திங்கள், 24 மே, 2010

சவாலாகும் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள்.!


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு கடந்த வாரம் அரசாங்கம் பெருமெடுப்பிலான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கடந்த 20ஆம் திகதி காலிமுகத்திடலில் பிரமாண்டமான வெற்றிவிழா, இராணுவ அணிவகுப்பு என்பன நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவையெல்லாம் இயற்கையின் கோரத் தாண்டவத்துக்கு முன்பாக நின்று பிடிக்க முடியாமல்
 நிறுத்தப்பட்டன. போர்வெற்றியைக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தது குறித்து பல்வேறு விமர்சனங்களும் வந்திருந்தன. ஆனால், அதையெல்லாம் அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. போரின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதிலேயே குறியாக இருந்தது. கடைசியில் எல்லாமே இயற்கையின் முன்பாக மண்டியிட நேரிட்டது. அரசாங்கம் புலிகளைப் போல் வெற்றி கொண்டது உண்மை. அது முடிந்து போன ஒன்று. ஆனால் அந்தப் போரின் விளைவுகளில் இருந்து நாடு இன்னம் மீளவில்லை. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், துன்பங்களில் இருந்து மக்கள் விடுதலை பெறவில்லை. இடம்பெயர்ந்து வீடு வாசல்களை இழந்த மக்கள் இன்னம் கொட்டில்களிலும் கூடாரங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முகாம்களுக்குள் இன்னமும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இருப்பதாக அரசாங்கமே சொல்கிறது. இப்படியாகப் போரின் பாதிப்பில் இருந்து மக்கள் விடுபடாதுள்ள நிலையில் ஒரு வெற்றிவிழா தேவைதானா என்ற கேள்வி எழுந்தது. அதைவிடப் போரின் போது ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள், படையினர் உட்பட புலிகளும் கொல்லப்பட்டனர். அவர்களுக்காக வருத்தப்படாமல் வெற்றிப் பெருமிதத்தைக் கொண்டாடுவதிலேயே அரசு குறியாக இருந்தது. எதிர்க்கட்சியான ஐ.தே.க கூட இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை விரும்பவில்லை. ஜனநாயக தேசிய கூட்டணியோ போரை வெற்றிகொண்ட சரத் பொன்சேகாவை சிறைக்குள் வைத்துக் கொண்டு அரசு கொண்டாட்டம் நடத்துவதாக சொன்னது. இப்படியாகப் போர் வெற்றியை கொண்டாடுவதற்கு எதிர்ப்புகள் இருந்த போதும் அரசாங்கம் அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளவேயில்லை. போரை வென்று விட்டோம் என்று மீண்டும், மீண்டும் உலகத்திற்குச் சொல்வதில் தான் அரசு கவனம் செலுத்தி வந்தது. கடந்த வருடம் போர் முடிவுக்கு வந்த போதும் வெற்றிக் கொண்டாட்டங்களை அரசு நடத்த உத்தரவிட்டது. இதன்போது தமிழ் மக்கள் பெருமளவில் துன்பங்களை அனுபவிக்க நேரிட்டது. குறிப்பாக, தென்பகுதியில் தமிழர்கள் பல்வேறு வழிகளிலும் துன்புறுத்தலுக்குள்ளாகினர். வெற்றி விழாக்கள் தமிழ்மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலேயே அமைந்தன. போரின் வெற்றியைக் கொண்டாவது வேறு. அடுத்தவரின் மனதைப் புண்படுததும் வகையில் கொண்டாடுவது வேறு. ஆனால், உண்மையில் போரின் வெற்றிக் கொண்டாட்டங்கள் தமிழரின் மனங்களைப் புண்படுத்தும் வகையிலேயே கொண்டாடப்பட்டன. இந்தமுறையில் கூட வன்னியில் போரின் போது கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமிழ் மக்களுக்கு வாய்ப்போ வசதிகளோ செய்து கொடுக்கப் படவில்லை. தமிழர்கள் தமது உறவுகளுக்காகக் கல்லறைகளின் முன்பாகப் போய் நின்று அழுவதற்குக் கூட வழியில்லை. அப்படியானதொரு சூழலை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. ஆனால், போரில் வெற்றி பெற்றதற்கு அரசாங்கம் வெற்றி விழாக்களைக் கொண்டாடலாம் என்பது ஒரு நீதி. போரில் மரணித்தவர்களுக்காகத் தமிழ் மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்த முடியாது என்பதற்கு இன்னொரு நீதி. அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து போரின்போது நடந்த விவகாரங்களைக் கண்டறிய முனைகிறது. ஆனால், தமிழ்மக்களை அரவணைக்கும் அளவுக்கு அது செயற்படவில்லை. உளப்பூர்வமாக அவர்கள் காயங்களை ஆற்றுவதற்குத் துணியவில்லை. அப்படிச் செய்வதற்குத் துணிந்திருந்தால் இந்தளவுக்குப் போர் வெற்றியைப் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்காது. அத்துடன் தமிழருக்கும் மரணமானோருக்காக கண்ணீர் வடிக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்காது. ஒருவன் துன்பத்தில் இன்னொருவர் இன்பம் காணும் வெற்றிக் கொண்டாட்டங்களை இயற்கையே விரும்பவில்லை என்றாகி விட்டது. இயற்கையே பொறுக்காமல் தான் மழையின் வடிவில் இந்தக் கொண்டாட்டங்களை நிறுத்தியதாக சிங்கள அரசியல்வாதிகளே சொல்கிறார்கள். இப்படியிருக்க அரசாங்கம் இன நல்லிணக்கக் குழுவை அமைத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை. இனரீதியான பிளவுகளை இனிமேலாவது உருவாக்காதிருக்க முனைய வேண்டும். தமிழருக்கு உளக்காயங்களை ஏற்படுத் தாமல் நடந்து கொள்வதற்கு அரசு னைய வேண்டும். அது தான் இன நல்லிணக்கத்துக்கான அடித்தளமாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக