செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இனப்பிரச்சனை தீர்வுக்கான வாய்ப்பை தவறவிட்டால் இன்னொரு இனமோதல் வெடிக்கும்!

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை எத்தகைய போக்கினை அடையப் போகின்றது என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த நகர்வுதான் தீர்மானிக்கப் போகிறது.

தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தைத் தவறவிடுவோமானால், அது இன்னொரு இனமோதல் உருவாவதற்கு வழிவகுத்து விடுமென எச்சரித்துள்ளார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் நிர்மல் தேவசிறி.

விரிவுரையாளர் நிர்மல் தேவசிறியை மேற்கோள் காட்டி ஏ.எவ்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினை ஒன்றிணைத்து செயற்படுவதில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெரும் சவால்களை எதிர்கொண்டிருப்பதாகவும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அக்கட்டுரை குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கேற்ப பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைக்க உதவும்படி தேர்தல் பரப்புரையின்போது மகிந்த ராஜபக்ச மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற ஆசனங்களின் அடிப்படையில் மக்கள் அவரது கட்சிக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர் எனக் கருதினாலும், நாட்டின் சுமார் 55 சதவீதமான மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளமையானது, நாடு தனக்குப் பின்னால் நிற்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துவரும் கருத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் ஏ.எவ்.பி நிறுவனம் வெளியிட்டுள்ள இவ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கும் கருத்தினை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

இத்தேர்தலில் குறைந்தளவு மக்களே வாக்களிப்பில் கலந்து கொண்டமை அரசியல் நடைமுறையில் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளரான விக்ரர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்புவதோடு, நாட்டின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய பெரும் சவால் மகிந்த ராஜபக்சவின் முன்னால் உள்ளதாக அவர் கூறினார்.

இத்தேர்தலில் குறைந்தளவு மக்கள் வாக்களித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சிகள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் மீது மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தியின் வெளிப்பாடே இது எனத் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக, மக்களின் ஆணையற்ற ஒரு நாடாளுமன்றம் நாட்டுக்குக் கிடைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இத்தேர்தலில் தமிழ் மக்களும் மிகக் குறைந்தளவே வாக்களித்துள்ளார்கள். நாடு இன்னமும் பிளவுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் ஒரு தெளிவான சமிக்ஞை இது, ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேசியவாதக் கொள்கை குறித்து தமிழ் மக்கள் கொண்டிருக்கும் பெரும் சந்தேகத்தின் வெளிப்பாடே இது.

தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது சிதைந்து போன இப்பகுதிகள் பல பில்லியன் டொலர் செலவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற உறுதி வழங்கியிருந்தார்.

ஆனால், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு மாவட்டத்தில் கூட மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு முழு வெற்றி பெறவில்லை. மாறாக, தமிழ் மக்களுக்கு சுயாட்சி வகையிலமைந்த தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலரான நிமல்கா பெனாண்டோ தெரிவிக்கின்றார். இலங்கை இன்னமும் பிளவடைந்திருப்பதை தேர்தல் முடிவுகளைக் காட்டும் மாவட்ட ரீதியான வரைபடம் தெளிவாகக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் பலமான நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப் போகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலிருந்து தப்புவதற்கு எந்தவொரு காரணத்தையும் கூறிவிட முடியாது.

அவர் வாக்குறுதி அளித்ததைப் போல நாட்டில் இன நல்லிணக்கத்தையும், அமைதியினையும் ஏற்படுத்துவாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என நிமல்கா பெனாண்டோ குறிப்பிடுகின்றார்.

நீதியனதும், நியாயமானதுமான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதோடு, தமக்கு மறுக்கப்படடுள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கள் பெற்றுத்தரப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் இவ் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக