புதன், 17 பிப்ரவரி, 2010

ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றுவார்கள்

போராட்டங்கள் மூலமாக மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமென அதிபர் ராஜபக்சவுக்கு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது. பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தனர். ஊர்வலத்திலும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோர் பொன்சேகாவை விடுதலை செய், பொன்சேகாவே உண்மையான ஜனாதிபதி, தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் பொன்சேகாவை விடுதலை செய், விடுதலை செய், விடுதலை செய், நாட்டின் தளபதியை விடுதலை செய், அதிபர் மாளிகை உனக்கு சொந்தமானது அல்ல, மக்கள் ஆணையை மாற்றிய பொய் அதிபரை வீட்டுக்கு அனுப்புவோம் போன்ற கோஷங்களை எழுப்பினர். முன்னாள் எம்.பி.யான லால்காந்த எதிர்ப்பு கூட்டத்தில் உரையாற்றுகையில், "இந்த அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொன்சேகா கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டுள்ளார்,அவரை விடுவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தை கைவிடாது. ஜெனரலை விடுவிக்கும் வரை போராட்டமும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தொடரும். மக்கள் அலரிமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவும். தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் ஜெனரலை உடனடியாக விடுதலை செய்யவும். இல்லையேல் ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்து ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிப்போம்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக