வெள்ளி, 9 ஜூலை, 2010

உயிரை பணயம் வைத்து பிரயாணத்தை மேற்கொள்ளவேண்டாம்!

குடியுரிமை பெறத் தவறிய இலங்கையர்களை அவுஸ்திரேலியா தாயகத்துக்கு திருப்பியனுப்பும். இதனால் உயிரை பணயம் வைத்து பிரயாணத்தை மேற்கொள்ளவேண் டாம் என்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….
.
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத பயணம் மேற்கொள்ள திட்டமிடும் இலங்கையர்களுக்கு பிரதம மந்திரி ஜுலியா கில்லார்ட் விடுத்த எச்சரிக்கையில், ‘ஆட்களைக் கடத்துவோருக்கு பணம்கொடுக்க வேண்டாம். அவுஸ்திரேலிய கரையோரத்திற்கு மாத்திரமே வந்து சேரும் நீங்கள் இயன்றளவு விரைவாக தாயகம் திருப்பி அனுப்பப்படவிருப்பதனால் உங்களது உயிரைப் பணயம் வைக்காதீர்’ என்று தெரிவித்துள்ளார்.


பலதரப்பட்ட நாடுகளின் தகவல்களின் அடிப்படையிலும் இலங்கையின் நிலைமை அபிவிருத்தி அடைந்து வருவதை தெரிவிக்கும் யு.என்.எச்.சி.ஆர் இந்த வாரம் வெளியிட்ட அகதிகளுக்கான வழிகாட்டிநெறிகளின் அடிப்படையிலும் புகலிடம் கோரும் இலங்கை மக்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதன் இடைநிறுத்தத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் நீக்கியுள்ளது.


இலங்கையின் நிலைமை அபிவிருத்தியடைந்து வருவதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் ஒரு சில இலங்கையர்களுக்கே அகதிகள் அந்தஸ்து வழங்கப்படலாம். இந்த அந்தஸ்தை இழந்தவர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்படுவார்கள். இலங்கை சம்பந்தமான யு.என்.எச்.சி.ஆர் இன் மீளமைக்கப்பட்ட தகைமைக்குரிய வழிகாட்டி நெறிகளை ஆதாரங்காட்டி அவுஸ்திரேலிய பிரதம மந்திரி கருத்து வெளியிடுகையில், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் விகிதம் வீழ்ச்சியடையக் கூடும்’ என்று தெரிவித்தார்.


இலங்கையைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு குழுவினர் அகதிகள் என சுயமாகவே கருதுவதற்குப் பதிலாக அகதி அந்தஸ்து கோரும் ஒவ்வொரு விண்ணப்பம் தனித்தனியாக இனிமேல் ஆராயப்படும் என்று யு.என்.எச்.சி.ஆர் தெரிவித்துள்ளது என்றும் ஜுலியா கில்லார் குறிப்பிட்டார்.


இந்தப் பிராந்தியத்திலுள்ள பங்காளித்துவ நாடுகளுடன் நெருங்கிப் பணியாற்றுவதன் மூலம் மக்கள் கடத்தப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் அர்ப்பணித்து செயற்பட இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக