திங்கள், 12 ஏப்ரல், 2010

அம்பாறையில் இனியபாரதி குழுவினரின் அட்டகாசம் ...

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய கருணாகுழு(இனியபாரதி குழு)வினரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏழு பேரின் வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை இரவு 7.00மணியளவில் அக்கரைப்பற்று 7ஆம் குறிச்சிப்பகுதியில் கமலகம் வீதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களின் வீடுகளே உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைவானில் வந்த ஆயுதம் தாங்கிய இனியபாரதி குழுவினர் வாசல்கதவுகளை வெட்டி வீட்டுக்குள் புகுந்து வீடுகளை உடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சில தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்களும் இனியபாரதி குழுவினரின் கடும் தாக்குதலுக்குள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதரவாளர்களும் இனியபாரதி குழுவினரின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் இனியபாரதி குழுவினரை நிராகரித்துள்ள இந்த வேளையில் அவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அம்பாறை மாவட்டத்தின் இனியபாரதி குழுவினர் ஆயுதங்களுடன் அராஜகத்தில் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பில் கடும் கவலைவெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கில் இனியபாரதி குழுவினர் சிறுவர்களை தமது ஆயுதப்படையில் சேர்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதனை மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக