ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

இந்து சமுத்திரத்தின் கேந்திரமுக்கியத்துவமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய் தெரிகின்ற இலங்கைத் தீவு, இன்றைய பூகோள அரசியலில், வரலாற்றில் என்றுமில்லாத கவனத்திற்குரிய ஒரு நாடாக மாறியுள்ளது. சுமார் மூன்று தசாப்தகாலமாக இனக்குழும மோதுகை இடம்பெற்றபோது, சுனாமி பேரனர்த்தம் சம்பவித்த போது, ஏன் சுமார் 40 ஆயிரம் மக்கள் குறுகிய சில நாட்களுக்குள் படுகொலைசெய்யப்பட்ட போது காட்டாத அக்கறையை இன்று சர்வதேச சமூகம் செலுத்துவதற்கான காரணம் என்ன? இலங்கைத் தீவைச் சார்ந்த பெரும்பாலானவர்களுக்கு தமது சிறுபராயத்திலேயே இதற்கான விடை தெரிந்திருந்தது. அதாவது, இலங்கைத் தீவானது இந்து சமுத்திரத்தின் முத்து என சிறு வயதிலிருந்தே பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதனுடைய ஆழ அகலங்களை, அது பூகோள அரசியலில் செலுத்தக்கூடிய தாக்கங்களை, அதனால் புதிய உலக ஒழுங்கில் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆக்கபூர்வமான முறையில் ஆய்வு செய்திருக்கவில்லை அல்லது செய்துகொள்ளப்பட்;ட ஆய்வுக்கமைய தமிழ்த் தேசிய அரசியல் நகரவில்லை என்ற சிந்திப்பு இன்றைய சூழலில் தவிர்க்க முடியாததாகிறது.

 கடந்த மே 18 ற்குப் பின்னர் பூகோள அரசியலில் இலங்கைத் தீவு காட்டிவரும் வகிபாகம் இந்த சிந்திப்பிற்கான வலுப்படுத்தல் காரணி. இதனடிப்படையில், எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தை ஆய்வுக்குட்படுத்துவோம். இலங்கைத் தீவினுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தன்மை, சர்வதேச சக்திகளின் நலன்களை பூர்த்தி செய்வதற்கான ஒரு வடிகாலாக இருந்து வருகிறது. இதன் நிமிர்த்தமே இலங்கைத் தீவில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படவேண்டும் என்பதில் சர்வதேச சக்திகள் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த கவனச்செலுத்தியே சமகால பூகோள அரசியலில், இலங்கைத் தீவானது பேசுபொருளாக மாறியிருப்பதற்கான காரணமாகிறது. பூகோள அரசியலில், பல்வேறு சர்வதேச சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லது ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. இது பலதுருவ அரசியல் பொருளாதாரப் போட்டிகளுக்கு கால்கோலாகிறது. ஆனால், எல்லா ஆதிக்க சக்திகளும் தாம் மட்டும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒரு மைய அரசியலையே விரும்புகின்றன. அதற்காகவே முனைப்புக் காட்டி வருகின்றன. இதனடிப்படையிலேயே குறிப்பிட்ட நாடுகளின் வெளியுறவுக் கொள்கையும் அமைகிறது. பல சர்வதேச சக்திகளின் ஒரு மையக் வெளியுறவுக் கொள்கை முட்டிமோதும் களமாக இலங்கைத் தீவு மாறியிருக்கிறது. இன்றைய நிலையானது இராஜபக்ஸ நிர்வாகத்துக்கு குறுங்காலத்துக்கு சாதகமானதாக இருக்காலம். ஆனால், இலங்கைத் தீவினுடைய எதிர்காலத்துக்கான ஒரு புதைகுழி தோண்டும் நடவடிக்கையாகவே அரங்கேறி வருகிறது. ஏனெனில், இலங்கைத் தீவில் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கும் ஒவ்வொருதரப்புமே தத்தமது தனிப்பட்ட தேசியநலனை கருத்திற்கொண்ட செயற்படுகின்றன. ஆனால், தனிப்பட்ட தேசிய நலன்களுக்கிடையில் ஒரு பொதுமையப் புள்ளி உருவாகவில்லை. ஆதலால், முரண்பாடுகள் தோற்றம் பெற்றுவருகின்றன. இந்த முரண்பாடென்பது இலங்கைத் தீவில் யார் செல்வாக்கு செலுத்துவதென்பது என்பதில் ஆரம்பமடைகிறது. ஏனெனில், இலங்கத் தீவானது இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு தேசமாக திகழ்கிறது. ஆபிரிக்காவினதும், அவுஸ்ரேலியாவினதும் தென்முனையில் 10000 கிலோ மீற்றர் விசாலமானதாக இந்து சமுத்திரம் பரிணமித்திருக்கிறது.

 இந்த இந்து சமுத்திரமானது அந்தமான் கடல், ஆபிரிக்கக் கடல், வங்காள விரிகுடா, ப்புளோரஸ் கடல், பெரிய அவுஸ்ரேலிய வளைவு, எதேன் வளைகுடா, ஓமான் வளைகுடா, ஜவாக் கடல், மொசாம்பிக் கால்வாய், பெர்ஸ்சியன் வளைகுடா, செங்கடல், சவுகடல், மலாக்க நீரிணை மற்றும் தீமோர் கடல் போன்றவற்றை உள்ளடக்கி பிரமாண்டமாக பரிணமித்திருக்கிறது. நாற்பத்து ஏழு நாடுகள் இந்து சமுத்திரத்தை தமது கடற்கரைகளாக அல்லது கடல் எல்லைகளாக கொண்டுள்ளன. எட்டு நாடுகளிற்கு உரித்துடைய பிரதானமான பன்னிரெண்டு துறைமுகங்களை இந்து சமுத்திரம் உள்ளடக்குகிறது. மத்திய கிழக்கு, கிழக்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடன் இணைக்கும் ஒரு பிரதான கடலாக இந்து சமுத்திரம் திகழ்கிறது. ஜப்பானுடைய 80 சதவீத எண்ணையும், சீனாவினுடைய 60 சதவீத எண்ணையும் மலாக்க நீரிணையூடாவே விநியோகிக்கப்படுகின்றன. சுமார் 70 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணை விநியோகம் குறித்த நீரிணையூடாக இடம்பெற்று வருகிறது. அண்ணளவாக 40 சதவீத எண்ணை வளமானது இந்து சமுத்திர கரைகளுக்கு அப்பாலிந்தே உற்பத்தியாகிறது. உலகில் இடம்பெறும் பெரும்போர்களுக்கு எண்ணை ஒரு பிரதான காரணமாக இருப்பதையும், இந்து சமுத்திரத்தில் மலாக்க நீரிணை இருப்பதையும் நினைவிற்கொள்க. இந்து சமுத்திரத்தை கட்டுப்படுத்துபவர்களாலேயே ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தமுடியும். இருபத்தோராம் நூற்றாண்டின் பிரதானமான ஏழு கடல்களுக்கு இந்து சமுத்திரமே மிக முக்கியமானது. உலகினுடைய தலைவிதி என்பது இந்த சமுத்திரத்திலேயே நிர்ணயிக்கப்படும் என்று அமெரிக்காவின் முன்னால் ரியல் அட்மிரல் அல்பிரேட் தயார் மஹான் தெரிவித்திருந்தார். இலங்கைத் தீவினுடைய கேந்திரமுக்கியத்துவம் என்பது இந்து சமுத்திரத்திலும், ஆசியாவிலும் அமைந்திருப்பதால் இரட்டிபுப் பெறுமதியடைகிறது.

1942 ல் சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ச்சிகண்ட போது, பிதித்தானியாவின் தென் கிழக்கு ஆசியா பிரதான தளமாக இலங்கைத் தீவு மாற்றமடைந்தது. பிரித்தானியாவின் பொக்கிசமாகிய திருகோணமலைத் துறைமுகம், ஜப்பானால் தாக்கியழிக்கப்பட வேண்டிய இலக்காகியது. இது போன்ற விடயங்களை நன்கு விளங்கிக்கொண்டதாலேயே, அண்மையில் நடைபெற்று முடிந்த உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் உரையாற்றிய பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் திரு.டேவிட் மிலிபான்ட் அவர்கள், தென்னாசியாவின் எதிர்காலத்திற்கு இலங்கைத்தீவினுடைய எதிர்காலம் என்பது முக்கியமானது. எத்;தகைய வெளிவிவகார செயலாளர்களும் இங்கு பிரசன்னமாகி இருக்க வேண்டும். அத்துடன், மேற்கொண்டு செல்வதற்கான ஆதரவையும் நல்க வேண்டும் என தெரிவித்திருந்தார். போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரித்தனியார் என பல்வேறு தரப்புக்களால், காலத்துக்குக் காலம் வௌ;வேறு தரப்பினரால் ஆளுகைக்குட்படுத்தப்பட்ட இலுங்கைத் தீவானது, அதனுடைய சுதந்திரத்தோடு தனது வராலாற்றை இன்னொரு அத்தியாயத்துக்கு நுழைத்துக்கொண்டது. அந்த நுழைவு, தேசிய பாதுகாப்பு, இறைமை மற்றும் ஆட்புல ஓருமைப்பாடு போன்ற காரணங்களை காட்டி தனது தேசத்து மக்களையே அடக்குமுறைக்குட்படுத்த தொடங்கியது. அந்த அடக்குமுறை வடிவத்தையும், அதன் விளைவுகளும் தமிழ் மக்களை கடும் அவல வாழ்வுக்குள் தள்ளியது. அந்த இருள்படிந்த வரலாற்றின் சாட்சியாக நிகழ்காலம் காட்சி தருகிறது. இருப்பினும், நிகழ்காலத்தின் பல சதுரங்க காய் நகர்த்தல்களில் சர்வதேச சக்திகளின் வகிபாகமும் அதன் இயக்கவியலும் தமிழ் தேசிய தரப்புகளால் சரிவர எடைபோடப்பட்டு அதற்கேற்ற வகையில் காய்கள் நகர்த்தப்படவில்லை. இலங்கைத் தீவிற்கென்று நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர எதிரியுமில்ல. மாற்றம் என்ற ஒன்றைத் தவிர ஏனைய அனைத்துமே மாறும். காலமும் காட்சியும் மாறுவது வரலாற்றுச் சுற்றோட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம். துரதிர்ஸ்டவசமாக, அந்த மாற்றங்களில் என்றும் அதிகம் பாதிக்கப்படும் தரப்பாக தமிழ் மக்களே இருந்து வந்துள்ளார்கள். இராஜதந்திர கையாள்கைகளில் உண்டான சறுக்கல்களே தமிழ் மக்கள் சந்தித்து நிற்கின்ற சவால்களுக்கு காரணமகியுள்ளது. ஆனால், இந்த காரணத்திற்காக, இனிவரும் காலத்தையும் தமிழ் மக்கள் கைவிட்டுக்விடக்கூடாது. தமிழ் மக்கள் சந்தித்துள்ள சவால்களுக்கு மறுபுறமாக புதிய சந்தர்ப்பங்களும் உருவாகி வருகின்றன. ஆனால், இது தமிழ் மக்கள் தமது உளவுரணை அல்லது மனோதிடத்தை வலுப்படுத்துவதனூடகவே தமக்கு சாதகமாக இதனை மாற்றியமைக்கலாம். ஏனெனில், இலங்கைத் தீவில் ஆதிக்கம் செலுத்துவதனூடாக ஆசியாவிலும், இந்து சமுத்திரத்திலும் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சக்திகளுக்கு வடகிழக்கையும், அங்கு வாழும் மக்களையும் தமக்கு சார்பாக கையாள வேண்டிய ஒரு அவசியத் தேவையெழுந்துள்ளது. அதேவேளை, சர்வதேச சக்திகளினதும் ஆதரவு தமிழ் தேசியத்தின் மறுமலர்ச்சிக்கு அவசியமானது. ஆகவே, தோற்கடிக்கப்பட்டவர்கள் என்ற மனோநிலையில், தமிழ் தேசியத்தின் அடுத்த கட்ட அரசியலை நகர்த்தாமல், இன்றைய பூகோள அரசியலின் நெளிவு சுழிவுகளை அறிந்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தி ஒருவருக்கொருவர் இணைவாக தங்கிவாழ்தல் அல்லது பரஸ்பர நன்மை பெறல் என்ற அடிப்படையில் புதிய கட்ட துணிகர அரசியலுக்கு வித்திடவேண்டும். ஏனெனில், தமிழ் மக்களின் மறுமலர்ச்சிக்கான சந்தர்ப்பங்கள் இன்னமும் காணப்படுகின்றன. இழந்து போனதை நினைத்தால் துக்கம், அழிந்து போனதை எண்ணினால் அழுகை, ஆனால் எதிர்காலம் ஏக்கமாக இருந்து விடக்கூடாது. இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்தாகவுள்ளவரை, தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் மட்டுமல்ல பல அரிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அதனை எவ்வாறு சரிவர பயன்படுத்துவதென்பதிலேயே தமிழ்மக்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது. ஆசியாவினதும், இந்து சமுத்திரத்தினதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியிலே வாழ்ந்துகொண்டிருக்கும் முக்கியத்துவம் மிக்க மக்கள் என்பதை மனதிலிருத்தி, பறிபோகின்ற நிலத்தையும், மீதமாயுள்ள உயிர்களையும் பாதுகாப்பதற்காக தமிழ் மக்கள் தமது மனோதிடத்தையும், ஆத்மபலத்தையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவையுள்ளது. ஏனெனில், தமிழ் மக்களுக்கான சிறந்த எதிர்காலத்தை பெறுவதற்கான அடிப்படையாக அந்த மனோதிடமே இருக்கப் போகிறது. ச.பா.நிர்மானுசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக