலாம் என திட்டமிடுவதும் அரசியல் சாணக்கியம் அல்ல அரசியல் போலித்தனம் என்றே கூற வேண்டும். 2004 ஆம் ஆண்டில் இவர் மக்களிடம் வாக்குறுதி அளித்து அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தமிழர்களிற்கான ஒற்றுமையினை வலியுறுத்தி , விடுதலைக்கான போராட்டத்திற்கு ஜன நாயக ரீதியான ஆதரவு திரட்டும் முகமாகவே தேர்தலில் போட்டியிட வைத்தனர். 1000 மேற்பட்ட அரசியல் போராளிகளும் மக்களும் தமிழர் தாயகத்தில் வீடு வீடாக சென்றுதான் கூட்டமைப்புக்கு வாக்கு கேட்டார்கள். வாக்கு கேட்கும் போது எந்த ஒரு போராளியும் கூட்டமைப்பை பாராளுமன்றம் அனுப்புவதுஇலங்கை அரசாங்கம் எதுவும் தரும் என்பதற்காக அல்ல. அபிவிருத்திக்காக அல்ல எமது உரிமைகளுக்கான நியாயங்களை சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் ஜன நாயக ரீதியில் எடுத்து உரைப்பதற்காகவே என தெளிவாக கூறி வாக்கு கேட்டனர். மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் சம்பந்தன் வானொலியில் கூறும்போது என்ன சொல்கின்றார். கடந்த வருட தேர்தலில் மக்கள் வாக்களித்தார்கள் அதே மக்கள் தாம் ஏமாந்து போனதாகவும் தாம் தெரிவு செய்த பிரதி நிதிகள் வெறும் சுலோகங்களை சொன்னார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை என கூறியதாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். மறைமுகமாக கஜன் மற்றும் பத்மினி அவர்களின் நீக்கத்தினை நியாயப்படுத்தினார். இங்கு கேள்வி என்னவெனில் யாழ் உதயன் நிர்வாகமும் ஒரு சில யாழ் புத்திஜீவிகளும் மக்களின் ஒட்டுமொத்த கருத்தினை கூறமுடியாது. தவிர கடந்த தேர்தல் விடுதலைப்புலிகளின் ஆலோசனைப்படி அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்தது. அவர்களின் கருத்தின் படியே அனைவரும் நடந்தனர். தவிர யதார்த்தம் என்னவெனில் கோசங்களைத்தான் போடலாமே தவிர கூட்டமைப்பு எதனையும் செய்ய முடியாது. சரி அவர்கள் தான் கோசங்களை போட்டார்களே தவிர சம்பந்தன் அவர்கள் என்ன செய்தார். அவர் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை என்று எவ்வாறு குறிப்பிட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் குற்றம் சாட்ட முடியும். அவ்வாறு எனின் யாழ்ப்பாணம் சொலமன் சிறில் அவர்களும் கோசம் மட்டும் தான் போட்டார். ஏன் அவரை புதிய பட்டியலில் இருந்து நீக்கவில்லை. சரி எல்லாவற்றுக்கும் மேலாக மே மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர்தான் புலிகள் உங்களை ஒன்றும் செய்ய விடவில்லை என்றால் அதன் பின்னர் உங்கள் அரசியல் சாணக்கியத்தின் மூலம் மக்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்? சுலோகம் போடுகின்றவர்களை விடுத்து இராஜ தந்திரமாக கருமம் ஆற்றும் தலைவர் என உங்களை புகழ்பவர்களும் நீங்களும் இதுவரை முள்ளீவாய்க்காலிற்கு பின்னர் என்ன செய்தீர்கள்? ஆக ஒரு தடவை தடுப்பு முகாம்களுக்கு சென்றீர்கள் அதுவும் சம்பந்தனின் இராச தந்திரத்தினால் அல்ல மாறாக கிசோர், சிவாஜிலிங்கம் ஆகியோரின் முயற்சியினால் தான் சென்றீர்கள். தேசிய தலைவரின் தந்தையின் பூதவுடலை கூட எடுப்பதற்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை ஆனால் அது கூட கிசோர், சிவாஜி ஆக்யோரின் முயற்சியே. இதற்காக அவர்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோர்கள் என்ன செய்தார்கள் என்றால் சிவாஜி, கிசோர் ஆகியோரின் முயற்சியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தாமே எல்லாம் செய்ததாக வெள்ளை வேட்டியுடன் முன்னுக்கு நின்றார்கள். படம் பிடித்து பத்திரிகைகளிலும் போட்டார்கள். ஆனால் பின்னர் அவர்கள் மஹிந்தவுடன் சேர்ந்தார்கள் என பிரச்சாரம் செய்தீர்கள். அவர்கள் சேர்ந்தார்களோ இல்லையோ வேறு விடயம் ஆனால் அதனை சம்பந்தன் கூறுவதற்கு அருகதை இல்லை. ஏனெனில் அவரும் பல தடவை அரசாங்கத்தின் நலன்களை தனது குடும்பத்திற்காக பெற்றவர். தனது தாயின் இறப்பிற்கு இலங்கை அரசாங்கத்திடம் உலங்கு வானூர்தி பெற முடியும் என்றால். வவுனியாவில் 200 க்கு மேற்பட்ட முதியோர்கள் தடுப்பு முகாமில் இறந்த நிலையில் அவர்கள் யாரும் இல்லாத நிலையில் அனாதைகளாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டபோது ஆக குறைந்தது ஏன் அவர்களை பொறுப்பெடுத்திருக்க முடியாது. ஆகவே சம்பந்தன் நிலைமைக்கேற்ப ஆள் மாறாட்டம் செய்வதனை நிறுத்தவேண்டும். ஒப்பீட்டு ரீதியாக கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்களே பல தடவை மக்களை ஏமாற்றியுள்ளனர். வெறும் சுலோகங்கள் என்று கூறும் சம்பந்தன் வட்டுக்கோட்டை தீர்மானத்தினையும் அதனை கொண்டுவந்த அரசியல் தலைவர்களையும் எதிர்த்தோ அல்லது தூக்கி வீசியோ பேசுவாரா? அதுவும் மக்களால் வாக்கு மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதானே. தமிழ் மக்களின் தலைமை என்பது மக்களுக்கு தெளிவான கருத்துக்களை கூறி சரியான தீர்மானங்களை நிறைவேற்றி அவர்களை வழி நடாத்தி செல்வதாகும். சுயாதீனமாக மக்கள் வாக்களிப்பது வேறு, அடக்குமுறைகளுக்குள்ளும், நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும், தனி நபர்களின் செல்வாக்கு, அரச செல்வாக்கு ஆகியனவற்றுக்கு மத்தியிலும் மக்களுக்கு உண்மையினை சொல்லி அரசியலை நடாத்தவேண்டும். அதனை விடுத்து இக்கட்டான நிலையில் உள்ள மக்களுக்கு எதனை சொன்னால் மக்கள் ஏற்பார்கள் எதனை சொன்னால் மக்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று திட்டம் போட்டு தனது வெற்றியினையும், தனது இருப்பிற்காக மற்றவர்களை புறம் தள்ளுவது ஜன நாயகம் அல்ல. இந்தியா ஒரு வருடத்திற்கு தீர்வு தரும், இந்தியா வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்து தரும் என கூறுவதும் அதனை கஜேந்திரன், கஜன், பத்மினி ஆகியோர் எதிர்க்கின்றனர் என மக்களிடம் கூறினால் யாழ் மக்கள் என்ன செய்வார்கள் சம்பந்தன் கூறுவது நியாயம் என்றே சொல்வார்கள். ஆனால் உண்மை அப்படி அல்ல இந்தியா வடக்கு கிழக்கை இணைத்து தருவதாக கூறவும் இல்லை. ஒரு வருடத்திற்குள் தீர்வினை பெற்றுதரப்போவதும் இல்லை. ஆகவே பொய்களை கூறவேண்டாம் என்று கூறினால் குளப்பவாதிகளா? தவிர சிங்களவன் இலங்கை முழுவதும் சிங்கள பெளத்த நாடு என்று கூறும்போது ஒரு சில தமிழ் எம்.பிக்கள் அதனை மறுத்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று கூறுவதில் என்ன தவறு. அது வெறும் கோசம் என்றால் சம்பந்தனின் உண்மையான கோசம் என்ன? டக்ளசின் மத்தியில் கூட்டாட்சி மா நிலத்தில் சுய ஆட்சியா? அப்படி எனில் டக்ளசுடன் கூட்டு வைப்பதே பொருத்தமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக