ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

வீழ்ந்தவர்களைத் தூக்குதல்


புலம்பெயர் தமிழர்களின் கவனத்துக்காக ஒரு முக்கிய குறிப்புரை
இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள் எதுவும் தீரவேயில்லை. அவை இப்போதைக்குத் தீரப்போவதுமில்லை. அதற்குரிய களச்சூழலும் அரசியல் நிலைமையும் இலங்கையில் இப்போதில்லை. அதை முன்னெடுக்கக்கூடிய அரசியல் தலைமைகள்கூட தமிழர்களிடமும் சிங்களவர்களிடமும் இன்றில்லை என்பது சகலருக்கும் தெரிந்த உண்மைகள்.

'பிரச்சனைகள் தீரவில்லை என்றால், போராட்டம் தொடரும். அதுதானே விதி?' என்று சிலர் சொல்கிறார்கள். 'அந்தப் போராட்டம் வெவ்வேறு ரூபங்களில், வெவ்வேறு திசைகளில் நடக்கிறது' என்றும் சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர் சொல்கிறார்கள் 'அதுதான் நாடுகடந்த தமிழீழம்' என்று. இன்னும் சிலர் சொல்கிறார்கள் 'இந்தப் பிரச்சனைகளை வெளிப்படுத்தவும் தமிழ்ச் சனங்களுடைய அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தவும்தான் வட்டுக் கோட்டைத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்புகளை புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்துகிறார்கள்' என்று.

வேறு சிலரோ இதை வேறு விதமாக நோக்குகிறார்கள். 'இனித் தமிழ் பேசும் மக்களுடைய போராட்டம் என்பதும் அரசியல் என்பதும் இதுகாலவரையிலான அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு, புதிய உபாயங்களின் அடிப்படையில் அமையவேண்டும்' என்பது இவர்களுடைய அபிப்பிராயம். பத்திரிகைள், இணையத் தளங்கள் எல்லாம் இந்தமாதிரிச் செய்திகளை எழுதித் தள்ளுகின்றன் விவாதிக்கின்றன.

இதைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதோ அல்லது இதுபற்றி அபிப்பிராயம் சொல்வதோ இங்கே நோக்கமில்லை. இதையெல்லாம் விட மிக அவசிய, அவசரமான பல விசயங்கள் இப்பொழுது இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டவே இந்தக் குறிப்பு இங்கே எழுதப்படுகிறது.

இங்கே குறிப்பிடப்படும் விசயங்கள் மிகவும் முக்கியமானவை. எந்தவிதமான அபிப்பிராய பேதங்களுமில்லாமல் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவை மட்டுமல்ல, மனிதாபிமான ரீதியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ள வேண்டியவையும் கூட.

வன்னிப் போரின் பாதிப்புகள் உலகறிந்தவை. வன்னியிலிருந்த மூன்று லட்சத்து முப்பதினாயிரம் சனங்களும் போருக்குள் சிக்கிப் பெரும்பாதிப்புகளைச் சந்தித்தவர்கள். இதில் ஒரு குறிப்பிட்ட வீதத்தினர் மட்டும் (ஒரு ஆயிரம் பேர்வரை இருக்கலாம்) எப்படியோ இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர். ஏனையவர்கள் இலங்கையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் இலங்கையில்தான் தொடர்ந்தும் இருக்கப்போகிறார்கள். வேண்டுமானால் இதிலும் மிகக் குறைந்தளவானவர்கள் இலங்கையை விட்டு வெளியேறலாம்.

அப்படி அவர்கள் வெளியேறுவதாக இருந்தாலும் அது ஒரு ஆயிரம் இரண்டாயிரம் பேர்வரையில்தான் இருக்கும். எனவே இலங்கையில் இருக்கப்போகின்ற இந்த வன்னி மக்களின் நிலை எப்படி இருக்கப் போகிறது? இப்போது அது எப்படி இருக்கிறது என்று பார்க்கிறது இந்தக் குறிப்பு.

வன்னியிலிருந்த சனங்கள் தனியே, வன்னியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்களல்ல. ஒரு குறிப்பிட்ட வீதத்திலான சனங்களைத் தவிர, ஏனையவர்கள் வடக்கு, கிழக்கின் பல இடங்களிலிருந்தும் போராட்டத்தின்பால் வன்னிக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள். இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரித்ததால் பாதுகாப்புத் தேடி வன்னிக்கு இடம் பெயர்ந்தவர்கள். 1985 தொடக்கம் இவ்வாறு இடம் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 1990 களில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மக்கள் பெருவாரியாக வன்னிக்கு வந்தார்கள்.

அதுவும் காட்டுப்பாதைகளின் வழியாக பெரும் சிரமங்களைப் பட்டே இவர்கள் வந்திருந்தனர். வருகின்ற வழியில் நோயாலும் பாம்புக்கடி போன்ற அபாய நிலைமைகளினாலும் பலர் இறந்திருந்தனர். 1985 க்குப் பின்னரும் 1990 களிலும் கிழக்கில் நடந்த படுகொலைகளும் பாலியல் வன்முறைகளும் மிகக் கொடியவை. அதையெல்லாம் சந்தித்தே இந்த மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் நகர்ப்பகுதியிலிருந்தும் பலர் - குறிப்பாக போராட்டத்துடன் தம்மை நெருக்கமாகப் பிணைத்திருந்தோர் - வன்னிக்கு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்கள் எல்லாம்; எந்தப் பொருட்களையும் எடுக்க முடியாமல்; வெறுங்கையுடன் வன்னிக்கு வந்தவர்கள். அப்போதே அகதிகளாகவே வந்தவர்கள். அப்போதே தங்கள் குடும்ப உறுப்பினர்களை இராணுவத்தின் படுகொலையிலோ அல்லது போராட்டத்திலோ இழந்திருந்தவர்கள்.

இதைப்போல யாழ்ப்பாணத்திலிருந்தும் ஏறக்குறைய இரண்டு லட்சம் மக்கள் 1995 – 1996 காலப்பகுதியில் (யாழ்ப்பாண இடம் பெயர்வு) வன்னிக்கு இடம் பெயர்ந்திருந்தனர். ஆனால் கிழக்கிலிருந்து வந்த மக்களைப் போலல்லாமல், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ கொஞ்சப் பொருட்களையாவது எடுத்துவந்தார்கள்.

கிழக்குச் சனங்களைப் போல யாழ்ப்பாணத்தில் பெரும் படுகொலைகள் நடக்கவில்லை. யாழ்ப்பாணம் ஏற்கனவே போராளிகளின் கட்டுப்பாட்டிலிருந்த படியால் அத்தகைய அனர்த்தங்கள் குறைவாக இருந்தது. ஆகவே இவர்கள் குறைந்தளவு பாதிப்புகளுடன் இடம்பெயர்ந்திருந்தார்கள்.

எனவே வன்னியிலிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் ஏதோ வகையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் வன்னியில் நடந்த 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கை ஏற்கனவே பாதிப்புகளைச் சந்தித்திருந்த வன்னி மக்களில் பெரும்பாலானவர்களை மீண்டும் அகதிகளாக்கியது.

அத்துடன் அந்தப் போரை இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக எதிர்கொண்டுதான் நோர்வேயுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னான வெற்றியைப்பெற்றவர்கள். இதற்காக இந்தச் சனங்கள் சந்தித்த இழப்புகள் அதிகம். தவிர, பொருளாதாரத் தடைகள், போக்குவரத்துத் தடைகள் என்று ஏராளம் நெருக்குவாரங்களின் மத்தியில் வாழ்ந்தவர்கள் இந்த மக்கள்.

ஆக மொத்தத்தில் வன்னி மக்கள் இறுதி யுத்தத்தில் மட்டும் துன்பங்களைச் சந்திக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் மட்;டும் தங்கள் வாழ்க்கையை இழந்து போகவில்லை. அதற்கு முன்னரே பல தடவைகள், பல விதமான பேரிழப்புகளைச் சந்தித்தவர்கள். இறுதியாகச் சந்தித்த இழப்பு அவர்களை முற்றாக நிர்க்கதிக்குள்ளாக்கியது.

இந்த நிர்க்கதி என்பது இதுவரையிலும் தாங்கள் சந்தித்த இழப்புகளும் பாடுகளும் எதற்கும் பயனற்றுப் போனதே என்ற துக்கத்தினாலானது. அவர்களுடைய நம்பிக்கையே தகர்ந்து போனதால் ஏற்பட்ட நிர்க்கதி நிலை. மனிதர்கள் நிர்க்கதி ஆகுவது எப்போதென்றால், அவர்கள் தங்களின் நம்பிக்கைகளை இழக்கும் போதும் அவர்களுடைய நம்பிக்கைகள் சிதறும் போதும்தான். அத்தகைய நிலையோடுதான் அவர்கள் அந்த நிலத்திலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டார்கள்.

வன்னியை விட்டு இந்த மக்கள் வெளியேறும்போது வெறுங்கையுடன், காயப்பட்டவர்களாக, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களாக, கண்ணீர் சிந்தியவர்களாக, ஒட்டியுலர்ந்தவர்களாக, போக்கிடமற்றவர்களாக, போர்க்கைதிகளாக, தோற்கடிக்கப்பட்டவர்களாக எனப் பலவிதமான மிகக் கடினமான நிலைகளில்தானிருந்தார்கள்.

இவர்கள் வெளியேறிய காட்சிகளை இப்போது மீண்டும் ஒரு தடவை யாராவது நினைவிற் கொண்டு வந்து பாருங்கள். இதை நீங்கள் விரும்பாது விட்டாலும் அவசியங்கருதி இதைச் செய்யுங்கள். எப்படியான நிலையில் இந்தச் சனங்கள் வெளியேறினார்கள் என்பது தெரிகிறதல்லவா?

மூன்று லட்சத்து முப்பதினாயிரம் பேரையும் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் போது அவர்கள் உடுத்த உடுப்பைத் தவிர வேறு எந்தப் பொருட்களையும் கொண்டு வரவில்லை என்பது உலகறிந்த விசயம். பின்னர் மிகக் கடினமான முகாம் வாழ்க்கை. இப்போதும் அரைவாசிப் பேருக்கு மேல் முகாம்களில்தானிருக்கின்றனர். மிகுதிப்பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மீளக் குடியமர்வு மிக மோசமானது. (இதைப் பற்றித் தனியாக இன்னொரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன்).

மீளக் குடியமர்த்தல் என்ற பெயரில் எந்தவகையான உதவிகளுமில்லாமல், வெறுங்கையுடன் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். அதாவது எல்லாவற்றையும் வன்னியில் போர்க்களத்தில் இழந்து விட்டு, வெறுங்கையுடன் வெளியேறிய மக்கள் மீண்டும் வெறுங்கையுடன் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இப்படி இந்த மக்கள் வெறுமனே அனுப்பப் படுவதையும் உலகம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. இதையும் எங்கள் தமிழர்களும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றனர்.

இலங்கை அரசாங்கம் இப்படித்தான் செய்யும். அதற்கு இந்த மக்களைப் பற்றி என்ன கவலையுண்டு? ஆனால், இந்த மக்களின் நிலைமையை எடுத்துச் சொல்லி, இவர்களுக்கான தேவைகளைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே இருக்கிறது என உணர்த்துவதற்கோ நெருக்கு வாரங்களைக் கொடுப்பதற்கோ எத்தகைய பொறிமுறைகளையும் தமிழர் தரப்பிலிருந்து யாரும் செய்யவேயில்லை.

இதில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் கருணா, பிள்ளையான் தரப்பும் பிற தமிழ்க்கட்சிகளும் அடங்கும். அரசாங்கத்துடன் சேர்ந்திருப்பவர்களாலும் இந்த மக்களின் நிலைமைக்கு உதவ முடியவில்லை. அரசாங்கத்தை எதிர்த்துக் கொண்டு வெளியே நிற்பவர்களாலும் எதனையும் செய்ய முடியவில்லை. ஆகவே சனங்கள் எதையுமே செய்ய முடியாத பெரும் அவலநிலையில்தான் இருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் தாயக வேட்கைக்காகவும், எல்லாத் தமிழர்களினதும் விடுதலைக்காகவும் பாடுகளைச் சுமந்த மக்கள், உச்சமான தியாகங்களைச் செய்த மக்கள் இன்று எல்லோராலும் கைவிடப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் இந்த மக்களை இன்னும் புலிகளுடன் நின்றவர்கள் என்ற நோக்கில்தான் பார்க்கிறது. எனவே இவர்கள் இன்னுமின்னும் பாதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் சந்திக்கப் போகிறார்கள்.

அந்த வகையில்தான் இந்தச் சனங்கள் இப்போது பன்னிரண்டு தகரங்களுடன் கைவிடப் பட்டிருக்கிறார்கள். அதனால், இவர்கள் மீண்டும் மரநிழல்களின் கீழே, சுவரில்லாத கூரைகளின் கீழே இரவையும் பகலையும் கழிக்க வேண்டியிருக்கிறது. இறைக்க வசதியில்லாத நிலையில் பாழடைந்த கிணறுகளிலிருந்து தண்ணீரை எடுத்து துணியால் வடித்துக் குடிக்கிறார்கள். அதைத்தவிர வேறு என்னதான் செய்யமுடியும்?

இவர்கள் வேறு யாருமல்ல. விடுதலைக்காக தங்கள் வாழ்வைக் கொடுத்தவர்கள். தாயகக் கனவோடு வாழ்ந்தவர்கள். தமிழ் மக்களின் உறவுகள். எனவே சர்வதேசத்தின் அன்பும் கருணையும் இவர்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கவே முடியாது. மட்டுமல்ல, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கூட இந்த மக்களுக்கு உதவ முடியாது. அரசாங்கம் அதற்கு அனுமதிக்கவில்லை.

இந்தப் பெரிய அநீதியை, அநியாயத்தை, இந்த மாபெருங்கொடுமையை எல்லோரும் பார்த்துக் கொண்டேயிருக்கின்றனர். சர்வதேச சமூகத்துக்கு இதைப் பற்றி என்ன கவலை இருக்கப்போகிறது? மனித உரிமை அமைப்பினர் வேண்டுமானால் ஏதாவது அறிக்கையை விடுவார்கள். ஆனால், அவர்களும் இந்த விசயத்தைப் பற்றிக் கவனித்ததாக இல்லை.

வன்னிக்கு வெளியேயான தமிழ் மக்களும் சரி, தமிழ் அமைப்புகளும்சரி இது குறித்து அக்கறைப்பட்டதாகவும் இல்லை. உருப்படியாக எதையாவது செய்ததாகவும் இல்லை. இதை இங்கே குறையாகவோ குற்றச்சாட்டாகவோ சொல்லவில்லை.

போராட்டத்தின் போது நிறையப் பங்களித்தவர்கள் புலம் பெயர் மக்கள். உபாயங்கள் தொடர்பான குறைபாடுகள் இருந்தாலும் இறுதிக் கட்டத்தில் கூட அவர்களின் பங்கேற்பு மதிப்புக்குரியதாகவே இருந்தது. ஆனால், போர் முடிந்த பிற்பாடு சில தனிப்பட்ட உதவிகள், அக்கறைகளைத் தவிர பொதுவாக வன்னி மக்களுக்கு சரியான உதவிகள், ஆதரவு எதுவும் இதுவரையில் கிட்டவேயில்லை.

வன்னியில் இருப்பதற்கு வீடுகளில்லை. செய்வதற்குத் தொழில் இல்லை. காணிகளைத் துப்புரவாக்குவதற்கே பெருமளவு காசு தேவை. சாப்பிடுவதற்கு, பிள்ளைகளைப் படிப்பிப்பதற்கு, உடுப்பு வாங்குவதற்கு என்று அடிப்படையான தேவைகளை நிறைவேற்றவே முடியாத நிலையில்தான் இந்தச் சனங்களிருக்கிறார்கள்.

வரலாற்றில் எத்தனையோ இடப்பெயர்வுகளைச் சந்தித்த போதும் நிமிர்ந்தவர்கள். பெரும் இழப்புகளைச் சந்தித்து அவற்றிலிருந்து மீண்டவர்கள். எந்த நெருக்கடியான நிலையிலும் தளர்ந்து விடாமல் நிமிர்ந்து நின்று தாக்குப்பிடித்தவர்கள். இன்று எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். ஆதிவாசிகளைப் போல, இந்த மாபெரும் உலகத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களாக, திக்கற்றவர்களாக, சொந்த வீட்டிலேயே அகதிகளாக, எந்தக் குற்றமும் செய்யாமலே தண்டனையை அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர்.

இப்போது தமிழர்கள் செய்ய வேண்டிய அவசிய உதவி இவர்களுக்கானதே. முதற்பணியும் தலையாய கடமையும் அதுவே. வீழ்ந்தவர்களைத் தூக்குதல். காயமடைந்தவர்களைக் குணப்படுத்துதல். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாயிருத்தல். தனித்தவர்களுக்குத் துணையாயிருத்தல். இது முதற்பணி. முதலுதவி என்பார்களே அதுதான்.

இந்த முதலுதவிகூட இவ்வளவு நாட்களாகச் செய்யப்படாமலிருக்கிறதே! இதை நினைக்கும் போதுதான் நாங்கள் எல்லாம் பிரச்சினைகளிலிருந்தும் தேவைகளிலிருந்தும் உண்மைகள், யதார்த்தங்களிலிருந்தும் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோம் என்பதையிட்ட கவலைவருகிறது.

எல்லோருடைய விடுதலைக் கனவுக்காகவும் பாடுகளைச் சுமந்தவர்களையிட்டு, சர்வதேச தேசத்துக்கு என்ன கவலைகள் இருக்க முடியும்? அதைப்போல இலங்கை அரசிடமும் நற்சகுனங்களை எதிர்பார்க்க முடியாது.

ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் அத்தனை பேருக்கும் இந்த மக்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்புண்டு. அதைப்போல புலத்திலிருக்கிற அத்தனை மக்களும் இந்த விசயத்தைக் குறித்து பாரபட்சமில்லாமல், அரசியல் கருத்து வேறுபாடுகளிலில்லாமல் ஒன்று பட்டு இந்த மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

வேண்டுமானால், அதற்கு முன்னர் வரக் கூடியவர்கள் வந்து ஒரு தடவை இந்த மக்களைப் பார்த்துச் செல்லுங்கள். அப்போது இதைப் போல இன்னும் குறிப்புகளை எழுத வேண்டிய தேவை இருக்காது. இப்படிக் கோரிக்கைகளை விடவும் தேவையிருக்காது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக