ஞாயிறு, 28 மார்ச், 2010

கிளிநொச்சி: அன்றாட வாழ்க்கை போராட்டமே!



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைநகராகத் திகழ்ந்த கிளிநொச்சி, சிறிலங்கப் படைகளால் தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், அங்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை அன்றாடப் போராட்டமாக உள்ளதென்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2008இல் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 90,000 மக்கள் வசித்து வந்தனர். 2009ஆம் ஆண்டின் துவக்கத்தில் மக்களெல்லாம் வெளியேறிவிட்ட நிலையில் சிறிலங்க இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றியது. அங்கிருந்து மக்களனைவரும் புலிகளுடன் வெளியேறி முல்லைத் தீவில் - மக்கள் பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்தனர். போருக்குப் பின் வன்னி வதை முகாம்களில் அடைப்பட்டுக்கிடந்த அம்மக்களில் தற்போது 24,000 பேர் அவர்கள் வாழ்ந்த கிளிநொச்சியில் மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்டியையும், யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்தாலும், அங்கு குடியிருக்கும் வீடுகள் என்றோ அல்லது தற்காலிகமாக தங்குவதற்கோ எந்த ஒரு கட்டடமும் முழுமையாக இல்லை. சிறிலங்க படைகளின் தொடர் குண்டு வீச்சால் கடும் தாக்கதலிற்கு உள்ளான நகரம் கிளிநொச்சியாகும்.  மீள் குடியமர்த்தலிற்கு அளிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு முழுமையாக வீட்டை கட்டிக்கொள்ள முடியவில்லை என்று அங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். அரசு அளித்த பொருட்களைக் கொண்டு தாங்கள் அமைத்துள்ள வீட்டின் மேற்கூரையைக் கூட முழுமையாக கட்டிக்கொள்ள போதுமானதாக இல்லை என்று ஐரின் செய்தி நிறுவன செய்தியாளருக்கு அம்மக்கள் தெரிவித்துள்ளனர். “அரசின் உதவியால் தாங்கள் கட்டிக்கொண்ட தற்காலிக வீட்டில் கூரை கூட உறுப்படியாக அமையவில்லை” என்று குமாரி தேவராசா என்ற பெண்மணி கூறியுள்ளார். குடிநீர், கழிப்பறை, மின்சாரம் என்று எந்த வசதியிமின்றி தங்களின் அன்றாட வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் முதல் அங்கு தென்மேற்கு பருவமழை பெய்யத் துவங்கும்போது அதனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்ற கேள்விக் குறியுடன் அம்மக்கள் உள்ளதாக ஐரின் தெரிவிக்கிறது. அரசு அளித்த தகரத்தையும், கட்டைகளையும் கொண்டு பலர் இந்த தற்காலிக வீடுகளைக் கட்டிக்கொண்டுள்ளனர். மற்றவர்கள் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் அளித்த கூடாரங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர். அரசு அளித்துள்ள சொற்பமான நிவராண உதவியில் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள நளினி ஜபேசன், உழைத்து சம்பாதித்து வாழ்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக