வியாழன், 8 ஜூலை, 2010

இந்திய - சீனா யுத்தத்தின் முடிவில் இலங்கைத் தீவு இரண்டாகும்! பகுதி 02

உலகின் ஏனைய நாடுகளின் தொழிலாளரை விடவும் இவர்களுக்கு உயர்ந்த ஊதியம், சலுகைகள், வீட்டுவசதிகள், சமூக நலன்பேண் நடவடிக்கைகள் என்பவற்றின் மூலமும் கைத்தொழிலை யுத்ததளபாட தயாரிப்புக்கு மாற்றியமைப்பதன் மூலமும் இத் தொழிலாளர்களுக்கு பங்கிடப்படும் ஒருவகை உயர்தபட்ச ஊதியம் என்பவற்றின் வாயிலாகவும் இத் தொழிலாளப் பிரபுத்துவ ஏற்பாடு சாத்தியமானது. உலகின் ஏனைய தொழிலாளி வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் இனங்களையும் இராணுவ ரீதியில் கொன்றொழிக்கவும் ஒடுக்கவும் மேற்படி தொழிலாளி வர்க்கம் தயாரிக்கும் இராணுவ தளபாட கைத்தொழில் உற்பத்தி ஒரு காரணியாய் செயல்படுதையும் இங்கு அவதானித்தல் அவசியம்.


இந்த நாடுகளின் தொழிற்சங்கங்களும் இத்தகைய பின்னணிக்குப் பொருத்தமான பிற்போக்கு பாதையையே சர்வதேச அரங்கில் பின்பற்றின. இது தொழிலாளர் வர்க்கத்தை ஒரு பக்கமாய் வீங்கிப் பெருத்த சமச்சீரற்ற வளர்ச்சிக்கு (Uneven development) இட்டுச்சென்றது. இது புரட்சிக்கு எதிர் நிலை வளர்ச்சியாய் அமைந்தது. அதேவேளை அரை முதலாளித்துவம் வளர்ச்சியடைந்திருந்த ரஸ்யாவின் மீது முதலாம் உலக யுத்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்த சுமையானது அங்கு புரட்சியை வெடிக்க வைத்தது. கைத்தொழில் வளர்ச்சி அடையாத நாட்டில் அப்புரட்சி வெடித்ததால் அங்கு சோசலிசப் பொருள் உற்பத்தி வெற்றி பெற மறுத்தது. இதனை விரைவாக புரிந்து கொண்ட லெனின் 1921ஆம் ஆண்டு NEP எனப்படும் புதிய பொருளாதாரக் கொள்ளையை நடைமுறைப்படுத்த தொடங்கினார். 

இதன் மூலம் சிறு முதலாளித்துவ உற்பத்தியையும் அரச முதலாளித்துவ உற்பத்தியையும் உள்வாங்கிய சோசலிச உற்பத்திக்கு திட்டமிட்டார். அது அவரின் நுண்ணறிவில் சிறப்பாக உதயமானாலும் பின்வந்த ஆட்சியாளர் அதனை அரச முதலாளித்துவ சமூக ஏகாதிபத்தியத்திற்கு இட்டுச் சென்றனர். அதன் தொடர் விளைவாக சோவியத் யூனியன் 1989ஆம் ஆண்டு வீழ்ந்து நொறுங்கி இன்று உலகலாவிய ஏகாதிபத்திய சந்தையில் அலை மோதிக் கொண்டிருக்கின்றது.

1949ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெற்ற சீனாவிலும் மேற்படி ரஸ்சியாவில் காணப்பட்டது போன்ற கைத்தொழில் வளர்ச்சியின்மை நிலவியதால் அங்கும் சோசலிச பொருளாதாரம் பெரிதும் ஊசலாடியது. இப்பின்னணியில் 1970 களின் மத்தியில் மா ஓ சேதுங் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் உடன் கைகோர்த்ததன் மூலம் சீனப் பொருளாதாரத்தை ஏகாதிபத்திய வர்த்தக பொருளாதாரத்திற்குள் இழுத்துவிட்டார். அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த டெங்சியா ஓபிங் `பூனை கறுப்போ, வெள்ளையோ அது எலி பிடித்தால் போதும்`; என்ற கொள்கையின் அடிப்படையில் நால்வகை நவீன மயமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் சீனாவை முற்றிலும் ஏகாதிபத்திய யுகத்துள் தள்ளிவிட்டார் மேஜி புரட்சி (Maji Restoration) எனப்படுகின்ற நவீனமயமாக்கல் திட்டத்தை 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் யப்பான் மேற்கொள்ளத் தொடங்கியது. அந்த நவீன மயமாக்கம் யப்பானை இரண்டாம் உலக யுத்தத்திற்குள் பாரியளவில் தள்ளிவிட்டது. சீனாவில் டெங்கால் தோற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் பாதையிலான நவீனமயமாக்கலும் நிச்சயம் சீனாவை ஒரு பெரும் யுத்தத்திற்குள் தள்ளும்.

டெங்கினது நால்வகை நவீனமயமாக்கற் திட்டத்தின் கீழ் தனியார் மயப்படுத்தப்பட்ட அரச முதலாளித்துவ ஏகாதிபத்தியப் பாதை தோற்றுவிக்கப்பட்டது. இது சுமாராக கால் நூற்றாணடு காலத் திட்டமாகும். ஏறக்குறைய 2000ஆம் ஆண்டை அண்டி இத்திட்டத்தின் பெருவெட்டான இலக்கு அடையப்பட்டிருக்க முடியும். விவசாயம், கைத்தொழில், தொழில்நுட்பம், இராணுவம் என்பனவே இந்த நால்வகை நவீனமயமாக்கலுக்கு உட்படும் அம்சங்களாகும். இத்திட்டமானது இதன் முதல் அரைப்பகுதி காலத்திற்குள் சீனாவில் உள்நாட்டு சந்தையை ஓரளவு நிரப்பிவிடக்கூடியது. அதன் தொடர் வளர்ச்சியால் அது உள்நாட்டு சந்தையை நிரப்பி வெளியே வழியத் தொடங்குவது இயல்பு.

தனது உற்பத்தியைத் தொடர்ந்து பேணி மீள் உற்பத்திக்குப் போகவும், பட்டாளமெனப் பெருகும் வேலையற்றோருக்கான வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் தனது சந்தையை வர்த்தக நோக்கில் வெளிநாடுகளை நோக்கி விரிவாக்க வேண்டியது சீனாவுக்கு அவசியமாகும். இந்த சந்தை பிடி போட்டி ஏகாதிபத்தியப் போட்டியாக அமைகின்றது. இந்த ஏகாதிபத்திய சந்தை ஆதிக்கப் போட்டியில் சீனா கடந்த ஒரு தசாப்பத்திற்கு மேலாக மிகப் பெருவளர்ச்சி அடைந்து வருகிறது. வெளிநாடுகளைச் சுரண்டும் ஏகாதிபத்திய வர்த்தக ஆதிக்கத்தின் மூலமே சீனா பெருகிவரும் தனது சனத்தொகைக்கு உணவுபோடவும் தனது தொழிலாளர்களுக்கு சற்று மேலான ஊதியம் வழங்கவும், அதன் மூலம் தனது ஆதிக்கத்தை அரச கட்டிலில் பேணவும் முடியும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்குலக ஆட்சியாளர் தெளிவாக Labour Aristocracy க்கு போய்விட்டனர். 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனாவும் Labour Aristocracy யில் தெளிவாகக் கால் பதித்து விட்டது.

உலகளாவிய தொழிலாளர்களை வர்த்தகத்தின் மூலம் சுரண்டி, சீனத் தொழிலாளர்களை மேல் நிலைப்படுத்தும் அரச முதலாளித்துவ ஏகாதிபத்தியமே சீனாவின் இன்றைய உலகளாவிய அரசியற் பொருளாதாரமாய் உள்ளது. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் வரை சீனா தனது சந்தையை விரிவாக்கி வருகின்றது. அமெரிக்கா, யப்பான், ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா என்பனவற்றுடன் சீனா தனது ஏகாதியத்திய வர்த்தக ஆதிக்கபோட்டியில் ஈடுபட்டுள்ளது. இவற்றுள் சீனாவின் முன் தோன்றும் பலவீனமான நாடும், சீனாவிற்கு வசதியான நாடும் இந்தியாதான். எனவே, ஏகாதிபத்திய பொருளாதார முரண்பாடு முற்றி வெடிக்கும் போது இந்தியாவுடன்தான் சீனா மோதும் நிலை முதலில் உருவாகும்.

இதனை மேலும் சிறிது தர்க்க பூர்வமாக பார்ப்போம். 1980களின் தொடக்கத்தில் உத்வேகமடையத் தொடங்கிய சீனாவின் நால்வகை நவீனமயமாக்கல் கொள்கை இந்தியாவை உலுக்கத் தொடங்கியது. அமைதிக்கு அபிவிருத்தி அவசியம் என்ற டெங்கின் இராஜதந்திர அணுகுமுறையால் இந்தியாவிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் அப்போது ஏற்படவில்லை. இத்தகைய நிலையில் இந்தியாவும் சீனாவிற்கு ஈடுகொடுக்கும் நோக்கில் தனது வழமையான தேசிய முதலாளித்துவம் என்று தான் கூறிக்கொண்ட பொருளாதார கொள்கைக்கு பதிலாக தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக என்று யப்பான் மற்றும் மேற்குலகுடன் கூட்டுப் பொருளாதார உற்பத்தியில் (Collabroration) ஈடுபடத் தொடங்கியது. Hero-Honda Collaboration இவ்வகையானதே. ஆனாலும் சீனாவின் அசுர வேக நால்வகை நவீன மயமாக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் வேகம் பின்தங்கியதாகவே உள்ளது.

தற்போது நிலவும் ஏகாதிபத்தியத்தின் இருதயமாக இருப்பது நிதிநிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் திவாலகத் தொடங்கியமை அந்த ஏகாதிபத்திய அமைப்பிற்கு ஒரு சிவப்பு விளக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்த ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடி எங்கோ ஒரு பக்கத்தில் யுத்தமாக வெடித்துதான் அது தன்நிலையைச் சமன் செய்யப் போகின்றது.
ஏகாதிபத்திய வர்த்தக நிதிமூலதன ஆதிக்கம் என்னும் ஓரே ஒரு மைய உலக ஒழுங்கே இந்தப் பூமியில் உண்டு. இந்த அமைப்பிற்கு தலைமை தாங்கும் நாடு அமெரிக்கா. இதில் புதிய போட்டியாளனாய் ஏகாதிபத்திய அரங்குள் நுழைந்திருக்கும் அதிவேக நாடு சீனா. எனவே யுத்தம் சீனாவில் முளை கொள்வதற்கான வாய்ப்பே அதிகம். மேஜி புரட்சியின் மூலமான தனது நவீனமயமாக்கலின் விளைவாய் யப்பான் வளர்ச்சி அடைந்த போது அது 1905ஆம் ஆண்டு ரஸ்யாவுடன் முதலில் முட்டி மோதி யுத்தமாய் வெடிக்க தொடங்கியது. அவ்வாறே சீனாவும் தனது நால்வகை நவீன மயமாக்கலின் நிறைவாக அது இந்தியாவுடன் முட்டி மோதி யுத்தமாக வெடிக்கும் காலம் வெகு தொலைவிலில்லை. ஏகாதிபத்தியப் பொருளாதாரப் போட்டியின் விளைவாக இன்னும் சில வருடங்களுள் யுத்தம் வெடித்துவிடும் என்பது மிகவும் சோகம் நிறைந்த வரலாற்று உண்மையாகும்.

உலகம் என்றால் வர்த்தகம், வர்த்தகம் என்றால் கப்பல், கப்பல் என்றால் கடல், கடல் என்றால் துறைமுகம் என்பதே உண்மை நிலவரமாகும். வர்த்தக ஆதிக்கத்திற்கான கடல் என்ற வகையில் இந்து சமுத்திரமும், துறைமுகம் என்ற வகையில் இலங்கைத் தீவின் துறைமுகங்களும் முக்கியத்துவம் பெறப் போகின்றனவா என்பது ஆழ்ந்த கவனத்திற்குரிய மையக் கேள்விகளாகும். ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பின் முரண்பாட்டால் வெடிக்கப்போகும் இந்த யுத்தத்தை வல்லமை பொருந்திய ஏகாதிபத்திய நாடுகள் தமது அமெரிக்க, ஐரோப்பிய மண்ணில் வெடிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது. ஆதலால் அந்த யுத்தம் ஆசிய, இந்து சமுத்திர பிராந்தியத்தில் தான் வெடிக்கப் போகிறது. அப்படி ஒரு யுத்தம் வெடிக்கும் போது மேற்குலகம் இந்தியா பக்கம் சாய்வதை தவிர அதற்கு வேறு வழி இருக்காது.

2012ஆம் ஆண்டுக்கு முன் சீன - இந்திய யுத்தம் வெடிக்குமென்று பாரத் வர்மா கடந்த ஆண்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் சீன - இந்திய யுத்தம் வெடிக்குமென்று 1991ஆம் ஆண்டு ஈழத்திலிருந்து வெளியான நூலொன்று கூறுகின்றது. எப்படியோ 2015ஆம் ஆண்டுக்கு முன் யுத்தம் வெடிப்பதற்கான தர்க்கபூர்வ அரசியற் பொருளாதாரப் போக்கு கூர்மை அடைந்து செல்கின்றது. சீனாவின் `அபிவிருத்திக்கான அமைதிக் காலம்` நிறைவடைந்து யுத்தத்திற்கான மோதற் காலம் தோன்றியுள்ளது. சீனாவுக்கும், இந்தியாவிற்கும் இடையே தற்போது தோன்றி வரும் முறுகற் போக்கு இதனை நிரூபித்து நிற்கின்றது. தவிர்க்க முடியாதவாறு நிகழப் போகும் இந்த யுத்தத்தின் பின்னணியில் இலங்கைத் தீவு இரண்டாக உடைவதைத் தான் இந்தியா தனது இறுதி தெரிவாக மேற்கொள்ளும் என்பதிற் சந்தேகமில்லை.

அதாவது தெற்கே இந்திய உபகண்டத்தின் பாதுகாப்பு ஈழத்தமிழரின் பாதுகாப்பிற்தான் தங்கியுள்ளது. அது தான் முழு இந்தியாவினதும் பாதுகாப்பிற்கான அடிப்படையாகவும் அமையும்.

-மகிரிஷி
நன்றி: பொங்குதமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக