வியாழன், 21 ஜூலை, 2011

இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும்.

தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டு கிளிநொச்சியில் இருக்கும் எனது முன்னாள் நண்பன் வீரா வீட்டுக்குப் போக வேண்டும் என நினைத்து அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கிளிநொச்சிக்குச் சென்றேன். எப்படி இருப்பானோ என்ன செய்கின்றானோ என்று தெரியாது. அவனது வீட்டு வாசலில் போய் நின்றேன். நாலு, ஐந்து பனை மட்டை களால் கட்டப்பட்ட படலையினூடாக கொட்டில் வீட்டைப் பார்த்தேன். யாரையும் காணவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்து இவ்வளவு தூரம் வந்தது எப்படியாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என நினைத்து எனது மோட்டார் சைக்கிள் கோனை அடித்தேன். உள்ளே இருந்து ஓர் அம்மா வந்து யார் தம்பி என்றார். அவனது சொந்தப் பெயரை மறந்ததால் அவனது புனைப் பெயரைக் கூறி வீரா இல்லையா என்றேன். நான் அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டதால் அந்த அம்மா எந்தவித தயக்கமும் இன்றி அப்படி ஒருவர் இல்லை என்று கன்னத்தில் அறைந்த மாதிரி பதிலைச் சொல்லி விட்டு கொட்டிலுக்குள் சென்றுவிட்டா.
 
என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் மோட்டார் சைக்கிள் கோனை அடித்தேன். ஆனால் எந்தவித பயனும் இல்லை. அந்த அம்மா கொட்டிலில் இருந்து வெளியே வரவில்லை.  சரி போவம் என்று நினைத்து மோட்டார் சைக்கிளை எடுத்த வேளை எதிரே தண்ணீர் அள்ளிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான் வீரா. என்னைப் பார்த்ததும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல் உள்ளே வாவன், ஏன் வெளியே நிற்கிறாய் என்றான். இல்ல உள்ளே ஓர் அம்மா நின்றவா. உன்னைப் பற்றிக் கேட்டேன். உன்னைத் தெரியாது என்று சொல்லி விட்டு போனவா. இன்னும் வெளியே வரவில்லை என்றேன். அது என்னுடைய அம்மாடா. அவவுக்கு நீ யார் என்று தெரியாத படியால் பயத்தால் அப்படிச் சொல்லி விட்டா. சரி வா உள்ளே வா என்று கூட்டிக் கொண்டு சென்றான். நான் உள்ளே போனதும் அவனது அம்மா  பக்கத்தில் வந்து தம்பி குறை நினைக்காதே. இப்ப இங்க நடக்கிற ஆமியின்ர செயற்பாடுகளைப் பார்த்தால் பயமாக இருக்குது தம்பி. இவன் உயிரோட வந்திருக்கின்றான். மீண் டும் பிடித்துப் போய் தடை முகாமில் போட்டால் என்ரை பாடு என்னவாகும் என்று வேதனைப்பட்டார்.

ஏன் என்ன நடக்குது என்று கேட்டேன். நீ யாழ்ப்பாணத்தில் இருக்கிற உனக்கு எங்க தெரியப் போகுது. இரு தேத்தண்ணீ  ஊத்திக்கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு குசினிக்குள் சென்றுவிட்டா. வீராவைப் பார்த்து கேட்டேன். ஏன்டா மீண்டும் பிரச்சினையா? ஓமடா தடைமுகாமில் இறுதிக்காலம் போல் வெளியே வந்து ஒவ்வொருநாளும் பயந்து பயந்து வாழவேண்டியுள்ளது. இப்போது உள்ளூராட்சி சபைத்தேர்தல் நடக்கப்போகுதெல்லோ.  அதனால் கொழும்பில் இருந்து வரும் அமைச்சர்களால்   ஒவ்வொரு நாளும் கூட்டம்தான்.

மக்கள் யாருக்கென்றாலும் ஓட்டுப் போடுற உரிமை உண்டு. பலவந்தமாக ஓட்டுப்போட சொல்ல முடியாது. இப்ப இங்க பல வந்தமாக அரச கட்சிக்கு ஓட்டுப் போடச் சொல்லி ஒரே ஆக்கினை.  அரச தரப்பு தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குப்  போகவில்லை என்றால் இராணுவத்தினரே வந்து மிரட்டி கூட்டிக் கொண்டு போய் விடுவார்கள். இராணுவத்தைப் பார்த்தால் உடனே போக வேண்டியது தான். வேறு என்ன செய்யமுடியும்.

அதற்கிடையில்  வீராவின் அம்மா, இந்தா தம்பி தேத்தண்ணீ என்று கொண்டு வந்து தந்தா. அதை வாங்கிப் பக்கத்தில் வைத்துவிட்டு  அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்படித்தான் ஒரு தேர்தல் கூட்டம் நடந்தது. அதற்கு குறைவான மக்களே பங்குகொண்டனர். அங்கு வந்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் கடும் தொனியில் அடுத்த கூட்டத்துக்கு மக்களை பங்குபெறச் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்கள். உடனே படையினர் அடுத்த கூட்டத்தில்  எங்களுடைய பெயர் பட்டியலை எடுத்துவைத்துக் கொண்டு எல்லோரையும் விடும் படியும்  இல்லாவிட்டால் மீண்டும் தடுப்பு முகாமுக்குச்  செல்லவேண்டி வரும் என மிரட்டினாங்கள். பிறகு என்ன எல்லோரும் அந்தக் கூட்டத்துக்குச் சென்றோம்.

இரவு 11 மணிக்குத் தான் வீடு வந்துசேர்ந்தோம். நாங்கள் கையில் கொண்டு போன போனை இராணுவத்தினர் பறித்து வைத்திருந்தார்கள். இரவு 8 மணிக்கு கூட்டம் முடிந்தது. பின்னர் அதனை வாங்கிவர 11 மணி ஆகி விட்டது. இப்படித்தான் இப்ப இங்க நிலைமை. இராணுவம் சொன்னால் செய்யவேண்டி யது.  அப்பொழுது தான் தேத்தண்ணீர் நினைவுக்கு வந்தது. எடுத்துக்குடித்தேன் ஆறிப்போய் விட்டது.

தேத்தண்ணீரைக் குடித்துவிட்டு அமைதியாக இருந்த அவனிடம் மீண்டும் கதைக்க ஆரம்பித்தேன். முன்னாள் பெண் போராளிகள் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அவர்கள் சமூகச் சீர்கேட்டு செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்கள் என்று சனம் கதைக்குதடா என்றேன்.  அவனோ என்னைப் பார்த்து நீ என்ன நினைக்கிறாய் என்றான். நான் ஒன்றும் நினைக்கவில்லை என்றேன். சனம் ஏன் இப்படிக் கதைக்குது என்றேன். ஒன்று இரண்டு பேர் தப்புச் செய்தால் முழுப்பேரும் தப்புச் செய்வதாக நினைக்க முடி யுமாடா. நாங்கள் படுகிற கஷ்டம் கடவுளுக்குத் தான் தெரியும். நாங்கள் ஆம்பிளையள் இப்படிக் கஷ்டப்படும் போது பொம்பிளையள் எப்படித் தாங்குவார்கள். ஏற்கனவே சமூகத்தில் புலிப் போராளிகள் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். பிறகு இந்தக் கதையையும் சொல்லி எமது ஒட்டு மொத்த முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வையும் அழிக்கப் பார்க்கிறார்களா என்றேன். இந்த மண்ணுக்காகப் போராடியவர்கள் நல்ல சிந்தனை, நல்ல பண்பாடு உள்ளவர்கள். எப்படியடா இவர்களைப் பற்றிக் குறை சொல்ல முடியும். அந்த ஒரு சிலரும் சந்தர்ப்பத்தில் வலுக்கட்டாயத்தில் மாட்டிக் கொண்டவர்கள் தான். அவர்களையும் தப்பு என்று சொல்ல முடியாது.

பெண் போராளிகள் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுத் நொந்து போய் உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை. இவர்களின் உள நலத்தைப் பாதிக்கின்ற வகையில் கட்டுக் கதைகளைப் பேசாதீர்கள் என்றான். இந்தச் சமூகம் முன்னாள் போராளிகளைப் பற்றி அவதூறாகப் பேசுவதை விட்டுவிட்டு அவர்களின் வாழ்வுக்கு உதவி செய்யப் பார்க்க வேண்டும். அப்படி உதவி செய்தால்தான் நாமும் எமது மண்ணுக்கு உரிமையுடையவர்களாக இருப்போம் என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டு அவர்களிடம் இருந்து விடைபெற்றேன். மீண்டும் எப்போது 2000 ஆம் ஆண்டு வரும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக