ஞாயிறு, 23 மே, 2010

சூடான் பிரதிநிதியின் ஆலோசனைகளும் நிபுணர் குழுக்களின் பிரவேசமும் – இதயச்சந்திரன்

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் நடைபெற்ற, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அமர்வில், தென் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (SPLM) அமெரிக்க பிரதிநிதி டொமச் றொச்சும் (Domach Rauch) முன்னாள் அமெரிக்காவின் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க்கும் (Ramsey Clark) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் பிரசன்னம், பல செய்திகளைக் காவி நிற்பதனை உணரலாம். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில்
 ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான சர்வதேச உறவு நிலை, எவ்வாறு அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற அறிவூட்டல்களும் காணப்பட்டன. அங்கு உரை நிகழ்த்திய சூடான் பிரதிநிதி, தமது நாட்டில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளும், தேசிய விடுதலைப் போராட்டமும் மத ரீதியானதல்ல என்பதை வலியுறுத்தியதோடு, 1947 இல் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து நாடு விடுதலையடைந்தபோது வடக்கு சூடானோடு தெற்கு சூடானும் பலவந்தமாக இணைக்கப்பட்டதாகச் சுட்டிக் காட்டினார். sudan4தென் சூடான் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாறு, ஈழ விடுதலைப் போர் சந்தித்த பல இடர்களோடு ஒத்துப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார். 2005 இல் உருவான சமாதான ஒப்பந்தம் முதல், எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி நடத்த உத்தேசித்துள்ள பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு வரையான சகல நகர்வுகளிலும் அமெரிக்காவின் ஆதரவு தமக்கு கிடைத்திருப்பதாக சூடான் பிரதிநிதி வலியுறுத்தினார். சர்வதேச வல்லரசாளர்களுக்கிடையே நிகழும் மோதலில் ஏதாவது ஒரு அணி சார்பான நிலைப்பாட்டினை தாம் மேற்கொண்டதாலேயே சர்வஜன வாக்கெடுப்புவரை தமது போராட்டம் வளர்ச்சியடைந்துள்ளதாக சூடான் பிரதிநிதி நியாயம் கற்பித்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டம் நிகழும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர மையம், சூடானிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்து சமுத்திரம் மற்றும் தென் சீனக் கடற்பரப்பில் தமது நலன்களையும் மேலாதிக்கத்தினையும் நிலைநாட்ட, முப்பெரும் சக்திகளான சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசாளர்கள் மோதிக் கொள்கின்றனர். கூவி அழைக்கும் தூரத்திலுள்ள இந்தியாவை மீறி மேற்குலகு சார்பான நிலைப்பாட்டினை மேற்கொள்வது, மேலதிக சிக்கல்களை உருவாக்கும் அதேவேளை, தென் கொரியக் கப்பலொன்று வட கொரியாவால் மூழ்கடிக்கப்பட்ட விவகாரம், ஆசியப் பிராந்தியத்தில் பதற்ற நிலையொன்றை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க வேண்டும். சீனாவின் நேரடித் தலையீடு, இந்த மூழ்கடிப்பு விடயத்தில் இல்லாவிட்டாலும், அதன் நட்பு நாடான வட கொரியாவின் வலிந்த தாக்குதல் செயற்பாடு, வல்லரசுகளுக்கிடையே முரண்பாடுகளை அதிகரிக்கும். ஆனாலும் தமது எல்லையோர கடற்பரப்பிலிருந்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அகற்றுவதற்கு, வட கொரியா ஊடாக ஒரு நகர்வினை சீனா மேற்கொண்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இந்நிலையில் இன்னமும் கலங்கல் நிலையிலுள்ள இந்து சமுத்திரப் பிராந்தியம் குறித்தான வல்லரசுகளின் போக்கில் சரியான தெளிவான நிலைப்பாடு உருவாகும் வரை, சர்வதேச உறவில் தமக்குச் சாதகமாக பாதையை ஈழப் போராட்டம் தெரிவு செய்ய முடியாது. தாருஸ்சலாம், தான்சானியா மற்றும் நைரோபியிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது 1998 ஆகஸ்ட் 7 ஆம் திகதி வாகனக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் எதிர்வினையாக, சூடானிலுள்ள அல் சிவ்வா (Al Shifa) மருந்துச் தொழிற்சாலை மீது, ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தியது பில் கிளிண்டன் நிர்வாகம். இந்த தொழிற்சாலையில் வீ.எக்ஸ் (VX) இரசாயன நச்சு வாயு தயாரிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டினை அமெரிக்கா சுமத்தி, தனது தாக்குதலுக்கான நியாயப்பாட்டினை தெரிவித்தது. ஏவுகணைத் தாக்குதலால் சிதைவுற்ற அல் சிவ்வா தொழிற்சாலையைப் பார்வையிடச் சென்ற அமெரிக்க குழுவின் தலைவரும் நாடு கடந்த அரசாங்கத்தின் முதல் அமர்வில் உரையாற்றியவருமாகிய முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க் , மலேரியா, காசநோய் மற்றும் வயிற்றோட்டத்திற்கு தேவையான மருந்தப் பொருட்கள், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஆவணத்தில் குறிப்பிட்டது போன்று, பக்தாத்திற்கு இத் தொழில்சாலையிலிருந்து அனுப்புவதற்குத் தயார் நிலையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆயினும் அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் சரணாலயமாக சூடான் விளங்குகிறது என்ற குற்றச்சாட்டினை அமெரிக்கா முன்னிலைப்படுத்தியது. தென் சூடான் விடுதலை இராணுவத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம், சூடானைப் பிளவுபடுத்தி, ஆபிரிக்காவில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயல்வதாக, தற்போதைய சூடான் ஆட்சியாளர் குற்றம் சுமத்துகின்றனர். ஆனாலும் சூடானின் அமெரிக்க எதிர்ப்பு, தென் சூடான் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தினை மலினப்படுத்தி விட முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற போர்வையில் டார்பூர் (Darfur) இனப்படுகொலைகளையும் நாடளாவிய மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்த, அதிபர் அல் பஷீர் முயற்சிக்கிறார். அதேபோன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இறுதிப் போரில் இன அழிவிற்கு உள்ளான மக்கள் குறித்த விசாரணைகளை மேற்குலக எதிர்ப்பு என்கிற போர்வையில் மூடி மறைக்க அல்லது நிராகரிக்க முற்படுகிறது பேரினவாதம். மனித உரிமை மீறல் குறித்தான சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்களை திசை திருப்புவதற்கு “கற்ற படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கம்’ என்று தலைப்பிட்டு ஒரு ஆணைக்குழுவினை (LLRC) இலங்கை அதிபர் அமைத்தாலும் ஐ.நா. சபையானது பிரத்தியேகமான நிபுணர் குழுவொன்றை அமைத்தே தீருமென அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான மேலதிக பொதுச் செயலாளர் லின் பெஸ்கோ (Lynn Pascoe) இவ் விசாரணைக்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு சில முட்டுக்கட்டைகளை இலங்கை அரசு ஏற்படுத்துகிறது. ஐ.நா. சபையின் ஊடக அறிக்கையில் இந்த நிபுணர் குழுவின் “நோக்கமும் வடிவமும்’ குறித்து, மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; 1. சமாதான ஒப்பந்தம் தோல்வியடைந்ததன் காரணிகளையும் 2009 மே 19 ஆம் வரை நடந்த நிகழ்வுகளையும் கண்டறிதல். 2. தனி நபரோ, குழுவோ அல்லது நிறுவனமோ இதற்கான பொறுப்பாளியாக, நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருப்பதை அறிதல். 3.இந்நிகழ்வுகளிலிருந்து கண்டறியப்பட்ட உண்மைகள், மறுபடியும் நிகழாதவாறு உறுதிப்படுத்தல். sudan_05ஆனாலும் ஐ.நா. சபையின் இந்நிபுணர் குழு வழங்கும் இறுதி அறிக்கை அதன் அடுத்த கட்டமாக எவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுக்கப் போகிறது என்பது குறித்து இங்கு சுட்டிக்காட்டப்படவில்லை. இதுவும் ஒரு காகிதக் கப்பல் போன்று மூழ்கடிக்கப்பட்டு விடுமோ என்கிற சந்தேகம் மக்களுக்கு உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக