திங்கள், 11 ஜூலை, 2011

எங்கட தலைவற்ர இலட்சியமும், மாவீரரின்ர கனவும், மக்களின்ர அர்ப்பணிப்பும் வீணாகிப் போக..................!!!!?

உவங்கள் எங்கட தமிழ்ச் சனத்தை என்னடா கேக்கிறாங்கள்…?’ என்றபடியே கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் முகத்தார்.


‘காலங்காத்தால கடகத்திலை ஏத்திக்கொண்டு வந்திட்டியளோ…?’ என்று வழக்கமான நக்கலுடன் முகத்தாரை வரவேற்றார் அப்புக்குட்டியர்.



‘என்னடா அப்புக்குட்டி… தலை சுத்துதடா… தலை சுத்துதடா… முள்ளிவாய்க்காலில் செத்த சனம் புண்ணியம் செய்ததுகள்தான்… எங்களப்போல உயிரோட இருந்தால் அதுகளும் உந்தக் கூத்துக்களைப் பார்த்து மறுகிச் செத்துப்போயிருக்குங்கள்…’


‘அத்தார்… வந்த நேரம் தொடக்கம் புறுபுறுக்கிறியள்… ஒண்டுமாய் விளங்கயில்லை… முதலில் சொல்லிப்போட்டு அழுங்க… இல்லாட்டி அழுதுபோட்டெண்டாலும் என்ன நடந்தது எண்டு சொல்லுக்கோ…’ என்று முறைத்தார் அப்புக்குட்டியர்.




‘என்னடா அப்புக்குட்டி… ஒண்டும் தெரியாதது மாதிரிக் கேக்கிறாய்… உந்த கே.பி. குழுவோட இப்ப புனர்வாழ்வுக் கழகமும் எல்லோ கூட்டுச் சேந்திட்டுது… இந்த வருசத்து தமிழர் விளையாட்டு விழாவையும் கே.பி. குழுதான் முன்னுக்கு நிண்டு நடத்தினவை…’ என்று கண்களைத் துடைத்துக்கொண்டார் முகத்தார்.


‘கலிகாலம் முத்தினால் இப்பிடி எல்லாம் நடக்கும் எண்டு எங்கட அப்பு, ஆச்சி அந்தக் காலத்தில சொல்லுவினம்… அதுதான் இப்பவும் நடக்குது… பழக்க தோஷத்தில புலி வேஷம் கட்டினதுகள் எல்லாம், காட்சி முடிஞ்சதும் வேஷத்தைக் கலைக்குதுகள்… பிறவிக் குணங்கள் எப்பவும் மாறாது எண்டதுக்கு கருணா மட்டுமல்ல… இஞ்சையும் சிலதுகள் இருக்குதுகள்… தமிழன்ர தலைவிதி எப்பவும் மாறப்போறதில்லை…’ என்று தன் கவலையையும் பகிர்ந்து கொண்டார் அப்புக்குட்டியர்.


‘தமிழர்களுக்கு எதிரான விசயத்தில… சிங்களவர்கள் கட்சி பேதமில்லாமல் ஒண்டாக நிக்கிறாங்கள்… எங்கட இனம் மட்டும் அந்தப் பாவப்பட்ட மக்களுக்காக எண்டாலும் ஒண்டாக நிக்கிறாங்களில்லை…’ என்று தலையில் அடித்துக்கொண்டார் முகத்தார்.


‘அத்தார்… நாங்கள் ஒண்டாக நிக்கக்கூடாது எண்டுதான் சிங்கள அரசு நெருப்பை எடுத்துக் குடுக்குது… இவங்கள் அதாலை தமிழ் மக்கள் தலையிலை கொள்ளி வைக்கிறாங்கள்…’ என்று கொட்டித் தீர்த்தார் அப்புக்குட்டியர்.


‘எல்லாம் அந்த வேலுப்பிள்ளையர் செய்த கொடுமையடா… அப்புக்குட்டி… பெருங் கொடுமையடா… எங்கட சமூகத்துக்கு இப்பிடி ஒரு பிள்ளையைப் பெத்துத் தந்திருக்கக் கூடாதடா… எங்கட பிறவிக் குணத்தை யாராலையும், எண்டைக்கும் மாத்த ஏலாது எண்டது முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தெரியுதுதானேயடா… டக்ளஸ் குழு… கருணா குழு… கே.பி. குழு… ருத்திரா குழு… நெடியவன் குழு... இப்ப பத்தாதெண்டு, றெஜி குழு எண்டு ஒண்டும் ஊருவாகியிட்டுது… இப்பிடியே போனால், எங்கட சனம் சிங்களவனுக்கு மொத்தமாக அடிமையாக வேண்டியதுதானடா… அப்புக்குட்டி…’ என்று கண்களைத் துடைத்துக்கொண்டார் முகத்தார்.


‘அப்ப, தமிழ்ச் சனம் இப்பிடியே அழிஞ்சு போக வேண்டியதுதானா…?’ என்று அங்கலாய்த்தார் அப்புக்குட்டியர்.


‘அதைதத்தானேயடா அப்புக்குட்டி, இவங்கள் இங்க செய்யிறாங்கள்… இவங்களுக்கு என்னதான் பிரச்சினை…? எதுக்காகத் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய தளத்தைச் சிதைக்கிறதிலை குறியாக நிக்கிறாங்கள்…? தமிழீழக் கனவோட தங்கட உயிரைக் கொடுத்த அந்த மாவீரச் செல்வங்கள், மக்கள் செய்த அத்தினை அர்ப்பணிப்புக்களையும் குழி தோண்டிப் புதைக்கிறாங்கள்…?’ என்று சோகத்தால் வெடித்தார் முக்தார்.


‘அத்தார்… உந்தக் கேள்விகளை நீங்கள் மட்டுமல்ல… தமிழ் மக்கள் எல்லாரும் உவங்களிட்டை கேட்கவேணும். அப்பதான், உவங்களுக்குப் புத்தி வரும். சிங்கள தேசம் விரும்புகிற விசயத்தை உவங்கள் முன் நிண்டு செய்யிறாங்கள் எண்டதை எங்கட சனம் உணர்ந்திட்டால், உவங்கள் கே.பி. இருக்கிற திசை பார்த்து ஓடிப்போயிடுவாங்கள்… விடுங்க அத்தார்… இந்த இருட்டு எல்லாம் அந்தச் சூரியன் வாற வரைக்கும்தானே…’ என்று ஆறுதல்படுத்த முயன்றார் அப்புக்குட்டியர்.


‘கே.பி. குழுவோட இணைஞ்சு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்தின விளையாட்டு விழாவில பத்தாயிரம் சனம் வந்ததெண்டு சொல்லுகிறாங்களே… உண்மையாடா அப்புக்குட்டி…’


‘அத்தார்… தமிழ்த் தேசிய தளத்தின்ர அனுசரணையோட விளையாட்டு விழா நடந்த காலத்திலேயே ஆறாயிரம் சனம்தான் வருகிறது. இந்தத் தடவை கே.பி. குழுவோட இணைஞ்சு நடாத்திறதை அறிஞ்சு அதிலையும் முக்கால்வாசிப்பேர் போகயில்லை… போனவையைத் தேடிப் பிடிச்சு விசாரிச்சால், ஐயோ உந்தக் கோதாரி எங்களுக்குத் தெரியாததால நாங்கள் போயிட்டம்… நினைச்சாலே அருவருக்குது… எண்டு குறுகிப்போய் நிண்டினம்…’


‘என்னவோடா அப்புக்குட்டி… உந்தக் குழுக்களின்ர பிடியில இருந்து எங்கட சனம் விடுபடவேணும்… எங்கட தலைவற்ர இலட்சியமும், மாவீரரின்ர கனவும், மக்களின்ர அர்ப்பணிப்பும் வீணாகிப் போகக் கூடாதடா அப்புக்குட்டி… எங்கட மக்கள் உவங்களின்ர சதிக் கரங்களிலிருந்தும் விடுவிக்கப்பட வேணுமடா… அப்புக்குட்டி…’ என்று கண் கலங்கினார் முகத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக