சனி, 6 மார்ச், 2010

சிங்கள குடியேற்றங்களை தடுக்க மொடரேற்றர்ஸ் முன்வரவேண்டும்?

தற்போது விடுதலைப்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலையில் அவர்களின் ஆயுத போராட்டம் பின்னகர்த்தப்பட்ட நிலையில்அவர்களின் கொள்கைகள் அல்லது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழி முறைகள் தவறு என வாதிடுவோர் அதிகரித்துள்ளனர். குறிப்பாக மேற்கத்தைய சமூகம், அரசியல்வாதிகள், மனித உரிமைவாதிகள் இந்த வாதத்தினை முன்னிறுத்தி அதற்கு தமிழ் மக்களின் ஆதரவினை பெறுவதிலும் முனைப்பாக உள்ளனர். இதற்காக உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் MODARETORS என்ற தலைப்பு கொடுத்து வளர்ப்பதும் நாம் அறிந்த விடயம். சர்வதேசத்தின் இந்த திட்டம் இப்போது ஆரம்பிக்கப்படவில்லை அது 2002 இல் பேச்சுவார்த்தை ஆரம்பமாகின்ற போதே ஆரம்பிக்கபட்டது. அதாவது தமது திட்டங்களை நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு அல்லது திணிப்பதற்கு புலிகளின் பலத்தினை சிதறடிப்பது. மாற்று தலைமைகளை கொண்டு வருவது. மாற்று கருத்துக்களை கொண்டுவருவது. என அவர்களின் திட்டம் இருந்தது. இது உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் செயற்படுத்தப்பட்டே வந்தது. எனினும் விடுதலைப்புலிகளின் பலத்தினால் அதனை கடந்த காலங்களில் நிறைவேற்ற முடியாமல் போனது என்பதனையும் குறிப்பிடவேண்டும். ஆனால் தற்போது அனைத்துலகத்தின் இந்த திட்டம் இலகுவாக அடையக்கூடியனவாக இருக்கின்றது என்பதில் சர்வதேசத்திற்கு அளப்பரிய மகிழ்ச்சி. விடுதலைப்புலிகளின் பலம் அல்லது தமிழர்களின் ஆயுத பலம் என்பது மேற்குலகத்திற்கு பிரச்சினையாக இருந்தாலும் அதுதான் தமிழர்களின் அரசியல் கொள்கைக்கு, அரசியல் குறிக்கோளை அடைய முக்கியமானது ஆதாரமானது என்பதனை தமிழர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.உணராதவர்கள் இப்போது உணர முற்படுவர். புலம்பெயர் தமிழர்களின் உணர்வை உள்வாங்கவேண்டும், அதனூடாக இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என நினைக்கும் சர்வதேச சமூகம் மிகவும் பெளவியமாக தமிழீழத்தினை ஆதரிப்பதாகவும் ஆனால் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்றும் கூறுகின்றது. இவ்வாறு கூறி புலிகளின் பலத்தினை அதாவது தமிழர்களின் தட்டிக்கேட்கும் சக்தியினை இல்லாது செய்வதில் சர்வதேசம் விடாப்பிடியாக உள்ளதனை பிரித்தானிய அமைச்சரான டேவிட் ஹன்சன் உரையில் இருந்து அறிய முடிகின்றது. கூடவே அண்மையில் ஜேர்மனி உட்பட பல வெளி நாடுகளில் மேற்கொள்ளப்படும் இயக்க ஆதரவாளர்கள் மீதான நடவடிக்கைகளையும் குறிப்பிடலாம். இங்கு ஒன்றினை குறிப்பிடவேண்டும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக்கொள்வதாக கூறும் சர்வதேச சமூகம் அந்த அபிலாசைகளை நடைமுறைப்படுத்தும் பூகோள அமைவிடம் இலங்கைதான் என்பதனை மறந்து விட்டனரா? ஏனெனில் எதற்காக தமிழர்கள் போராடுகின்றார்களோ அல்லது எதற்காக தமது உரிமைக்குரலினை எழுப்புகின்றார்களோ அதனை ஜன நாயக முறைப்படி செய்யுங்கள் என ஆலோசனை கூறும் சர்வதேச சமூகம்; தாயகத்தில் ஆயுத முனையில் , இராணுவ அச்சுறுத்தலின் மூலம் தமிழர் தாயகம் விழுங்கப்படுகின்றது. சிங்கள குடியேற்றம் செய்யப்படுகின்றது. இன வீதாசாரம் கிழக்கை போன்று வடக்கிலும் நிச்சயம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. ஆகவே இந்த இன வீதாசார மாற்றம் நடந்த பின்னர் உங்கள் உரிமைகளை ஜன நாயக ரீதியில் பெறுங்கள் என்றால் சாத்தியமா? இலங்கை அரசாங்கம் கூட, ஏன் யாப்பு ரீதியாக தமிழர்கள் பிரிந்து செல்லலாம் என்று மாற்றம் கொண்டுவந்தால் கூட முடியாது. காரணம் அங்கு பெரும்பான்மையானவர் சிங்களவர்களாகவே இருப்பார்கள். ஆகவே மேற்குலகத்தின் இந்த பூச்சாண்டி விளையாட்டுக்களை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போகின்றார்களா? , ஜன நாயகம் அல்லது சாத்தியமான வழிகள் அல்லது மேற்குலகத்துடன் ஒத்து போகவேண்டும் என்ற அடிப்படையில் எவ்வளவு காலம் செல்லப்போகின்றோம்? அதுவரைக்கும் தமிழர் தாயகப்பகுதிகளில் சிங்கள குடியேற்றத்தினை தடுக்க என்ன உத்தரவாதம்? ஏதாவது சர்வதேசம் அதுபற்றி கதைக்கின்றார்களா? இதுவரை நடந்த கூட்டங்கள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் இவை எதுவும் உள்ளடக்கபடவில்லையே ஏன்? பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் வீடுகட்டுவதனை தட்டி கேட்கும் நாடுகள் ஏன் தமிழர் தாயக சிங்கள குடியேற்றம் பற்றி பேசுவதில்லை. பாலஸ்தீனத்தில் குடியேற்றத்தினை தற்காலிகமாவது நிறுத்தவேண்டும் என மேற்குலகம் கூறுகின்றது அல்லவா. ஆனால் தமிழர்களை ஜன நாயகமாக போராடுங்கள் என கூறும் சர்வதேச சமூகம் இலங்கையில் தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறுவதனை ஏன் கருத்தில் எடுக்கவில்லை? தமிழர்களின் ஆயுத போராட்டம் வன்முறை என்றும் பயங்கரவாதம் என்றும் அதனை தடைசெய்து ஒழித்த பெருமை சர்வதேசத்தினையே சாரும் அந்த வகையில் சர்வதேசம் தான் தாயகத்தில் தமிழர் நிலங்கள் மீதான சிங்கள குடியேற்றங்களை தடுக்க வேண்டும். இல்லையேல் தமிழர்கள் அதனை தடுக்க ஆதரவு வழங்கவேண்டும். ஆக குறைந்தது தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும்வரையாவது தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்தவேண்டும் என கேட்கவேண்டும். ஜன நாயக ரீதியில் , இலங்கையில் இவ்வாறான போராட்டங்களை செய்ய முடியாது அல்லது மாற்றங்களை கொண்டுவர முடியாது என்பதனை எவரும் மறுக்க முடியாது. ஆகையால் சர்வதேசத்துடன் சேர்ந்து சன நாயக ரீதியாக போராடுவோம் என புறப்படும் தமிழர்கள்; அதற்காக அமைப்புக்களை உருவாக்கி கவர்ச்சியாக விளம்பரம் செய்து மக்களை உள்வாங்கும் அமைப்புக்கள், தம்மை உலக ஒழுங்குக்கு ஏற்ப செயற்படும் புத்திசாலிகள் என கூறுபவர்கள் அனைவருமே இந்த பொறுப்பினை ஏற்க வேண்டும். தாயகத்தில் சிங்கள குடியேற்றம் முற்றுமுழுதாக முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் அதனை கருத்தில் எடுக்காது சர்வதேசம் ஓட்டம், இந்தியாவின் ஆதரவு என கூறிக்கொண்டு இருப்பவர்கள் இதனை நிச்சயமாக கருத்தில் எடுக்கவேண்டிய தேவை உள்ளது. தாயகத்தில் இனவீதாசார மாற்றம் ஏற்பட்ட பின்னர் உங்கள் ஜன நாயகம், போராட்டம், சர்வதேசத்துடன் ஒத்து போதல், இந்திய ஆதரவு என்ற எதுவுமே எடுபடப்போதில்லை என்பதனை புரிந்து செயற்படவேண்டும். 30 வருடமாக புலிகளால் செய்ய முடியாததனை நாம் எட்டு மாதத்தில் செய்ய முடியுமா? என புத்திசாலித்தனமாக கேளிவியினை கேட்டு தங்களை நியாயப்படுத்த முயலும் உள் நாட்டு, புலம்பெயர் தமிழர்கள் ஒன்றினை கவனத்தில் கொள்ளவேண்டும். புலிகள் காலத்தில் சிங்கள குடியேற்றங்கள் அப்புறபடுத்தப்பட்டன, புதிதாக ஆரம்பிக்க திட்டங்கள் இருந்தாலும் நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதனை கவனத்தில் எடுக்கவேண்டும். புலிகள் 30 வருடம் போராடியது போன்று நாமும் 30 வருடம் ஜன நாயக ரீதியாக போராடிய பின்னரே நீங்கள் கேள்விகளை கேட்கலாம் என்றால் அதற்கு ஆம் என சொல்லலாம் ஆனால் அதற்குள் தமிழர் தாயகம் சிங்கள மயமாகாமல் இருக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக