செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்!

இலங்கைத் தீவின் தேர்தல் திருவிழா ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது. மகிந்த ராஜபக்ஷ விரும்பியது போல் மூன்றில் இரண்டு பங்கிற்கு நெருக்கமான அளவு ஆசனங்களைப் பெற்றுவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த முறை போலல்லாவிட்டாலும், 12 ஆசனங்களைப் பெற்று தமிழீழ மக்களது முக்கிய அரசியல் சக்தியாக மீண்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் ஒரு முக்கியமான அரசியல் தீர்மானத்திற்குரிய களம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு நீதியானதொரு தீர்வை வழங்க வேண்டும் என்ற சர்வதேச விருப்பங்களை மகிந்த ராஜபக்ஷ வழக்கம்போன்ற காரணத்தைச் சொல்லித் தப்பிக்க முடியாது. தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கான பலம் தமக்கு இல்லை என்று இப்போது தட்டிக் கழிக்க முடியாது. மகிந்த ராஜபக்ஷ உண்மையிலேயே அரசியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்து தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க விரும்பினால், அதற்குத் தேவையான மேலதிக அரசியல் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சாத்தியமும் தற்போது உள்ளது.

தமிழ் வாக்காளர்களில் எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில் தற்போது, மீண்டும் தமிழீழ மக்களுக்கான அரசியல் பலமாக உருவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காலம் அதிக அளவு கடமைகளைச் சுமத்தியுள்ளது. முன்பு போல அவர்களை நேர் வழியில் பயணிக்க வைக்க களத்தில் விடுதலைப் புலிகள் இல்லை. ஆனாலும், அவர்கள் விட்டுச் சென்ற இலட்சிய தாகம் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்திலும் கனலாகக் கனன்று கொண்டே உள்ளது. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, ஒட்டு மொத்தமாக 22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் தற்போது அளவுக்கு அதிகமாக நம்பிக்கையைத் தொலைத்து விட்டு மௌனித்துப்போய் உள்ளார்கள். அவர்களை அதிலிருந்து மீட்டு, அவர்களிடம் எதிர்கால நம்பிக்கை ஊட்டும் பணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைத் தடுமாற்றமே புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் குறித்த நம்பிக்கையின்மை வெளிப்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய முக்கிய கடப்பாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்டு. புலம்பெயர் தமிழர்கள் தமது விருப்பு வெறுப்புக்களுக்கும் அப்பால், ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். ஈழத் தமிழர்களது விடுதலைக்காகவும், விடிவுக்காகவும் கடுமையாகப் போராடி வருகின்றார்கள். அவர்களது ஆத்மார்த்தமான உணர்வுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தமிழீழம் குறித்த அக்கறைகளையும், அர்ப்பணிப்புக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கான பலமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இனியாவது நெருக்கமான உறவினைப் பேண முயல வேண்டும்.

தமிழீழத்திற்கு வெளியே, ஈழத் தமிழர்களின் பலமாக உருவாகிவரும் மக்கள் பேரவைகள், நாடு கடந்த தமிழீழ அரசு ஆகியவை ஈழத் தமிழர்களுக்கான மேற்குலக ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்தி வருகின்றன. புலம்பெயர் தேசம் எங்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது நடாத்தப்பட்ட மீள் வாக்கெடுப்பில் 98 வீதத்திற்கும் அதிகமான புலம்பெயர் தமிழர்கள் 'தமிழீழமே ஒரே தீர்வு' என்ற தமது விருப்பை நிலைநாட்டியுள்ளனர். எண்பது வீதத்திற்கும் அதிகமான தமிழர்கள் நிராகரித்த இந்தத் தேர்தல் மூலம் சிங்கள நாடாளுமன்றத்திற்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு மாறான ஒரு தீர்வை ஈழத் தமிழர்களிடம் திணிக்க முயலக் கூடாது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் மட்டுமே தமிழீழ மக்களின் ஆணைக்குட்பட்டது. மாறாக, வேறு எந்தத் தெரிவானாலும் அவர்களிடம் மீண்டும் ஆணை பெற்றே தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் விருப்பங்களுக்கு மாறான எந்தத் தீர்வும் நிரந்தரமானதாக இருக்க மாட்டாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமான அமைதி வாழ்வு வாழ்ந்த தமிழர்கள் தான் புயலாகச் சினந்து புலியாக மாறினார்கள். இப்போதும் அவர்களது அந்த மாற்றங்களுக்கான காரணங்கள் சிங்கள இனவாதிகளால் அதிகரிக்கப்பட்டே வருவதால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் திசை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களது இந்த மௌனம் நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ராஜபக்ஷக்களின் இந்த அரசியல் வெற்றிகள் ஈழத் தமிழர்கள் மீது இன வன்முறையையே தொடர்ந்தும் பிரயோகிப்பதற்குப் பயன்படுமானால், மீண்டும் அவர்கள் புலியாக எழுவது தவிர்க்க முடியாமல் போகும். அது, சிங்கள அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எப்படிப் பயணிக்கப் போகின்றது என்பதில்தான் தங்கியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக