சனி, 6 மார்ச், 2010

அதி உச்ச இனவெறி,,,

தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் துயிலுமில்லங்களைச் சிதைக்கும் போக்கை சிறிலங்கா அரசும் அரசபடைகளும் நீண்டகாலமாகவே செய்து வருகின்றன. நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது வன்னியில் மீளக் குடியமரச் சென்ற மக்களிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் அப்பாதைக்கான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது. அப்பகுதிக்கு நேரடியாகச் சென்ற தமிழ்மகன் ஒருவர் கதறியழுதபடி தனது உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொண்டார். உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன. பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக