சனி, 6 மார்ச், 2010

தமிழ் நாட்டில் ஏற்படும் உணர்வுபூர்வமான செயற்பாடுகளை தடுப்பதற்காகவே நிருபாமா சிறீலங்கா வந்துள்ளார்

தமிழகத்தில் ஏற்பட்டு வரும் கருத்து மாற்றங்களை மழுங்கடிப்பதற்கே இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ் சிறீலங்கா வந்துள்ளதாக இடதுசாரி விடுதலை முன்னனியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் நாட்டில் ஏற்படும் உணர்வுபூர்வமான செயற்பாடுகளை தடுப்பதற்காகவே இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு இந்திய மத்திய அரசு முழுமையாக ஆதரவுகளை வழங்கியிருந்தது. ஆனால் அது தற்போது 13 ஆவது திருத்தச்சட்டங்களுக்கு அப்பால் ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தை காண்பதற்கு முயன்று வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் தமிழகத் தலைவர்களிடம் ஏற்பட்டுவரும் மாற்றங்களை மழுங்கடிப்பதற்கே தற்போது இந்தியா முயன்று வருகின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளும் சிறீலங்காவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளன. அவற்றை எல்லாம் மழுங்கடிப்பதற்கே இந்தியா தற்போது முயன்று வருகின்றது. அதற்காகவே நிருபாமா சிறீலங்கா வந்துள்ளார். அமெரிக்காவும், பிரித்தானியாவும் தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றன. ஆனால் விடுதலைப்புலிகளை முறியடிப்பதற்கு அவர்கள் தான் சிறீலங்கா அரசுக்கு பணமும், ஆயுதங்களும் வழங்கியவர்கள். தற்போது அவர்கள் அரசியல் தீர்வு தொடர்பில் பேசி வருகின்றனர். சிங்கள இன கடும்போக்காளர்களை கொண்ட அரசிடம் இருந்து நாம் எவ்வாறு அதிகாரப்பகிர்வை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் தற்போது உள்ளுராட்சி சபைகளுக்கு எதனை வழங்கியுள்ளார்களோ அதனை தவிர நாம் எதனையும் அவர்களிடம் இருந்து பெறமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக