சனி, 15 ஜனவரி, 2011

கூட்டமைப்பு எங்கே செல்கிறது!? ஆனந்த சங்கரி, வரதாஜப்பெருமாள், சித்தார்த்தனுடன் கூட்டு!

தமிழர்விடுதலைக்கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எப் வரதர் அணித் தலைவர் வரதாஜப்பெருமாள், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் சிவாஜிலிங்கம் உட்பட்டவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவதற்கான தீவிர முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ் அரங்கத்தில் செயற்பட்டுவந்த குறித்த கட்சிகளின் குழுவினருக்கும் கூட்டமைப்புக் குழுவினருக்கும் இடையிலான குழு நிலைச் சந்திப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விடயத்தில் உடன்பாடு எட்டுவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  கீழ் போட்டியிட விருப்பார்வம் கொண்டுள்ள குறித்த கட்சித் தலைவர்கள் அதற்கான கோரிக்கையினை முன்வைத்ததாகவும் இதற்கு கூட்டமைப்பு தலைமைப்பீட வட்டாரங்கள் உடன்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை இந்தியாவில் உள்ள கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனுடன் நேரடிப் பேச்சில் ஈடுபடுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி இன்று அவசரமாக இந்தியா பயணமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த உடன்பாட்டு முடிவு தொடர்பில் கூட்டமைப்பின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருக்கும் அதேவேளை தனியான பாதையினை எடுக்க வேண்டிய நிற்பந்தம் ஏற்படலாம் என்று ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை வெளியிட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
கடந்தகாலங்களில் தமிழ் தேசிய போராட்டத்தினையும், மாவீரர்களின் அர்ப்பணிப்புக்களையும் கடுமையாக விமர்சித்ததுடன் போராட்டத்திற்கெதிராக தீவிரமாக செயற்பட்டுவந்த குறித்த நபர்களை தமிழ் மக்கள் கடந்த தேர்தல்களின் போது நிராகரித்திருந்தனர். இந்நிலையில் கூட்டமைப்பு கூட்டுச்சேர உடன்பட்டிருப்பது தமிழ் தேசியப் பற்றாளர்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவித்துள்ளது.
இந்தக் கூட்டுத் தொடர்பில் மக்கள் கவலையடைய மாட்டார்களா? என்று கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி ஒன்றின் முன்னாள் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கேள்வி எழுப்பிய போது. ;கூட்டமைப்பு என்ன செய்யவேண்டும் என்பதை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே முடிவு செய்வர், இது குறித்து வேறெவரது கருத்தும் தேவையில்லை என்றும் அவர் பதிலளித்தாக யாழ்.ஊடகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் வலுப்பெற்ற கூட்டமைப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கமும் நட்பு நாடுகளும் மேற்கொண்டு வரும் முயற்சியினை வெற்றிபெறச் செய்யும் வகையிலேயே இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்றார் கொழும்பில் உள்ள மூத்த தமிழ் பத்திரிகையாளர் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக