புதன், 4 ஆகஸ்ட், 2010

இறுதி போர் முடிந்து ஒருவருடம் கடந்து பல மாதங்களாகியும் விட்டது இக்கால காலகட்டம் வரைக்கும் தமிழருக்குள் நிகழ்ந்த முன்னேற்றம்தான் என்ன?

தேசியத்தின் பெயரால் ஒருவர் மீது ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தியதும் காட்டிக்கொடுத்ததும் எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டதும் தான் மிச்சம்.



ஆனால் அரசு யுத்தத்தின் பின்னரான தமிழருடனான அரசியல் போரிலும் பூரண வெற்றி கண்டுள்ளதை அறிவுள்ள, சுயநலமற்ற தமிழன் ஏற்றுக்கொள்வான்.


இந்த பந்தியில் சுட்டிக் காட்டுவதற்கு ஏராளம் உண்டு, ஆனால் எந்தளவிற்கு கருத்து உள்வாங்கப்பட்டு புத்தியடைவார்கள் என்பது கேள்விக்குறி?


பல நாடுகளிலும் சிதறிவாழும் எம் இனம் அந்தந்த நாடுகள் தமது மொழியை விட்டுக் கொடுக்காமல் உள்ளதை அறிவார்கள். தமிழ் எவ்வளவு அழகான மொழி என்பதை அந்தந்த நாடுகளில் இருப்போருக்கு நன்கு புரியும். எனினும் எமது அன்றாட வாழ்வில் தாய்மொழியை கொலைசெய்து அன்னிய மொழியில் உரையாடுவது இன்பமாக உள்ளது. இந்த நோய் தாயகத்தில் வாழ்வோருக்கு அதிகமாகவே உள்ளது.


இப்படி நடக்கும் முதற்கொலையை தவிர்க்க முடியாது என்று வைத்தாலும். தாயகத்தில் நிகழ்வது என்ன? யாருமே இல்லையா? அறிவாளிகள் எங்கே? ஜனநாயக விரோதிகள் என்றவர்கள் எங்கே? பாசிச புலிகள் என்றவர்கள் எங்கே? தமிழ் தேசியம், தேசப் பற்று, மாமனிதன் என்றவர்கள் எங்கே? எங்கே? எங்கே?


இன்றைய பொருளாதாரம் சூறையாடப்படுகின்றது, தமது மண்ணில் வாழும் தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகின்றது. அபிவிருத்தின் பெயரால் வளம் சுரண்டப்படுகின்றது, சூழல் மாசுபடுத்தப்படுகின்றது, பசுமை அழிக்கப்படுகின்றது. எங்கே தமிழ் கல்விமான்கள்? எங்கே அறிவாளிகள்? எங்கே அவர்கள்?


தொழில் அடிப்படையில் சாதிபிரிக்கப்பட்டதா? சாதி அடிப்படையில் தொழில் பிரிக்கப்பட்டதா? புலம் பெயர்ந்து வாழும் உறவுகளே நீங்கள் எந்த சாதியோ எல்லாருக்கும் பொதுவானது அடிமை வேலை தானே? வெள்ளையனுக்கு கீழ் தானே எல்லாம்? ஏன் இன்னும் சாதியை கொண்டு எமது இனத்தை அழிக்கிறீர்கள்? பொருளாதாரரீதியாக!


சாதியை தூக்கி வீசியிருந்தால் சிங்களவன் வருவான வீதி அமைக்க? அல்லது கட்டடம் கட்ட? எம் மண்ணுக்கு..


எமது வளம் பனை பனை என்கிறீர்கள் எமது வளத்தை எதிரி அழிக்கிறான் என்கிறீர்கள் எவன் மரம் ஏறுகிறவனை மதித்தான்? எவன் இன்று மரம் ஏறுகின்றான்? நாளை ஜப்பான்காரன் வருவான் “கோட் சூட் ரை”யுடன் மரம் ஏறி பதனீரை தகரத்தில் அடைத்து தருவான் வெளிநாட்டு காசை அனுப்புங்கள் உங்கள் உறவுகள் வாங்கி குடிக்கட்டும்!


எத்தனை தோட்ட நிலங்கள் சீமெந்தினால் மொழுகப்பட்டுள்ளன தெரியுமா? தோட்டம் செய்வது வெட்கம் கடையில் கொழும்பு மரக்கறி வாங்கி சமைப்பது கௌரவம் எம்மவர்க்கு!


சீதனக் கொடுமையினால் எங்கள் பிள்ளைகள் திருமணம் இன்றி கிடப்பில் இருப்பது எந்தப் பெரிய இனப்படு கொலை தெரியுமா?


நாம் சிறுபான்மையானதற்கு காரணம் என்ன? சிங்களவன் அழித்தானா? சாதி,சாத்திரம்,சாதகம்,சீதனம் என பல தடைகளை தாண்டி திருமணம் செய்வது தானே காரணம்.


எம்மை பட்டினி போட்டது என்ன? எமது பதுக்கள் வியாபாரம் தானே?


எமது குழந்தைகள் பாலின்றி அழுதது ஏன் பசுமையை மறந்தது தானே?


நாம் இருக்க இடமின்றி அலைந்தது ஏன்? வாடகையை வட்டியும் குட்டியுமாக கேட்டது தானே?


இன்று அகதியான எமக்கு வீடு கிடைக்காதது ஏன் உன் சகோதரனை கலைத்துவிட்டு அன்னியனின் பணத்தில் ஆசைப்பட்டதால் தானே?


புலம் பெயர்ந்து இரத்தத்தை இயந்திரத்துக்குள் வறுத்து தேசத்தின் விடிவு என்று தன்னை மாய்த்த உன் உடன் பிறப்பு இன்று நித்திரை விழிப்பது எதனால்? நீ பணத்தை சுருட்டி ஒரு வீட்டையா வாங்கினாய் பல வீட்டையும் வாங்கி திரையரங்குகளையும், தொழில் நிறுவனங்களையும் அல்லவா வாங்கினாய். கொத்துக் கொத்தாக தம்மையும் ரொட்டியாக்கி தேசத்தின் மானம்காக்க இன்று வரை உண்மையான போராளியாக போராடும் அவர்கள் உன்னை நம்பியல்லவா இருந்தார்கள்?


ஓய்வு பெற்றபின்னும் பதவியை நீட்டிப்பதற்கு அமைச்சரின் காலுக்கு ஒத்தடம் கொடுக்கிறியே? உன் சேவைக் காலத்தில் மக்களுக்கு என்ன செய்தாய்? பற்றை வறுகுகளுக்குள் வாசிக சாலைகளையும், ஓய்வு மண்டபங்களையும் கட்டி சம்பாதித்தது உனக்கு போதாதா? பழைய பூங்காவின் பழைமைவாய்ந்த சுவரை சில லட்சம் ரூபாவிற்காக இடித்து கட்டி உன் சந்ததியை வெளிநாட்டுக்கு மேற்படிப்புக்கு அனுப்பிவைத்தது உனக்கு பெருமைதான் ஆனால் எம் நிலத்தின் பெருமை எங்கே? உன் சட்டைப் பையுக்குள்ளா? அப்பாவிகளின் நிவாரண அட்டையில் நீயும் நிவாரணம் பெற்று வசதியாக வாழ்ந்த சுவை மீண்டும் தேவைப்படுகின்றதோ? உன் பிள்ளை உத்தியோகத்திற்கு ஏங்குவது போல தானே அடுத்தவன் பிள்ளையும் பல படிகள் ஏறி இறங்குகிறான் என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?


மீண்டும் சுனாமி அடிக்காதோ? மீண்டும் யுத்தம் தொடங்காதோ? என ஏன் வேண்டுகின்றாய்? மாடிவீடும் உத்தியோகமும், வெளிநாட்டு உதவியுமுள்ள உன் சகோதரங்களுக்கு மீண்டும் ஒரு வீடு கட்டிக் கொடுக்கவா கனவு காண்கிறாய்.


உன் இனம் இப்படி அழிந்து கொண்டிருக்கிறது நீ இன்னும் புலி பாசிசம் பாடிக் கொண்டிருக்கிறாய்? யாருக்காக புலம்புகிறாய்?


உயிரோடில்லாதவர்களின் கதை உனக்கெதற்கு? உயிரோடு இருக்கும் உன் உறவுகளுக்கு அறிவு பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க மாட்டாயோ?


நீயும் கொலைபாதகத்தில் வளர்ந்தவன் தானே உனக்கேது அறிவு? கொள்ளையடிப்பவனை மக்கள் முன் வெளிக் கொண்டுவா, மக்கள் விழிப்படைவார்கள் உன்னை புகழ்வார்கள்.


நானே நடுநிலைமைவாதி, நானே அதிகார பூர்வதமிழன் என மார்தட்டுபவனே உன்னிடம் ஊடக தர்மம் உண்டா? நிச்சயமாக அது இருந்திருந்தால் இன்றைய நிலை தோன்றியிருக்குமா?


அன்று பிரிந்து சென்றவர்களை உன் தியாகத்தால் தடுத்திருக்கலாம் அல்லவா சுயநலவாதியே? இணையத் தளம் வழியே உன் இனத்தை நீயே கூறுபோடுவது தகுமோ? உண்மைக் குரலை நீ ஒலிப்பாயோ? முகத்தை காட்ட துணிவற்ற நீ அடுத்தவனின் தனிவாழ்வை வெளிச்சம் போட்டு காட்டுவது தான் ஊடகம் என்று எங்கு கற்றாய்?


மக்களுக்கு போதிக்க நினைக்கும் நீ ஒரு வழியை மட்டும் காட்டி மறுவழியை காட்ட மறுப்பது ஏன்? உன் ஊடக வியாபாரம் உடைந்திடும் என்ற அச்சமோ? நீ உறுதியாக இருந்தால் உன்னை யாரும் உடைக்க முடியாது என்ற நம்பிக்கை உனக்குள் இல்லையா?


ஐயோ!!! இன்னும் எத்தனை உண்டு, எங்கள் இனம் எப்போது உணரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக