புதன், 19 மே, 2010

நாம் தமிழர் இயக்கம் கட்சியானது

தமிழீழ பற்றாளர் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் இயக்கம் நேற்று மதுரையில் ஓர் அரசியல்கட்சியாக பரிணமித்தது ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் வந்திருந்ததாக செய்திகள் கூறுகின்றன. மாநாடு ஆரம்பிக்கும் முன் விரகனூர் சுற்றுவட்ட சாலை அருகே, தியாகி முத்துக்குமார் நினைவு நுழைவாயிலிலிருந்து பேரணி துவங்கப்பட்டது. மாலை 5 மணிக்குத் துவங்கிய இப்பேரணி, 7.30 மணிக்குப் பிறகும் தொடர்ந்தது.
 ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழத் தனியரசு அமைப்பதே என்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த மாநாடு துவங்கும் போது, போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசு மற்றும் ராஜபக்சேக்கு சர்வதேச நெருக்கடி ஆய்வுக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, போர்க்குற்றவாளி ராஜபக்சே, அவருக்கு துணை நின்ற சர்வதேச சக்திகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதைச் சித்தரிக்கும் வகையில் நாம் தமிழர் அமைப்பினர் நாடகம் நடத்தினர். கடந்த மே 17 மற்றும் 18-ம் தேதிகளில் வன்னியில் நடந்த இறுதிப் போரில் பல்லாயிரம் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அந்த நேரத்தில் இயக்குநர் சீமானால் துவக்கப்பட்டதுதான் நாம் தமிழர் இயக்கம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் முடிந்து ஒரு ஆண்டு நிறைவுறும் இந்த தருணத்தில் நாம் தமிழர் இயக்கத்தை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றுவதாக அறிவித்தார் சீமான். அதன்படியே இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றம் அடைந்தது. தமிழர் இறையாண்மை மீட்பே நமது வாழ்வின் லட்சியம், ஈழப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி தமிழீழம்தான், தமிழை எங்கும் வாழ வைப்போம், உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் பாடுபடுவோம். என்ற முழக்கத்துடன் மா நாடு முடிவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக