வெள்ளி, 9 ஜூலை, 2010

ஒரு தமிழனின் கனவு!!

விடுதலையின்
வேட்கையில்
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
ஈழ உயிர்ப்புகள்;


ஆயினும் -
வெல்வோமெனும் திடத்தில்
தோற்றிடவில்லை ஒரு
உலகத்
தமிழரும்!





அண்ணன் தம்பி
அம்மா அப்பா
பிள்ளை மனைவி
யாரையும் இழந்த
எம் உறவுகள் -
ஈழத்தை இழக்க மட்டும்
தயாரில்லை!




சுவாசத்தில் சுதந்திரம்
கேட்டு -
வாழ்தலுக்கு ஒரு
ஈழம் கேட்டுத் தானே
இத்தனை போராட்டமென
அறுபது வருடம் தாண்டியும்
புரிந்துக் கொள்ள வில்லை
உலகம்!




கைவீசி நடந்த அதே
தெருவில் -
கைகால் முடமாக்கப் பட்டு
கிடக்கிறேன் -
பரவாயில்லை;
எக்காரணம் கொண்டும் எம்
விடுதலை உணர்வை
முடமாக்கிக் கொள்ளாதீர்கள்
உறவுகளே!




நெல்மணிக்கும்
தேயிலைக்கும்
விவசாயம் பார்த்த
தமிழனமே; வாருங்கள்
ஊரெல்லாம் உறைந்துக் கிடக்கும்
ரத்தத்தில் -
எந்த உயிர் யாருடையதெனப்
பார்ப்போம்.


ஒருவேளை அது -
என்னுடையதாய் இருந்தால்
மீண்டுமென்னை உயிர்பித்து விடுங்கள்
ஈழம் வெல்லும் வரை மட்டும்!




உலக தமிழினங்களே
வாருங்கள் -
ஒரு வாரம்
ஈழத்தில் தங்கி
இறந்த போராளிகளின்
உடம்பு கறி கிடைக்கும்
தின்று விடுதலை உணர்வை
மீட்டுக் கொள்ளுங்கள்!




குண்டு வெடி
சப்தத்திற்கோ
பீரங்கியில் சிதைந்து போகும்
மரணத்திற்கோ
பயமில்லை;


இறந்து கொண்டிருப்பது
வெறும் போராளிகள் மட்டுமல்ல
எங்களின் நம்பிக்கையுமென்பதே
பயம்!




இறந்தவர்களுக்கு
இறந்த பின்பும்
நிறைய கடிதங்கள்
எழுதப் படுகின்றன;


பதிலாய் வரும்
அத்தனை கடிதத்திலும்
ஒற்றை சொல்லே
வருகிறது; மீண்டும் மீண்டும்
போராடுங்கள்..
போராடுங்கள்..




இதுவரை
வீடிழந்து
நாடிழந்து
விடுதலை தேடி திரியும்
எம் உறவுகளே;
உயிரை
யாருக்கு வேண்டுமாயினும்
விட்டுவிடுங்கள்;
விடுதலை உணர்வை -
ஈழத்திற்கு மட்டுமாய்
மிச்சம் வையுங்கள்!




ரத்தம் ஊறிய
மண்ணில் ஓர் தினம்
புலிக்கொடி -
பட்டொளி வீசிப்
பறக்கும்;


இது கனவென்று
நினைக்கிறார்கள் சிலர்;


ஆம் கனவு தான்
தமிழனின் கனவு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக