புதன், 2 பிப்ரவரி, 2011

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவர்

63ஆவது சுதந்திர தினத்தையொட்டி எதிர்வரும் 6ஆம் திகதி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விடுதலை செய்யப்படுவர் என்றும், இதற்கான விசேட வைபவம் வவுனியாவில் இடம்பெறும் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.இந்நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்ட 500 முன்னாள் போராளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் அண்மையில் வவுனியாவில் இடம்பெற்றது.
இவ்வைபவத்திற்கு சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருபவர்களில் ஒருதொகுதியினர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் சிங்களப் புத்தாண்டையொட்டியே விடுதலை செய்யப்படுவர் எனக் கூறியுள்ளார்.எது எப்படியிருப்பினும், முன்னாள் போராளிகள் தொடர்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் வெவ்வேறு  கருத்துக்களை தெரிவிப்பதால், புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவரும் முன்னாள் போராளிகளின் பெற்றோர்களும், உறவினர்களும் இதுதொடர்பில் விசனம் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் 4500 முன்னாள் போராளிகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் முன்னர் விடுதலை செய்யப்படுவரென நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது புனர்வாழ்வு ஆணையாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரச படையினரிடம் 11, 900 முன்னாள் போராளிகள் சரணடைந்தனர் என்றும், இவர்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் அரசு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக