திங்கள், 15 மார்ச், 2010

வந்தார் சென்றார்................

தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலிருந்த தொடர்புகளை மீளவும் ஏற்படுத்துவதற்குத் துணைத் தூதரகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு இந்தியா விரும்புகிறது. தூதரகம் அமைக்கும் இந்தியாவின் பிரேரணையினை சிறிலங்கா ஏற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிறன்று நாட்டினது குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாகக் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தினை அமைக்கும் தமது முனைப்புத் தொடர்பில் மகிந்தவிற்கு எடுத்துக்கூறியதாக இந்தியப் பத்திரிகையாளர்களுடனான உத்தியோகப் பற்றற்ற சந்திப்பின் போது வெளிவிவகாரச் செயலர் நிருபாமா ராவ் கூறியிருக்கிறார். இந்தியாவின் சென்னை, மும்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் சிறிலங்கா தனது துணைத் தூதரகங்களைக் கொண்டிருக்கின்ற போதும் இந்தியாவின் ஒரேயொரு துணைத் தூதரகம் கண்டியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டினது ஏனைய பாகங்களில் இந்தியா தனது துணைத் தூதரகங்களை அமைக்க விரும்பினால் அது தொடர்பாகத் தமக்கு எந்தத் தயக்கமும் இல்லையென சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லகம ஒரு சில வாரங்களின் முன்னர் குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் துணைத் தூதுவராலயத்தினை அமைப்பதற்கான நடைமுறைச் செயற்திட்டங்கள் பூரணப்படுத்தப்படவேண்டியிருக்கிறது என்றும் யாழ் குடாநாட்டினது மக்களின் நலனே துணைத் தூதுவராலயத்தினை அமைப்பதற்கான அடைப்படை நோக்கம் என உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “துணைத் தூதரகம் அமைக்கப்படுமிடத்து அது குடாநாட்டு மக்கள் தங்களுக்குத் தேவையான விசாவினை இலகுவாகப் பெறுவதற்கு வழிசெய்யும் என்பதற்கப்பால் சிறிலங்காவின் வட மாகணத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தவும் உதவும்” என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு நாடுகளினதும் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பரந்துபட்ட விடயங்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று, மூன்று நாள் பயணமாக ராவ் கொழும்பு சென்றிருந்தார். சிறிலங்காவில் போர் முடிவுக்குவந்துவிட்டாலும் அரசியல் தீர்வுக்கான தேடல் அங்கு தொடர்ந்துகொண்டே இருக்கிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா பாராளுமன்றில் தனது எழுத்து மூலப் பதிலில் தெரிவித்திருந்த ஓரிரு நாட்களின் பின்னர் நிருபாமாவின் கொழும்புக்கான இந்த பயணம் இடம்பெற்றது. வெளிவிவகாரச் செயலராகப் பொறுப்பேற்ற பின்னர் நிருபாமா ராவ் கொழும்புக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகவும் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் இந்திய உயர் அதிகாரி ஒருவர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணமாகவும் இது அமைகிறது. இடம்பெயர்ந்திருக்கும் தமிழ்ப் பொதுமக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதை வரவேற்ற நிருபாமாராவ் முல்லைத்தீவு மற்றும் கிளிநெச்சிப் பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமிடத்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்த இடங்களில் இயல்பாக வாழும் நிலைதோன்றும் என ராஜபக்சவுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாக அவரது கொழும்பு பயணம் தொடர்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடைபெற்று முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் திரு ராஜபக்ச வெற்றி பெற்றமைக்குத் தனது வாழ்த்தினைத் தெரிவித்த நிருபாமா, நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சனநாயக முறையிலமைந்த தேர்தல்கள் இடம்பெறுவதானது சிறீலங்காவினது அனைத்து இன மக்களும் அமைதியுடனும் இணக்கப்பாட்டுடனும் வாழக்கூடியவகையில் அரசியல் இணக்கப்பாட்டினை முன்னெடுப்பதற்கேற்ற ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தினை வழங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். கொழும்பில் தான் தூதுவராக இருந்த காலத்திற்குப் பின்னர் இப்போது நிறைய விடயங்கள் நடந்தேறிவிட்டன என்பதையும் இந்தச் சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டினார். இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியமர்த்துவதில் சிறிலங்கா குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருப்பதாகக் கூறிய நிருபமா ராவ், இந்த விவகாரம் தற்போது அனைத்துலக சமூகத்தின் கவனத்தில் இருந்து அகன்று விட்டதாகவும் தெரிவித்தார். தற்போதைய அரசியல் விவகாரம் குறித்துக் கலந்துரையாடுகையில், நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மட்டும் 1,000 வரையான வேட்பாளர்கள் போட்டியிடுவது மக்களாட்சி நடைமுறையில் மக்கள் எவ்வளவு ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என நிருபமா கூறினார். நிலையான அமைதியுடன் அந்த மாற்றம் நடந்திருப்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். அண்மையில் நடைபெற்ற, கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் 3,000 இந்தியர்கள் கலந்துகொண்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த பரிமாற்றத்தின் மற்றொரு வெளிப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் ராஜபக்ச இந்தியாவிற்கான பயணமொன்றை மேற்கொள்ளவேண்டும் எனத் தான் அழைப்பு விடுத்ததாகவும் ஏப்பிரல் 8ம் நாள் இடம்பெறவிருக்கும் பொதுத்தேர்தலின் பின்னர் இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு அவர் இணங்கியிருப்பதாகவும் வெளியுறவுச் செயலர் குறிப்பிட்டார். ராஜபக்சவினது இந்திய பயணத்தினது திகதி தொடர்பாக பின்னர் திட்டமிடப்படும் என உத்தியோக பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர், வெளிவிவகாரச் செயலர், குடியரசுத் தலைவருக்கான சிறப்பு ஆலோசகர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் குடியரசுத் தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரையும் தனது கொழும்பு பயணத்தின் போது நிருபாமா சந்தித்திருக்கிறார். இவை தவிர, தமிழ் மற்றும் முஸ்லீம் கட்சிகள் உள்ளிட்ட நாட்டினது முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடும் வெளியுறவுச் செயலர் சந்திப்பினை நடாத்தியிருக்கிறார். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கிவரும் உதவிகளை ராஜபக்ச பாராட்டியதாக இந்தியத் தூதரகம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக சிறிலங்காவின் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் புகையிரதப்பாதைகள் மற்றும் புகையிரத நிலையங்களைச் சீர்செய்யும் பணிக்கென 425 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டிருப்பதை சிறிலங்கா வரவேற்றிருக்கிறது. இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தற்போது தங்கியிருக்கும் 70,000 மக்களும் தங்களது சொந்த விருப்பத்தின் பெயரிலேயே தங்கியிருக்கக்கூடும் என குடியரசுத் தலைவர் நிருபாமாவிடம் தெரிவித்ததாக தூதரகத்தின் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுக்குத் தொடர்ந்தும் உதவுவதே இந்திய அரசாங்கத்தின் நோக்கம் என வெளிவிவகார அமைச்சருடனும் அவரது அமைச்சக அதிகாரிகளுடனும் இடம்பெற்ற சந்திப்பின் போது நிருபாமா உறுதியளித்திருக்கிறார். இடம்பெயர்ந்தவர்களின் நன்மை கருதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு இந்தியா தனது உதவிகளை வழங்கும் எனவும் இந்திய வெளியுறவுச் செயலர் அறிவித்திருக்கிறார். இடம்பெயர்ந்தவர்களின் நன்மைகருதி தற்காலிக வீடுகளை அமைத்தல், போரின் போது சேதமடைந்த வீடுகளைத் திருத்துதல் மற்றும் வீடற்றவர்களுக்குப் புதிய வீடுகளை அமைத்தல் போன்றவை இந்த வீடமைப்புத் திட்டத்திற்குள் அடங்கும். சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் போக்குவரவுத் துறையினை மேம்படுத்துவதற்காக 55 பேருந்துகளை கல்விசார், கலாச்சார மற்றும் சமூக அமைப்புக்களுக்கும் இந்தப் பகுதியின் உள்ளுராட்சிக் கட்டமைப்புகளுக்கும் வழங்குவதற்கு இந்தியா அனுமதியளித்திருக்கிறது. சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் தொடருந்து பாதை கட்டுமானப் பணிகளுக்கு மேலதிக நிதியினை வழங்குவது தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் நிருபாமா தெரிவித்தார். “இந்திய-இலங்கை உறவில் கலாசார தொடர்புகளையும் பொதுவான பாரம்பரியத்தைப் பேணுவதுமே மிக முக்கிய விடயங்களாகக் கருதப்பட்டு வந்தன. தலதா மாளிகை வளாகத்தினுள் சர்வதேச பௌத்த அரும்பொருள் காட்சியகம் ஒன்றை நிறுவுவதில் முழுமையாகப் பங்குகொள்வதற்கு இந்தியா தீர்மானித்திருக்கிறதென நிருபாமா தெரிவித்தார்”, என இந்திய தூதரக அறிக்கை கூறுகிறது. இந்தியத் தேசிய அரும்பொருள் காட்சியகத்தின் வழிகாட்டலின் கீழ் ஓர் கலைக் காட்சியகத்தினை சிறிலங்காவில் நிறுவுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மன்னாரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வரத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்காகவும் இந்தியா தனது உதவிகளை வழங்கும் என நிருபாமா தெரிவித்தார். மேற்குறித்த இந்தப் பணிகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவின் மகாவலிபுரத்திலுள்ள கட்டடக்கலைக் கல்லூரி [College of Architecture] இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் [Archeological Survey of India] என்பனவற்றின் அலுவலர்களை உள்ளடக்கிய குழுவொன்று இலங்கைக்கு வரவிருக்கிறது. மேலும் கலை, கலாச்சாரம், கல்வி, மனிதவள மேம்பாடு மற்றும் பயிற்சி போன்ற விடயங்களில் மக்களமைப்புக்கள் மேற்கொள்ளும் முனைப்புக்களுக்குத் தேவையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கிவரும் தனித்துவமானதோர் அரச நிறுவனமாகச் செயற்படும் இந்திய-இலங்கை அறக்கட்டளை நிறுவனத்திற்கு [India-Sri Lanka Foundation] இந்தியா வழங்கிவரும் ஆதரவினை அதிகரிப்பது என்ற முடிவினையும் நிருபாமா ராவ் அறிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக