சனி, 6 மார்ச், 2010

கோசத்திற்குதான் தமிழ் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை பற்றி த தே கூ சொல்கின்றது -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர்களின் தேசியம் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை கோசமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு சொல்கின்றதே அல்லாமல் அதன் உள்ளார்த்தமாக அதற்கு செயல்வடிவம் கொடுக்ககூடிய எந்த எண்ணமும் தற்போதைய அதன் தலைமைக்கு இல்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கனடா தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி கருத்தை முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த வருடம் மே மாதத்திற்கு முன்னரே ஒரு தீர்வுதிட்டத்தை தயாரித்திருந்தது. ஆனாலும் அதனை வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துவந்தார்கள். ஒஸ்லோ பிரகடனத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்டிருப்பதாக இப்போது கூறுகிறார்கள். ஆனால் ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என மாவை சேனாதிராஜாவுக்கு ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால் கூறப்பட்டிருந்தது. இடைக்கால தன்னாட்சி தீர்வு திட்டத்தின் அடிப்படையில் முயற்சிக்கலாம் ஆனால் ஒஸ்லோ பிரகடனத்தை ஏற்கமுடியாது என ஏற்கனவே தலைவரால் கூறப்பட்டிருந்தது. இத்தனை தியாகங்களுக்கு பின்னரும், மீண்டும் ஒரு நாடு என்ற கட்டமைப்புக்குள் தமிழர்களுக்கு ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதனால்தான் இரண்டு நாடுகளை கொண்ட ஒரு தேசம் என்ற அடிப்படையில் தீர்வை முன்னிலைப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டேன். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையோ இந்தியாவினதும் பிறநாடுகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கமைவாகத்தான் தமிழர்களின் தீர்வை முன்வைக்கவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல. அப்படியானால் இவர்கள் தமிழ்மக்களின் தலைமைகளாக அல்லாமல் அவர்களின் கைப்பொம்மைகளாகத்தான் செயற்படப்போகிறார்கள். அதனால்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை மாற்றும் நோக்குடன் அவர்கள் போட்டியிடுகின்ற யாழ்ப்பாணம் மற்றும் திருமலை மாவட்டங்களில் போட்டியிடுகின்றோம். மற்றைய மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உழைப்போம். பிழையான வழியில் செல்லும் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பை சரியான வழிக்கு நகர்த்திவருவதற்காகவே குறித்த இரண்டு மாவட்டங்களிலும் எதிர்த்து போட்டியிடுகின்றோம். - என்று தனது நேர்காணலில் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக