செவ்வாய், 22 ஜூன், 2010

இன உணர்வு, தேசியம் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சில் இருப்பதை விட செயலில் இருப்பதே அழகு!

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வன்னியைப் பற்றி எல்லா ஊடகங்களும் எழுதியும் சொல்லியும் வருகின்றன. இந்த இருபது ஆண்டுகளில் வன்னியும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவத்தை அடைந்தே இருக்கிறது.


போர், சமாதானம், போருக்குப் பிந்திய மீள்குடியேற்றம் என
எல்லாவற்றிலும் எப்படியோ வன்னி முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொண்டேயிருக்கிறது.


 கிளிநொச்சி மத்திய மைதானத்தில் யப்பானியத் தூதர் யசூஸி அகாஷி வந்திறங்கிக் கொண்டிருக்கிறார்.அவரைக் கொண்டு வந்த உலங்குவானூர்தி தரையிறங்குகிறது.


கூடவே ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவும் வந்திறங்குகிறார்.  அவர் கிளிநொச்சிக்கு வந்து பல இடங்களுக்கும் சென்றார். பல நிலையங்களை ஆரம்பித்துவைத்தார். சதோச விற்பனை நிலையத்தைக்கூடத் திறந்து வைத்தார். இப்படியே வாரத்தில் பெரும்பாலான நாட்களில் அமைச்சர்களும் அரச பிரதிநிதிகளும் வன்னிப்பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.


ஆனால், போருக்குப் பிந்திய வன்னியில் ஏராளம் பிரச்சினைகள் இருக்கின்றன. போருக்கு முந்தியும் வன்னியில் ஏராளம் பிரச்சினைகளும் தேவைகளும் இருந்தன. சமாதான காலத்தில் கூட வன்னிக்குப் பிரச்சினைகள் தனியாகவே இருந்தன.


இப்போது சனங்கள் முற்றாக வெளியேறி, பின்னர் மீள்குடியேறிய இடம் என்பதால் இந்தப் பிரச்சினைகள் நாட்டின் ஏனைய இடங்களின் பிரச்சினைகளை விடவும் வேறானவை. அதிலும் பெரும் போர் நடந்த பகுதி. இறுதிப் போர் நடந்த இடம். எனவே, இங்கே இருக்கின்ற மக்களும், இனி வந்து குடியேறவுள்ள மக்களும் புதிதாகக் கொண்டு வந்து பதியம் வைக்கப்பட்டதைப் போலவே இருக்கின்றனர்.


மீள் குடியேற்றம் என்பது, அர்த்தமுள்ளபடி நடைபெறவேண்டும். ஆனால், அப்படி இதுவரை நடக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்ததைப் போலவே நிலைமை இருக்கிறது.


இப்போதைய வன்னி நிலைவரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினரும் தெரிவித்திருக்கின்றனர். இதைவிட, ஊடகங்கள் பலவும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கின்றன.


ஆனால், மீள் குடியேற்றப் பிரச்சினை பல பரிமாணங்களையுடையது. பல தரப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் அரசாங்கமே பொறுப்புச் சொல்லவேண்டும் என்றாலும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய பக்கங்கள் நிறையவுண்டு. பொதுவாகவே இந்த மீள்குடியேற்றப் பிரச்சினைக்கான வாய்ப்பாடுகளை பலரும் ஒரே விதமாகவே சொல்கின்றனர்.


மக்கள் தறப்பாள் கூடாரங்களுக்குள் இருக்கின்றனர். சொந்த வீட்டுக்குத் திரும்பியபிறகும் அவர்கள் அகதிகளைப் போலவே வாழ்கின்றனர். உறவுகளை இழந்தவர்கள், உழைப்பில்லாமல், வருமானமில்லாமல் சிரமப்படுகின்றனர். அங்கே இருந்த பல கட்டமைப்புகளும் தகர்ந்து போய்விட்டன.


சனங்கள் நிவாரணத்துக்காகக் கையேந்துகிறார்கள். தொழில் செய்ய டியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களைச் சரியாக இயக்க முடியாத நிலை. இப்படியொரு நீண்ட பட்டியல் இருக்கிறது. இவை எல்லாமே உண்மைதான். ஆனால், இவற்றோடு பல பேசப்படாத உண்மைகளும் விசயங்களும் இருக்கின்றன.


குறிப்பாக இந்த மீள் குடியேற்றம் திட்டமிடப்படவில்லை. இதைக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. அதிகாரிகளும் அப்படியே சொல்கின்றனர். இந்தத் திட்டமிடப்படாத மீள் குடியேற்ற நடவடிக்கையை சாட்டாக வைத்துக் கொண்டு, அரச அதிகாரிகள், ஊழியர்கள், படையினர் எல்லாம் அவரவருக்கு ஏற்றமாதி நடந்துகொள்கின்றனர். இந்த திட்டமிடப்படாத, ஒழுங்கில்லாத நடவடிக்கைகளை சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன.


தன்னிச்சையாகவும் எழுந்தமானமாகவும் விருப்பு வெறுப்பு வசதிகளுக்கு ஏற்றமாதியும் நடந்து கொள்ளும் இந்த நடைமுறைகளால் மக்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பாதிப்புகள் சாதாரணமானவையல்ல. சில இடங்களுக்கு அமைச்சர்கள் வந்தாலும் சில அதிகாரிகள் வருவதில்லை என்று மக்கள் சொல்கின்றனர். மீள் குடியேற்றத்தின் போது ஏதோ ஒரு நாள் மட்டும் வந்து போனதற்குப்பிறகு எந்த அரச அதிகாரியும் தங்களுடைய பகுதிக்கு வந்ததில்லை என்கின்றனர் மீள்குடியேறிகள். குறிப்பாக அரசாங்க அதிபர்கூட வந்ததில்லை என்று சொல்கிறார்கள்.


ஆனால், உண்மையில் போருக்குப் பிந்திய மீள்குடியேற்றம், போர் நடந்த பகுதி, முற்றாகவே பாதிக்கப்பட்ட இடங்கள் என்ற வகையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையிலும் எல்லோருமே அகதிகள் என்ற காரணத்தினாலும் விசேஷமாக அரச அதிகாரிகள் முழுக்கவனமெடுத்து, சிறப்பு வேலைத்திட்டங்களை முன்வைத்து, கடுமையாக உழைப்பதன் மூலமே இந்த மக்களையும் பிரதேசங்களையும் மீளக் கட்டியெழுப்ப முடியும்.


இதற்குக் கூடிய நேரம் குறிப்பிட்ட காலத்துக்கு இந்த உயர் அதிகாரிகள் இந்த மக்களுடன் பாதிக்கப்பட்ட இடங்களிலே நிற்கவேண்டும்.


இதற்கு முழுமையான சேவை மனப்பாங்கும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் அவசியம். ஆனால், இது இங்கே முற்றுழுதாக இல்லை. இதனால், சிலருக்கு சில பொருட்கள் கிடைக்கும். பலருக்குக் கிடைத்திருக்காது. கெட்டிக்காரர்கள், செல்வாக்குள்ளவர்கள் வெற்றிபெற்றுவிடுகிறார்கள். அந்த வாய்ப்புக்குறைந்தவர்கள் எதுவும் கிடைக்காமல் குறைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


குறிப்பாக மீள்குடியேறிய மக்களுக்காக சில அமைப்புகளும் அரசாங்கம் சில உதவிகளைச் செய்திருக்கின்றன. நீர் இறைக்கும் இயந்திரங்கள், சைக்கிள்கள், மருந்துதெளிக்கும் கருவிகள், மீன்பிடி உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் போன்றவற்றை வழங்கும் போது எந்த ஒழுங்கு விதியும் பின்பற்றப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் உளப்பாதிப்புக்குள்ளாகின்றனர்.


வழங்கப்படும் பொருட்கள் அதிகமானோருக்குக் கிடைக்காது. இதுபற்றி விசாரித்தால், ஒதுக்கப்பட்ட பொருட்கள் குறைவாகவே இருந்ததால், தம்மால் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது என்று கிராமசேவை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், கடற்றொழில் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் என்போர் தெரிவிக்கின்றனர்.


உண்மையில் இது இந்த மாதிரித் தேர்வாளர்களுக்கு ஒரு சவாலான விடயந்தான். இதேவேளை இந்த நிலைமையைச் சாட்டாக வைத்துக் கொண்டு தமக்கு வசதிப்படும் போக்கையும் சிலர் கடைப்பிடிக்கின்றனர். இந்தக் குறைபாடு தொடரவே போகிறது. உயர் அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பும், சரியான திட்டமிடலும் பொருத்தமான நடவடிக்கைகளும் இல்லை என்றால், இந்த மக்களின் இடர்பாடுகள் நீண்டகாலத்துக்குத் தொடரவேபோகிறது.


இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இதற்குச் சில உதாரணங்களை இங்கே சொல்லலாம். முழங்காவில், பூநகரி போன்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் இப்போது தங்களுடைய வங்கித் தேவைகளுக்காக கிளிநொச்சிக்கே வந்து போகிறார்கள். இந்த வங்கிகள் இலங்கை வங்கியும் மக்கள் வங்கியும் தமது நடமாடும் வங்கிச் சேவையை இந்தப் பகுதிகளில் வைத்தால் மக்களின் சிரமங்கள் பெரிதும் குறையும்.


மீள்குடியேற்ற மக்களுக்கு வழங்கப்படும் 20.000 ரூபாயை பெறுவதற்கு இந்த மக்கள், 50, 60, 65 கிலோ மீற்றர் தொலைவுக்கு வந்தே பயன்பெற வேண்டியிருக்கிறது. இவ்வாறு வருகின்ற மக்கள் ஏதோ ஐந்து பத்துப் பேரல்ல. ஏறக்குறைய 9ஆயிரம் குடும்பங்கள் இப்படி சிரமப்படவேண்டியிருக்கிறது.


இவ்வளவு தூரத்துக்கு வந்தும் அன்றே பணத்தைப் பெறமுடியாது, வங்கி நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது, சனக்கூட்டம் அதிகம் என்ற காரணத்தினால் திரும்பிச் செல்லும் நிலையும் உண்டு. இதைப்போலவே மருத்துவப் பிரச்சினையும் இந்தப் பிரதேசங்களில் இருக்கிறது. முடிந்தளவுக்கு நடமாடும் சேவைகளின் மூலம் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியில் வைத்திய அதிகாரிகள் முயன்றாலும் ஆள் பற்றாக்குறை, பௌதிக வளப்பற்றாக்குறை போன்ற காரணங்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.


இப்போது முழங்காவில் மருத்துவமனையில் ஒரு சிங்கள மருத்துவரே இருக்கின்றார். இவருக்குத் தமிழ் தெரியாது. மக்களுக்குச் சிங்களம் தெரியாது. முழங்காவில் பகுதியைச் சேர்ந்தவர்களே மருத்துவர்களாக இருந்தும் தமது பகுதிக்கு வந்து சேவை செய்யாமல் இருக்கிறார்களே என்று மக்கள் கவலைப்படுகிறார்கள்.


ஒரு காலத்தில் தாம் இருந்த தமது பகுதியில் தேர்வுசெய்யப்பட்ட மருத்துவர்களையிட்டு நம்பிக்கை வைத்துப் பெருமைப்பட்டதாகவும், இந்த அவலமான நிலையில் யாருமே இப்போது இல்லாமல் தவிக்க வேண்டியிருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


பொதுவாக எவ்வளவோ தமிழ் மருத்துவர்கள் இருக்கும்போது மொழி தெரியாதவர்கள் மருத்துவராக வருவது பொருத்தமில்லை என்றும் ஆனால், யாருமே தங்கள் பகுதிக்கு வராதபோது எங்கோ தொலைவில் இருந்து வந்து சேவையாற்றும் இந்த மொழிதெரியா மருத்துவரைத் தாம் பாராட்டுவதாகவும் இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.


இதைத்தவிர, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற இன்னொரு விடயம் கல்வி. பல பாடசாலைகள் கூரையில்லாமல் இருக்கின்றன. எந்தப் பாடசாலைக்கும் விஞ்ஞான ஆய்வுகூட வசதியில்லை. இவை தவிர, எல்லாப் பாடங்களுக்கும் தேவையான ஆசிரியர்கள் இல்லை. குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள் போரின்போது எப்படியோ இறந்திருக்கின்றனர். அந்த வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.


இதைவிட வெளி மாவட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக இணைப்புப் பெற்றுள்ள ஆசிரியர்களுக்குப் பதிலாக வேறு ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் இப்போது அரைகுறையாக இயங்கும் பாடசாலைகளில் இப்போது படிப்பிக்கின்ற ஆசிரியர்களும் வேறு இடங்களில் இருந்தே வந்து போகிறார்கள். குறிப்பாக வவுனியா, யாழ்ப்பாணம், பருத்தித்துறை போன்ற இடங்களில் இருந்து தினம் வந்து செல்லும் ஆசிரியர்களால் சரியாக வகுப்புகளை நடத்த முடியாதுள்ளது. இந்த ஆசிரியர்களை விடுதியில் தங்கவைப்பதற்கும் வசதியில்லை.


இவர்கள் தங்கி நிற்பதற்கு ஊர்களில் வீடுகளும் இல்லை.


எனவே கல்வி பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இந்தப் பாதிப்பு இனிவரும் சில ஆண்டுகளுக்கு பெறுபேறுகளில் வீழ்ச்சியைக் கொண்டு வரும் என்று கவலைப்படுகிறார் ஒரு கல்வி அதிகாரி. இந்தக்கவலை பெற்றோருக்கும் உண்டு. ஆனால், மாற்றுவழிகள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.


இதேவேளை படைத்தரப்பினரின் ஒத்துழைப்பு பல இடங்களில் கிடைக்கிறது. அவர்கள் மருத்துவ வசதிகளைச் செய்கிறார்கள். சிரமதானப்பணிகளைச் செய்கிறார்கள். கிணறுகளை இறைத்துக் கொடுக்கிறார்கள். தற்காலிக வீடுகளை அமைத்துக்கொடுக்கிறார்கள். ஆனால், சில முக்கியமான பொதுப்பயன்பாட்டு இடங்களை தம் வசமாக வைத்திருப்பதால், மக்களுக்கான சேவை மையங்களும் அவற்றின் சேவைகளும் பாதிக்கப்படுகின்றன.


இவற்றை விட கோவில்கள், தேவாலயங்கள், முன்பள்ளிகள் எல்லாமே பாழடைந்திருக்கின்றன. இவற்றைச் சீர்படுத்துவதற்கு மக்களிடம் வசதிகள் இல்லை. மக்களிடம் வசதிகள் வருவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது செல்லும். முன்னர் வெள்ளப்பெருக்கோ புயலோ வேறு பாதிப்புகளோ வந்தால், சனங்கள் கோவிலுக்கோ, பாடசாலைக்கோ, தேவாலயத்துக்கோதான் தஞ்சம் தேடிச்செல்வார்கள். ஆனால் இப்போது இந்த இடங்களே கூரையில்லாமலும் சுவர்கள் இல்லாமலும் சிதைந்து போயிருக்கின்றன.


மழைக்கு எங்கட பள்ளிக்கூடத்திலதான் சனங்கள் தங்குவினம். ஆனால், இந்த மழைக்கு நாங்கள் பிள்ளைகளோட எங்கபோறதெண்டு தெரியேல்லை என்று துக்கம் ததும்பிய குரலில் சொன்னார், கரியாலை நாகபடுவான் பாடசாலை ஆசிரியர் ஒருவர். அந்தக் குரலை வன்னிக்கு வெளியே உள்ள மக்கள் அனைவரும் வன்னி மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கான அழைப்புக் குரலாக விளங்கிக்கொண்டு ஏற்க வேண்டும்.


வன்னிக்கு வெளியே உள்ள எத்தனையோ பாடசாலைகள் மேலும் மேலும் வசதிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன.


வன்னிக்கு வெளியே பலரும் தங்களுடைய வீடுகளை உடைத்து மாற்றி மாற்றி வெவ்வேறு வடிவங்களில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். பல கோவில்களில் மாபிள்கள் பதிக்கப்படுகின்றன. பல கோவில்களில் கல்யாண மண்டபங்கள் கட்டப்படுகின்றன. இதுபோல பல விஷயங்களுக்கு தேவைக்கதிகமாக பணம் செலவழிக்கப்படுகிறது.


இந்தப் பணத்தில் ஒரு தொகையை சிலகாலத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் வன்னிக்கு ஒதுக்கினால் சக உறவுகளின் நிலை மேம்படும். இன உணர்வு, தேசியம் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சில் இருப்பதை விட செயலில் இருப்பதே அழகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக