செவ்வாய், 30 மார்ச், 2010

வன்னியில் பெய்த கடும் மழையால் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்

வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்ட்ட கிராம மக்கள் நேற்றும், நேற்று முன்னாளும் பெய்த மழை காரணமாக பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி தெரியவருவதாவது:- இலங்கைப் படையினரால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் நீண்ட காலமாக வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் மீளக் குடியமர்வதாக அறிவிக்கப்பட்டு அவர்களின் பகுதிகளுக்கும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம மக்கள் நேற்றும், நேற்று முன்னாளும் பெய்த மழை காரணமாக பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு 12 தகரங்களும், 5தீராந்திகளும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகள் அனைத்தும் முழுமையாக சிதைவடைந்துள்ள நிலையில் வழங்கப்பட்ட தகரங்களைப் பயன்படுத்தி மரங்களுக்குக் கீழே கொட்டில்கள் அமைத்தே வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு பாரிய அளவில் நிலவுகின்றது. பழைய கிணறுகளை இறைப்பதற்கான எந்தவித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மல சல கூடங்கள் இல்லாத நிலையில் மக்கள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். பல இடங்களில் ஆற்று நீரை மக்கள் குடிநீராகப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் வன்னியின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மிகச் சிறிய காவலரண் முதல் மிகப் பெரிய படை முகாம் வரை அனைத்தினது கூரைகளுக்கும் ஓடுகள் போடப்பட்டே படையினர் நிலை கொண்டுள்ளனர். வன்னி இடப்பெயர்வுகளின் போது மக்களால் ஓடுகள் கழற்றப்படவில்லை என்பது நோக்கத் தக்கது. இந்த நிலையில் மக்களது எஞ்சிய வீடுகள் ஓடுகள், வீட்டு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தகரங்களில் அமைக்கப்பட்டுள்ள கொட்டில்களுக்குள் தண்ணீர் சென்றதாகவும், குழந்தைகள், பெரியோர்கள் தடிமன் உட்பட்ட நோய்த் தாக்கங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மழையானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வன்னியில் மக்கள் எதிர்கொண்ட பாரிய அவலத்தை தமக்கு நினைவூட்டியதாக தற்போது வன்னியில் மீளக் குடிமயர்ந்த இளந் தாய் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் நந்திக்கடலுக்குச் சமாந்தரமான களப்பு பகுதியில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு நாள் பெய்த கடும் மழையால் அனைத்து வீடுகளுக்குள்ளும் முழங்கால் வரையில் தண்ணீர் புகுந்ததால் இரவுப் பொழுதுகளை குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி நின்று கொண்டே கழித்தனர். அந்த வேளையில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பதுங்குகுழிகளுக்குள் செல்ல முடியாமலேயே நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக