வெள்ளி, 30 ஏப்ரல், 2010

இனிமேல் எனது மனைவியுடன் படுத்துறங்கமாட்டேன். மேர்வின் சில்வா

பிரதி ஊடக அமைச்சராக இன்று கடமையை பொறுப்பேற்றுள்ள மேர்வின் சில்வா எதிர்காலத்தில் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டும் பொருட்டு தான் அர்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் தன்னை இரவுகளில் எந்த நேரமும் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக தனது மனைவியிடமிருந்து வேறாக படுத்துறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கட்கு ஏதாவது பிணக்குகள் இருந்தால் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டியுள்ள அவர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை தொடர்பாக முறைப்பாடுகளை செய்வதற்கு அமைச்சில் விசேட கருமபீடம் ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் அல்லது ஊடகங்களுக்கு எதிராக தான் ஏதாவது கெடுதல்களை செய்தாக நிருபிக்கப்படும் பட்சத்தில் பதவி விலகுவேன் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த பொது தேர்தல் பிரச்சாரங்களின்போது ஜெனரல் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியினர் ஒரு பாராளுமன்ற ஆசனங்களையேனும் பெற்றால் தான் பாராளுமன்று செல்லமாட்டேன் என மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். ஆனால் ஜெனரல் பொன்சேகா தலைமையிலான கட்சியினர் 7 ஆசனங்களைப் பெற்றுள்ளபோதும் மேர்வின் தனது உறுதி மொழியை காப்பாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக பல வன்செயல்களை மேற்கொண்டவர் என்ற அடிப்படையில் ஊடகவியலாளர்கள் மேர்வின் சில்வா ஊடக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தொலைக்காட்சி தலைமைப் பீடம் ஒன்றினுள் மேர்வின் நுழைந்தபோது ஊழியர்கள் அவரை நையப்புடைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக