திங்கள், 24 மே, 2010

உண்மையை நிரூபிக்கும்வரை தொடரப்போகும் போர்க்குற்றச்சாட்டு..

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது போர்க்குற்றங்கள் நடந்ததாக இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்ச்சியாக வரத்தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சனல்4 தொலைக்காட்சி இரண்டு ஒளிப்பதிவுகளை வெளியிட்டது. முதலாவது ஒளிப்பதிவு பொய்யானது என்று பாதுகாப்பு அமைச்சு உள்ளூர் நிபுணர்களைக்கொண்டு கூற வைத்தது. ஆனால் இதுகுறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க நிபுணர்கள் அது உண்மையானதே என்று கூறியிருந்தனர்
. இப்போது இரண்டாவது ஒளிப்பதிவு கடந்த வாரம் வெளியாகியுள்ளது. இந்த ஒளிப்பதிவில், சரணடைந்த ஆண்கள் உடைகள் களையப்பட்ட நிலையில் நிலத்தில் அமர வைக்கப்பட்டிருப்பதும் அவர்களின் கைகள் பின்புறம் கட்டப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. பதுங்குகுழியருகே இரு பெண்களின் சடலங்கள் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதையும் அந்த ஒளிப்பதிவில் காணடிகிறது. அதுமட்டுமன்றி இராணுவ உயரதிகாரி ஒருவரும் சிப்பாய் ஒருவரும் வழங்கிய செவ்வி ஒன்றில் மேலிட உத்தரவின் பேரிலேயே சரணடைந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர். புலிகளின் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் கொலை செய்யப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். ஏற்கெனவே, போரின் போது சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் போன்றோரைப் படையினர் சுட்டுக்கொன்றதாக ஒரு சர்ச்சை உருவானது. இந்த சர்ச்சைக்கு இன்னமும் முடிவு கிடைக்காதுள்ள நிலையில் மற்றுமொரு ஒளிப்பதிவு வெளியாகியுள்ளது. சனல்4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இந்தக் காட்சிகளையும் கருத்துகளையும் இலங்கை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது. எந்தப் போர்க்குற்றங்களும் நடக்கவில்லை என்றும் போர் மரபுகள் முற்று முழுதாகப் படையினரால் கடைப்பிடிக்கப்பட்டதாகவும் அரசாங்கம் கூறுகிறது. வன்னியில் போர் மரபுகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மரணங்கள் அங்கு நிகழ்ந்திருக்காது. இந்தநிலையில் அரசாங்கம் போர் மரபுகளை முற்றாகக் கடைப்பிடித்ததாக கூறும் கருத்தின் உண்மைத்தன்மை மீது கேள்வி எழுகிறது. அடுத்தடுத்து வெளியாகின்ற ஒளிபதிவுகளும், சர்வதேச மட்டத்தில் இருந்து எழுகின்ற போர்க்குற்ற விசாரணை பற்றிய கருத்துகளும் அரசாங்கத்துக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மை. ஏற்கெனவே அரசாங்கம் போர் மரபுகளை இராணுவம் மீறவில்லை என்றும் போர்க்குற்றங்கள் இடம்பெறவேயில்லை என்றும் எத்தனையோ தடவைகள் கூறியிருந்தாலும், அதை யாரும் நம்பவில்லை என்பதே உண்மை. ஐ.நா.சபை பொதுச்செயலர் பான் கீ மூன் போர்க்குற்றங்கள் தொடர்பான ஒரு ஆலோசனைக் குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனாலும் அது இன்னமும் நியமிக்கப்படவில்லை. அவ்வப்போது ஐ.நா பொதுச்செயலரின் சார்பில் ஆலோசனைக்குழு அமைக்கப்படும் என்று செய்திகள் தான் வருகின்றனவே தவிர, அதை அமைப்பதற்கான முயற்சிகள் நடப்பதைக் காணவில்லை. இன்னொரு பக்கத்தில் அமெரிக்கா போர்க் குற்றங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை அடுத்த மாதம் வெளியிடப் போவதாகத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்கின்றன. கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூட இலங்கையில் நடந்த அனைத்துப் போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் ஐ.நாவிசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். மொத்தத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு தலைவலி கொடுக்கும் வகையிலான சம்பவங்களே நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தலில் பெற்ற அபாரமான வெற்றியைக் கொண்டு சர்வதேச ரீதியாக அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கொள்ள கணக்குப் போட்டிருந்தது. இதனால் தான் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசாங்கம், நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் அவர்களின் கருத்துக்கு சர்வதேசம் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. போர் முடிவுக்கு வந்துவிட்டது ஆனாலும் போரின் போது நடந்த சம்பவங்களை மறந்துவிட சர்வதேசம் தயாராக இருக்கவில்லை. அதேவேளை, போரின் போது நடந்தவற்றை மறந்து விட்டு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உதவினால் போதும் என்பதே அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அதன் நிலைப்பாடாக அமைந்துள்ளது. இங்கேதான் இலங்கை அரசு சர்வதேசத்துடன் முரண்படும் நிலை காணப்படுகிறது. என்னதான், சமாளிப்புகளை மேற்கொண்டாலும் போர்க்குற்றங்கள் தொடர்பான விடயத்தில் சர்வதேசத்தின் போக்கில் விட்டுக் கொடுப்பு இருக்கும் போலத் தெரியவில்லை. ஆனாலும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேசம் தமிழ் மக்களின் சார்பில் நின்று நியாயம் கேட்கும் என்பதற்கு எந்த உத்தரவாதம் இல்லை. சர்வதே சமூகத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பாகத் தோன்றியுள்ள இந்தப் பிணக்கு தீர்க்கப்படும் வரைக்கும் இலங்கை அரசாங்கத்தினால் நிம்மதியாக இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக