வெள்ளி, 21 மே, 2010

“செப்ரப்பர்-11” …. “மே – 17”……

2001 செப்ரெம்பர் 11இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னர் “செப்ரெம்பர் 11′ என்ற குறியீட்டுச் சொல் புழக்கத்துக்கு வந்தது. அது சர்வதேச ரீதியில் பிரபலமடைந்துமிருக்கிறது. அதேவேளை இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், அதாவது “செப்ரெம்பர் 11 க்குப் பின்னரான நிலைமைகள்’ என்று அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வெளியுறவுக் கொள்கைகள் என்ற அளவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்கள், விளைவுகளின் அடிப்படையிலேயே மேற்படி குறியீட்டுச் சொல் கையாளப்படுகிறது. இதைப்போல “மே 17′ என்பது இலங்கைத் தீவில் எத்தகைய நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது?
 அது இலங்கைக்கு அப்பால் பிராந்தியத்திலும் அதற்கு அப்பால் சர்வதேச அளவிலும் எத்தகைய நிலைமைகளுக்குக் காரணமாகவும் நிலைமைகளுடன் தொடர்பாகவும் இருக்கிறது என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஓராண்டு நிறைவடையப் போகிறது. வன்னிப் போரின் நினைவுகள் உலகெங்குமுள்ள தமிழர்களால் ஏதோ வகைகளில் நினைவு கூரப்படுகின்றன. இந்த நினைவு கூருதல்கள் எந்தத் தெளிவுமற்ற நிலையில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இந்தப் போர்க்கால நிலைமைகளைப் பற்றியோ அல்லது அதன் பின்னரான மே 17இன் பின்னரான நிலைமைகளைப் பற்றியோ உரிய மதிப்பீடுகளும் கணிப்புகளும் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகத் தமிழ்ச் சூழலில் நிலவுகின்ற சிறுபிள்ளைத்தனங்கள், மேதாவித்தனங்கள் என்ற குறை அம்சங்களின் நிமித்தமாக வழமையைப் போலவே “மே 17′ என்பதும் இன்று ஒரு பெஷனாக உச்சரிக்கப்படுகிறது. ஆனால், இந்தச் சொல்லின் அர்த்தம் சரியாக உச்சக்கப்படவில்லை. இந்தக் குறியீட்டின் அர்த்தம் சரியாக உணரப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். செப்ரெம்பர் 11க்குப் பின்னர் மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா, தன்னை ஒரு தடவை மீள் நிலைப்படுத்திக் கொண்டது. எல்லாவற்றையும் மீள் பார்வைக்குட்படுத்தி, தனது பாதையை ஒழுங்குபடுத்தியது. தனது பயணத்தைப் புதிய நிலைமைகளுக்கேற்ற மாதிரி வகுத்தும் கொண்டது. ஆனால், இலங்கை மே 17க்குப் பின்னர் அதை எப்படிப் பார்க்கிறது? இலங்கையில் தமிழர்கள் மே 17ஐ எப்படிப் பார்க்கிறார்கள். அதன் பின்னரான நிலைமைகளை அவர்கள் எப்படி நோக்குகிறார்கள்? அத்துடன் அதன் பின்னரான சூழலை அவர்கள் எப்படிக் கையாள முற்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் அதைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள முற்பட்டிருந்தால் அதன் வடிவம் எத்தகையது? அதன் நிகழ்ச்சி நிரல் என்ன? அது இலங்கையில் எப்படி அமைந்திருக்கிறது? இலங்கைக்கு வெளியே புலம்பெயர் சமுகத்தில் எப்படி அமைந்துள்ளது என்ற கேள்விகள் எழுகின்றன. பொதுவாகத் தமிழர்களின் மனதில் மே 17 என்பது, தாம் தோற்கடிக்கப்பட்ட நாள் என்ற பொருளிலேயே பதிவாகியிருக்கிறது. ஆனால் இந்தத் தோல்வியை இவர்கள் வெவ்வேறு விதமாக உணர்கிறார்கள். சிலர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட பொருளில் உணர்கிறார்கள். சிலர் புலிகள் தோற்கடிக்கப்பட்ட அடிப்படையில் உணர்கிறார்கள். வேறு சிலர் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நாளாக உணர்கிறார்கள். சிலர் முடிவில்லாத போர் ஒன்று முடிவுக்கு வந்து விட்டதாக உணர்கிறார்கள். சிலர் ஆயுதக் கலாச்சாரத்துக்கு முடிவு ஏற்பட்டிருப்பதாகவும், ஒரு புதிய அரசியல் வெளிக்கான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் உணர்கிறார்கள். சிலர் ஏகத்துவ நிலைமை மாறி ஒரு ஜனநாயகச் சூழல் உருவாவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறதாக உணர்கிறார்கள். சிலர் தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட நாளாக உணர்கிறார்கள். இப்படி அவரவர் தத் தம் நிலைப்பாடுகளின் வழியாக இந்த உணர்தல்களைக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை “மே 17′ என்ற குறியீட்டுச் சொல் இன்று தமிழர்களிடம் ஒரு விதமாகவும் சிங்களவர்களிடம் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. “இந்தப் போரின் முடிவு குறித்தும் அதன் பின்னரான நிலைமைகள் குறித்தும் சர்வதேச சமுகத்தின் பொருட்பாடு எப்படியோ’ என்பது கேள்விக் குரியது. அது பல கோணங்களிலானது. அது பல சிக்கல்களையும் புதிய போக்குகளையும் புதிய உணர்வுமுறைகளையும் உருவாக்கியிருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஆனால், இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த முப்பதாண்டு காலப் போர் முடிவுக்கு வந்ததை இரண்டு தரப்பினரும் இரண்டு வகையாக உணருகின்றனர். தாங்கள் வெற்றி பெற்று விட்டதாகச் சிங்களவர்களும் தாங்கள் தோற்கடிக்கப்பட்டிருப்பதாகத் தமிழர்களும் எண்ணுகிறார்கள். இதுதான் பொதுப்போக்கு. ஆனால், இந்தப் போக்குக்கு அப்பாலான ஒரு பார்வையும் யதார்த்தம் உண்டு. அந்தப் பார்வையின்படி இந்தப் போர் எந்தத் தரப்புக்கும் வெற்றியும் அல்ல தோல்வியும் அல்ல. இது ஒரு படிப்பினை. ஆனால், பொதுப் போக்கைக் கடைப்பிடிப்போரால் நடைமுறை விளைவுகளின் அர்த்தத்தில் இது படிப்பினையாகக் கொள்ளப்படவில்லை. விடுதலைப்புலிகளுடனான போர் என்பது தமிழ் மக்களுக்கு எதிரான போர் என்று தமிழ் மக்கள் சார்பாக பேசுபவர்களில் ஒரு பகுதியினரால் சொல்லப்படுகிறது. இவ்வாறு சொல்வோரில் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். இதில் ஓரளவு உண்மையுண்டு. ஆனால் இதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியாது. புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால், தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட வில்லை. அதேவேளை அவர்கள் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. வரலாற்றில் எந்தச் சக்தியின் வீழ்ச்சியோடும் மக்களும் வீழ்ந்து விடுவதில்லை. அவர்கள் அந்த வீழ்ச்சியிலிருந்து படிப்பினைகளைப் பெறுகிறார்கள். பின்னர் தங்கள் எழுச்சிக்கான நுட்பங்களை வகுத்துக் கொள்கிறார்கள். பிறகு, அந்தப் படிப்பினைகளின் அடிப் படையில் அவர்கள் வெற்றிகரமாக எழுந்து கொள்கின்றனர். வலுமிக்க ஒரு சக்தியாக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் செல்வாக்குப் பெற்றிருந்து, வீழ்ச்சி கண்டதை அடுத்து ஏற்பட்ட நிலை தமிழ் மக்களிடம் ஒரு பின்னடைவை உருவாக்கியிருக்கிறது. அதுவும் சம வலுவுள்ள பிற அரசியற் சக்திகள் தமிழ் அரசியலில் இல்லாத ஒரு நிலையை புலிகள் உருவாக்கியதன் விளைவாக இந்தப் பின்னடைவு துலக்கமாகத் தெரிகிறது. இதுதான் சிங்களத் தரப்புக்கு வாய்ப்பாகவும் இருக்கிறது. புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவக்கோட்பாடு அவர்கள் இல்லாத போது பெரும் வெற்றிடத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தியிருக்கிறது. சமநிலை காணமுடியாத ஒரு தத்தளிப்பை ஈழத்தமிழருக்கு இதுதான் உருவாக்கியுமிருக்கிறது. இலங்கை அரசாங்கம் புலிகளுக்கெதிரான போரைச் செய்தபோது அதைத் தமிழ் மக்களுக்கெதிரான போர் என்று எண்ணக்கூடிய அளவிலேயே செய்தது. இதில் தனியே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. இலங்கையில் ஆட்சியிலிருந்த அத்தனை ஆட்சியாளரும் தமிழ் மக்களுக்கெதிராக செயற்பட்டவர்கள்தான். சட்டங்களால் குரல் வளையை நெரித்தவர்கள். அதிகாரத்தால் கொடுமைகளை நிகழ்த்தியவர்கள். பெரும் பேரழிவுகளை நடத்தியவர்கள். இறுதிப் போரை நடத்தியவர் என்ற வகையில் பெரும் பழி அவரைச் சேர்கிறது. அதேவேளை இந்த இறுதிப் போரை நடத்துவதற்காக முன்னர் அதிகாரத்திலிருந்த தலைவர்களும் முயன்றனர். அதற்குப் புலிகள் வாய்ப்பளிக்கவில்லை. ஆகையால் புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அத்தனை நடவடிக்கைகளும் தமிழ்மக்களையும் பாதித்தன. இதில் வடக்கு, கிழக்கில் இருந்த தமிழர்கள் மட்டுமல்ல, அதற்கு . வெளியே, இலங்கைத் தீவின் எந்தப் பகுதியில் இருந்த தமிழர்களும் பாதிப்புக்குள்ளாகினர். எனவே புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழ் மக்களுக்கெதிரான போர் என்றே பலரையும் எண்ணவைத்தது. “புலிகளின் நடவடிக்கைகள் அரசாங்கத்தை அப்படியான ஒரு நிலைமைக்குத் தள்ளியது’ என்று ஒருசாரார் இதை விமர்சித்து வந்திருக்கின்றனர். இத்தகைய விமர்சனத்தையும் குற்றச்சாட்டையும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கின்றனர். இவர்களுடைய கருத்தின்படி “இந்தப் போர் தமிழ் மக்களுக்கு எதிரான போர் என்று கொள்ளப்பட முடியாது. ஆனால், தமிழ் மக்கள் இந்தப் போரில் தவிர்க்க முடியாமல் சிக்கிவிட்டனர். அத்தகைய ஒரு நிலைமை இலங்கைத் தமிழரின் அரசியலில் ஏற்பட்டுவிட்டது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இந்தப் போரில், மக்களின் பாதிப்புகளில் சம பொறுப்புண்டு’ என்பது இவர்களுடைய நிலைப்பாடு. வெளிநாடுகள் பலவும்கூட தமது நிலைப் பாடுகளையும் இந்த அடிப்படையிலேயே முன்வைத்து வந்திருக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கெதிரான இலங்கை அரசாங்கத்தின் போரை இந்த அடிப்படையில் தான் இந்த நாடுகள் ஆதரித்தும் உள்ளன. அதேவேளை தமிழ் மக்களின் அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இது விசுவாசமான நிலைப்பாடா இல்லையா என்பது கேள்விக்குரியது. ஏறக்குறைய இப்படித்தான் சிங்களவர்களில் பெரும் பகுதியானோரும் கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை புலிகள் வேண்டப்படாதவர்கள். அவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள். எனவே புலிகளுக் கெதிரான போர் என்பது தவிர்க்கப்பட முடியாதது. அதை ஆதரிக்கவே வேண்டும். இந்த அடிப்படையில்தான் சிங்களவர்களில் பெரும்பான்மையானோர் போரை ஆதரிக்கின்றனர். இதேவேளை இந்தப் போர் அநாவசியமான உயிழப்புகளையும் அழிவுகளையுமே உண்டு பண்ணுகிறது. போரின் மூலம் இலங்கைத் தீவில் ஒருபோதும் அமைதியைக் கொண்டு வரமுடியாது என்று சிங்கள, தமிழ், முஸ்லிம் சமுகங்களைச் சேர்ந்தவர்களில் ஒரு தொகுதியினர் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்திருக்கின்றனர். இந்தக் கருத்துடையவர்கள் தமிழ்நாட்டிலும் உள்ளனர். போரை மறைவில் நின்று நடாத்திய வெளிநாடுகளும் இந்தக் கருத்தை தொடர்ந்து சொல்லிவந்திருக்கின்றன. ஆனால் இப்படிப் பல விதமான அபிப்பிராயங்கள், நிலைப்பாடுகள் எல்லாம் இருந்தபோதும் போரை எவராலும் நிறுத்த முடியவில்லை. அது கடந்த ஆண்டு மே 17ஆம் நாள் அன்று முடிவுக்கு வந்தது. எல்லோருடைய எதிர்பார்ப்புகள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள், எதிர்ப்புகள், ஆதரிப்புகள் எல்லாவற்றுக்கும் அப்பாலும் மே 17 இல் அது பேரழிவுகளுடன் முடிவை எட்டியது. ஆகவே “மே 17′ என்பது முப்பது ஆண்டு காலப் போரின், இந்த நீண்ட கால பாதிப்புகளின் இறுதிப்புள்ளியே ஆகும். இதுகாலவரையிலான இந்தப் போரின் விளைவுகளுடன் சம்பந்தப்பட்ட அத்தனை தரப்புகளின் ஒரு நிகழ்ச்சி நிரல் முடிவுக்கு வந்த நாளாகும். அதேவேளை தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் புதிய நிகழ்ச்சி நிரலுக்குப் போகாது விட்டாலும் நிச்சயமாக பிறசக்திகள் புதிய நிகழ்ச்சி நிரலை உருவாக்கத் தொடங்கிய புள்ளியாகும். இந்தப் போரை நிறுத்துவதற்கு இந்தப் போரின் பின்னால் இருந்த பல சக்திகளும் விரும்பவில்லை. அவை எப்படியாவது இந்தப் போரில் புலிகளைத் தோற்கடித்து விடவே விரும்பின. அதற்காக அந்தச் சக்திகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு கூட்டு நடவடிக்கையை மேற் கொண்டிருந்தன. ஆகவே இந்தப் போரின் அத்தனை அழிவுகளுக்கும் பேரவலங்களுக்கும் இந்தச் சக்திகள் அனைத்துக்கும் முழுப் பொறுப்புண்டு. அதிகார வெறிக்காகவும் அரசியல், பொருளாதார நலன்களுக்காகவும் மனிதர்கள் பலியிடப்படுவது வரலாற்றில் புதிய சங்கதி இல்லை. இந்த வெறியில் எதிரி, நண்பன், குழந்தை, முதியோர், ஆண், பெண் என்ற பேதங்கள் பார்க்கப்படுவதில்லை. தமது நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடவடிக்கைளை மேற்கொள்வதே உலகெங்கும் அரசு இயந்திரங்களின் நோக்கமாகும். அப்படித்தான் வன்னியின் இறுதிப் போரும் நடந்தது. இதைப் புரிந்துகொண்டு புத்தி பூர்வமாக அரசியலைப் புலிகள் முன்னடுக்கவில்லை. தம்மைச் சுற்றியிருந்த உலகத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். அதனால் ஏற்பட்ட விளைவுகள் பாரதூரமானவையாக அமைந்தன. வன்னியின் இறுதிப் போர் என்று சொல்வதையும்விட ஈழ விடுதலைப் போராட்டத்தை இந்த அடிப்படையில்தான் கடந்த காலத்தில் எல்லாச் சக்திகளும் கையாண்டன. ஆனால், இந்த வளர்ச்சி உச்ச நிலையை அடைந்து கடந்த 2006க்குப் பின்னர் இறுதி வடிவத்தை எடுத்தது. இதற்குப் புலிகள் தங்கள் அளவில் வாய்ப்பை அளித்தனர். வன்னியின் இறுதிப் போர் என்பது உண்மையில் புலிகளுக்கெதிரான போரா அல்லது தமிழ் மக்களுக்கு எதிரான போரா என்பது இன்று எழுந்திருக்கிற சிக்கலான கேள்வியாகும். அது புலிகளுக்கு எதிரான போராக இருந்தாலும் மக்களுக்கெதிரான போராகவும் இருந்தது என்பதே உண்மை. மக்களைப் பொருட்டாகக் கருதாமல் நடத்தப்படுகின்ற எந்தப் போரும் மக்களுக்கு எதிரான போரேயாகும். அதேவேளை இந்தப் போரில் மக்களும் கட்டுப்படுத்தப்பட முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிந்துகொண்டே அதற்கு இடமளித்ததன் மூலம் இதற்குப் புலிகளும் பொறுப்புள்ளவர்களாகிறார்கள். எனவே இந்தச் சுருக்கப் பின்னணியில் “மே 17′ என்பது தமிழ் மக்கள் தோற்கடிக்கப்பட்ட நாளாக, அவர்கள் மீது தொடர்ந்திருந்த வன்முறை முடிவுக்கு வந்த நாளாக, விடுதலைப்புலிகளின் எதிர்காலத்தையும் அதன் தலைவர் பற்றிய முடிவுகளையும் தீர்மானிக்க முடிந்த நாளாக, புதிய அரசியல் எதிர்காலத்துக்கான சிந்தனையை உருவாக்கக் கூடிய நாளாக, மக்கள் கேட்பாரில்லாமல் கொல்லப்படுவது முடிவு கட்டப்பட்ட தினமாக, துயரம் அவலம் பிசாசைப் போல தொடர்ந்து மக்களை விரட்டுவது முடிவுக்கு வந்தது என்று எந்த வகையிலும் தீர்மானிக்கப்படமுடியாத ஒன்றாகவேயுள்ளது. ஆனால், மே 17ஐத் தெளிவில்லாமலே தமிழர்கள் நினைவுகூர்கிறார்கள். மே 17க்குப் பின்னரான நிலை என்பது மே 17ஐப் போலவும் அதற்கு முன்னரான காலத்தைப் போலவும் அவலம், துயரம், அரசியல் சூனியம், அலைச்சல், அகதி வாழ்வு போன்ற அத்தனை நெருக்கடிகளுடனும் பிரச்சினைகளுடனும் தான் நீள்கின்றது. முகாம் வாழ்க்கை, மீள் குடியேற்றத்திலும் அகதிநிலை, உயர்பாதுகாப்பு வலயங்களால் ஊர்களை இழந்த நிலை என்று இந்தப் போர் நீண்டு செல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக