செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சந்தி சிரிக்கும் அளவுக்கு தமிழர் அரசியல்,,,,

பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையினரின் ஒற்றுமையைக் கண்டு பிரமித்து அதன் காரணமாகவே இனப்பிரச்சினைக்கு ஒரு ஏற்கக்கூடிய தீர்வு ஏற்படுத்த வேண்டியதை இனியும் தட்டிக்கழிக்க முடியாது என முடிவுக்கு வருவார்கள் என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் இருந்தது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறான கூட்டமைப்பு உருவாவதற்கு அடி மட்டத்தில் சிந்தித்து செயற்பட்டு முதல் அத்திவாரக் கல்லை இட்டவர்கள் யார் என்று அந்தக் கூட்டமைப்பில் பங்கு பற்றியிருக்கும் கட்சிகளில் உள்ள எவருக்காவது தெரியுமா? ஏன்று கேட்டால் அது அவர்களுக்கே தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஒன்றிணைய ஆயத்தமாகவும் இருக்கவில்லை என்பதுவும் உண்மை. ஒரு இக்கட்டான நிலமையிலேயே ஒன்றிணைய ஒத்துக்கொண்டார்கள். ஏன்பதும் உண்மையே. கிழக்கில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன் வைத்து ஒற்றுமையைக் கட்டி எழுப்புவது கடினமான விடயம் என்பது வரலாறு கண்ட தெளிவான முடிவு. பொத்துவில் கனகரட்ணம் தொடக்கம் பின் இராஜதுரை, கருணா, பிள்ளையான் என்று இப்போது தங்கேஸ்வரி சிவநாதன், கிஷோர் என சுயநலம் கருதி அரசை ஆதரித்து குறிக்கோள்களைத் தூக்கி வீசியெறிந்து வந்திருக்கிறார்கள். கிஷோரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதம் யாருக்கும் தெரியாமலிருக்கலாம். ஆனால் வடக்கிலிருந்து அரசை ஆதரித்து நின்றவர்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாற்றம் பெற்று உஷாராகியுள்ளது. அதன் தலைவர் ஆனந்தசங்கரி இலக்கியம் பற்றி பேசி வருகின்றார். புளொட் தலைவர் மதில் பூனையாக செயற்படும் போது அவரைத் தங்கள் பக்கம் திருப்புவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு விவேகமில்லாது போயிற்று. மாநகரசபைத் தேர்தலினால் வீணைச்சின்னத்தை பறிகொடுத்து பின் ஜனாதிபதி தேர்தலில் உண்மையை விளங்கிக் கொண்ட ஈ.பி.டி.பி கட்சியினர் அரசை விட்டு விலக வெளிக்காட்டியது நாடகமாகியுள்ளது. என்று சொன்னாலும் அவர்களின் மனப்போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தது உண்மையே. அதைப் பயன்படுத்தி சுவிஸ்லாந்தில் ஏற்றுக்கொண்டதை செயற்படுத்தவும் கூட்டமைப்புக்கு முடியவில்லை. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் அவசியத்துக்கான எண்ணக்கருவையே சிதைத்துவிட்டது. இவ்வாறான கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் கூட்டமைப்பு இன்னும் மேலும் பலப்பட வேண்டும். என்ற மக்களின் எண்ணம் தவிடு பொடியாக்கப்பட்டதும் அல்லாமல் இருந்த ஒற்றுமையே சின்னாபின்னமாக்குமளவிற்கு நிலவரம் முற்றியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கையாலாகாத தன்மையினால் தமிழ்ப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கவுள்ளார்கள் என்பது வருத்தத்தைக் கொடுக்கின்றது. தந்திரோபாய அணுகுமுறையும் கொண்ட இலட்சியத்தில் பற்றுமில்லாததாலேயே இத் தேர்தல்களம் அசிங்கமான முகத்தை வெளிக்காட்டி நிற்கிறது. இவை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளாகும். தமிழ் மக்களிடையே ஒற்றுமை குலைவது அவர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தானே. சகல தமிழ்க் கட்சித் தலைமைகளும் தமிழ் மக்களின் வருங்கால நலனையிட்டு சிரத்தை கொள்ளாமல் தங்கள் தங்கள் கட்சிகளினதும் உறுப்பினர்களினதும் நலனை முன்னெடுப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக