வியாழன், 26 ஆகஸ்ட், 2010

மருத்துவ பீட மாணவன் சாரங்கன் தற்கொலையா.? கொலையா ?

வைத்தீஸ்வரன் - சாரங்கன் கடந்த பொது தேர்தலின் போது ஈ.பி.டி.பி அமைப்பிற்கெதிரான பிரச்சார வேலைகளை முன்னின்று செயற்படுத்தியொருவர் ஜனாதிபதி ராஜபக்சவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்க்கு எதிராக யாழ் குடா நாட்டில் களமிறக்கபட்ட அங்கஜன் - இராமநாதனின் நெருங்கிய நண்பனே மாணவன் சாரங்கன் என்பதும். ஜனாதி பதிராஜபக்சவினால் அண்மையில் யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளராக அங்கஜன் தெரிவு செய்யபட்ட நிலையில் அவரின் நெருங்கிய நண்பனின் மரணம் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது


யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடம் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மகுடம்.மருத்துவர்களை உருவாக்கும் அரும்பணியை அந்தப்பீடம் செய்வதனால் அதற்கு அத்துணை மதிப்பு. தற்போது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம் என்றாலே பயமும் ஏக்கமும் வரும் அளவிற்கு அங்கு ஏதோவொரு வகையிலான அமுக்கம் - அழுத்தம் - மனவெறுப்பு -அன்னியோன்னியமற்ற உறவுநிலை இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். மருத்துவபீடத்தைச் சேர்ந்த மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்களே இத்தகையதொரு மனநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மருத்துவபீட மாணவர்கள் நால்வர் தற்கொலை செய்து கொண்டமை மிகப்பெரும் வேதனையையும்
தாங்கமுடியாத அதிர்ச்சியையும் தருவதாகும். உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானத்துறையில் சிறப்பாகச் சித்தியடைந்து, இந்த நாட்டில் இருக்கக்கூடிய தரப்படுத்தல் - மட்டுப்படுத்தல் என்ற வரையறைகளைக் கடந்து மருத்துவக் கற்கைநெறிக்கு தெரிவாகிய பின்னர், யாழ்ப் பாண மருத்துவபீடத்தில் கற்றுக் கொண்டிருக்கும் வேளையில், பரீட்சைப் பெறுபேறுகள் திருப்தியாக அமையவில்லை என்ற காரணத்துக்காக மருத்துவத்துறை மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதென்பது எந்தளவிற்கு ஏற்புடையது - நியாயமானது என்பதை பொறுப்பானவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பரீட்சையில் சித்தியடையவில்லை என்பதற்காகக் தற்கொலை செய்வதென்ற முடிபை ‘இனிமேல் முடியாது’ என்ற மனநிலையில் மட்டும் நின்று எடுப்பது அல்ல.மாறாக தனது சித்தியின்மை பற்றி தனது விரிவுரையாளர்களுடனோ அன்றி தனது சகமாணவர்களுடனோ கதைத்து சீர்மியப்பட முடியாதென்ற துணையற்ற - வெறுமைநிலை ஏற்படுகின்றபோது எடுக்கப்படுவதாக இருக்கும்.

இவற்றைப் பார்க்கும்போது யாழ்ப்பாண மருத்துவபீடத்தில் சுமுகமான உறவுநிலைக்கு - ஆற்றுப்படுத்தலுக்கு - ஆறுதல் வார்த்தை கூறு வதற்கு - இடர்படும் இடத்தில் தூக்கி விடுவதற்கு பெரும் பஞ்சம் உண்டு என்பதை உணரமுடிகின்றது. ஆக, தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி, கறுப்புக்கொடி, அஞ்சலியுரை, அனுதாபம் என்ற பட்டோலையை வாசிப்பதுடன் கடமை முடிந்ததாக நினைக்காமல், உள்ளிருக்கும் புரியாப் பொருளை புரிந்து கொண்டு - தெளிந்துகொண்டு செயற்படுவதே வேதனை தரும் துர்மரணங்களை தடுக்கும் வழியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக