செவ்வாய், 15 ஜூன், 2010

இந்தியா தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளமையே மிகுதியாகியுள்ளது.......................

தமிழ் மக்கள் மீது குண்டுமழை பொழிந்தபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவுக்கு தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் எண்ணம் கிடையாது.
இதை உணர்ந்துகொள்ளாத தமிழ்த் தலைவர்கள் இந்தியாவையே நம்பிக்கொண்டிருப்பதும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதும் நாகரிகமானதல்ல என்று ஐக்கியதேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் எம்.பி.யுமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரவி கருணாநாயக்க எம்.பி. தலைமையிலான அரசியல் குழு ஒன்று நேற்று திங்கட்கிழமை வன்னிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
வடக்கை பொறுத்த வரையில் வன்னி மக்களின் நிலைமைகள் துக்ககரமானவை. இந்த நிலைமைகளுக்கு மத்தியில் இந்தியாவின் தலையீட்டை வலியுறுத்தியும் இனவாதப் போக்குடனான கருத்துக்களை வெளியிட்டும் வருகின்ற ஒரு சில அரசியல் தலைமைகளால் நாட்டில் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கின்றன.


தேசிய பிரச்சினை உருப்பெற்ற காலம் முதல் இதுவரையில் இந்திய தலையீடுகள் செய்துள்ள நன்மையான காரியங்கள் என்ன வென்பதை உணரமுடிகின்றதா? அல்லது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதா என்பதெல்லாம் கேள்விக்குரியவை.
இது வரை காலம் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளமையே மிகுதியாகியுள்ளது. இதனை உணர்ந்திருந்தும் ஒரு சில தமிழ்த் தலைமைகள் தான்தோன்றித்தன மாக நடந்து கொள்வது நல்லதல்ல.


குறைந்த பட்சத்தில் தமிழ் மக்கள் மீதும் அவர்களது வாழ்விடங்கள் மீதும் குண்டு மழைகள் பொழிந்த சந்தர்ப்பத்தில் இந்தியா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே தவிர அந்த அழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்ததா என்பதனையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.


ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரையில் அது என்றும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற கட்சியாகும். இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய சகல இனத்தவர்களும் சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதையே விரும்புகின்றது. ஆனாலும் ஒரு சில சக்திகள் இனவாதப் போக்கை கடைப்பிடித்து வருகின்றமை எமது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல.


இதனை ஒவ்வொரு தலைமையும் உணர வேண்டிய கடப்பாடு தற்போது எழுந்துள்ளது. இந்தியாவின் தலையீடு அவசியம் என்று கூறுகின்ற இன்றைய காலகட்டத்தில் அதன் நகர்வுகளும் நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் அமைய வேண்டும். அதேபோல் இந்தியா ஒளிவுமறைவின்றி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளது. ஏனெனில் இந்தியாவினாலேயே மீண்டும் பிரச்சினைகள் தலை தூக்கி விடக்கூடாது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.


எனவே தான் இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிடுமாக இருந்தால் அதன் தலையீடுகளும் பேச்சுக்களும் சிறுபான்மைக் கட்சிகளுடன் மாத்திரம் மேற்கொள்ளக் கூடியதாக அமையக் கூடாது என்பதை நாம் வலியுறுத்தி வருகின்றோம். இந் நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகத்தினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாக இருக்கின்றது. அதனடிப்படையிலேயே எமது செயற்பாடுகளும் அமைந்துள்ளன.


எந்த சக்திகளாலும் இந்நாட்டில் இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாரில்லை என்றார். ரவி கருணாநாயக்க தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக