வெள்ளி, 31 டிசம்பர், 2010

'சிலோன் போய் சிறிலங்கா வருகிறது'

இலங்கையில் பழைய காலனித்துவ கால பெயரான சிலோன் என்ற பெயரைக் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் சிறிலங்கா என்று பெயரை மாற்றிவைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இலங்கைக்கு சிறிலங்கா என்று பெயரிடப்பட்டு 39 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகள் 2011இல் முடிந்தவரை விரைவாக நடக்கும்.அனாவசியமான காலனித்துவ கால எச்ச சொச்சங்களை களைவோம் என்ற புதுவருட உறுதி மொழியாக இது மேற்கொள்ளப்படவிருக்கிறது.
சிலோன் என்ற விடயம் முற்றாக துறக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பரிந்துரைக்கமைவாக, ''சிலோன் எலக்ரிசிட்டி போர்டின்'' பெயரை மாற்றுவதற்கான விண்ணப்பம் ஒன்றை எரிசக்தி அமைச்சு அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளது.
இலங்கையின் சிலோன் என்ற பிரிட்டிஷ் காலனித்துவ பெயர் போர்த்துகீசரின் காலத்தில் இருந்து பெறப்பட்ட ஒன்றாகும். எலிசபத் மகாராணியார்தான் இலங்கையின் தலைவி என்ற நிலைமையை மாற்றி இலங்கையை குடியரசாக அறிவித்தபோது 1972இல் இந்தப் பெயரும் மாற்றப்பட்டது. புதிதாக இடப்பட்ட ''லங்கா'' என்ற பெயருக்கு ''சிறி'' என்ற கௌரவத்தைக் குறிக்கும் சொல்லும் அப்போது சேர்க்கப்பட்டது. இந்த லங்கா என்பது சிங்கள லங்கா மற்றும் தமிழின் இலங்கை என்பவற்றுக்கு நெருக்கமான சொல்லாக கருதப்படுகிறது. எப்படியிருந்த போதிலும் ''சிலோன் டீ'' என்ற பெயர் மாற்றப்படாது போல தெரிகிறது.இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான தேயிலைக்கு, அதனது தரத்தைக் குறிக்கும் முத்திரை தான் அந்த ''சிலோன் டீ'' என்ற பெயர் என்று அந்தத் தொழிற்துறை நம்புகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக