வெள்ளி, 9 ஜூலை, 2010

சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் தாமாகத் தாவிக் குதிக்கும் ? "தமிழ்த் தேசியர்கள்"!

சிறிலங்கா அரசு வெற்றி மமதையில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒரு வகையான உயர்வுச் சிக்கலிலும் மாட்டிக் கொண்டிருக்கிறது. உலகத்திலேயே ’பயங்கரவாதத்தை’ ஒழித்துக்கட்டிக் காட்டியிருக்கிறோம். எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கே அழைப்பு விட்டுக் கொண்டிருக்கிறது.
உலகத்தின் உதவியினைத் திரட்டியெடுத்து, தான் விரும்பியவாறு போரை நடாத்தி, தான் விரும்பியவாறே போரை முடித்துக் கொண்டதால் எழுந்த ஒருவகை ஆணவமும், அகம்பாவவும் கலந்த சிங்கள அரசின் வெற்றிப் பெருமிதமாகவும் இதனைக் கொள்ள முடியும்.


ஒரு புறத்தில் சிங்கள அரசு இவ்வாறு கூறிக்கொண்டாலும் மறுபுறத்தில் தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் எதிராகத் தொடர்ச்சியாகத் தனது போரை நடாத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்தப் போர் தற்போது ஆயுதங்கள் அற்ற போராக, அதே சமயம் தாயகத்தில் தமிழ் மக்களைப் பலவீனப்படுத்துவதனையும், தமிழீழ விடுதலைப் போராட்டம் அரசியல், இராஜதந்திரத்தளத்தில் மீளக் கட்டியெழுப்பப்படுவதை இல்லாதொழிப்பதனையும் நோக்காகக் கொண்டே இப் புதியபோர் கட்டியமைக்கப்பட்டுள்ளது.


இப் புதிய போரில் சிங்கள அரசு இரு மூலோபாயங்களின் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களை பொருளாதார, சமூக, பண்பாட்டுத்தளத்தில் பலவீனமாக்குவதும், தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்கி இனக்கபளீகரம் செய்வதும் முதலாவது மூலோபாயம். தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும், புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்குமிடையே இடைவெளியை உருவாக்குவதும், புலத்துத் தமிழரை தமது தாயகம் நோக்கிய விடயங்களில் இயங்குசக்தியற்றவர்களாக மாற்றுவதும் இரண்டாவது மூலோபாயம்.


முதலாவது மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உத்திகளாக


தமிழ் மக்களின் பொருளாதாரத்தை சிங்கள சிறு, பெரும் முதலாளிகளில் தங்கி நிற்கும் வகையில் மாற்றியமைப்பது, சமூக பண்பாட்டுத் தளங்களில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தனித்துவங்களை படிப்படியாக இல்லாதொழிப்பது, சிங்கள மக்களை வட கிழக்குப் பிரதேசங்களில் நன்றாய் பரவவும் படரவும் விடுவது, இதன் மூலம் தமிழ்-சிங்கள கலப்புத்தலைமுறை உருவாக்கப்படுவதற்கு ஏதுவான முறையில் கலப்புத்திருமணங்களை ஊக்குவிப்பது, தமிழர் தாயகத்தின் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலமும் சிங்கள மக்களை குடியமர்த்துவதன் முலமும் தமிழர் தாயகத்தின் குடிசனப்பரம்பலை மாற்றியமைப்பது, வடக்கு கிழக்கின் நிலப்பரப்பில் சிங்களப்பண்பாட்டு அடையாளங்கள் வெளிப்படக்கூடியவகையில், புத்தவிகாரைகள், சிங்களக் கட்டிடவடிமைப்பிலான கட்டிடங்கள் கொண்டு மீள் நிர்மானம் செய்வது உட்பட பல்வேறுவகையான உத்திகள் சிங்களத்தின் திட்ட நடைமுறையில் உண்டு.
இரண்டாவது மூலோபாயமானது,


புலத்தில் இருந்து தாயகத்துக்கு உருப்படியான பொருளாதார உதவிகள் சென்றடையாது தவிர்ப்பது, அதன் மூலம் தாயகத் தமிழர் பொருளாதாரரீதியில் பலமடைவனைத் தடுப்பதும் புலத்துத் தமிழரின் செவ்வாக்கு வளையத்துக்குள் தாயகத் தமிழர் செல்ல விடாது பாதுகாப்பதும், அவ்வாறு உதவிகள் சென்றடையாது விடுவதற்குரிய காரணமாக புலத்துத் தமிழரைச் சித்தரிப்பதது அதன் ஊடாக புலத்துக்கும் தாயகத்துக்குமான இடைவெளியை உருவாக்குவது, புலத்துத் தமிழர் தமக்குள் குழம்பி, முரண்பட்டுக் கொள்ளக்கூடிய வகையிலான தகவற்போரை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்வது, புலத்துத் தமிழ் அமைப்புக்கள் எதுவும் தாயகத் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாகவோ அல்லது தமிழீழம் என்ற அரசியல் இலக்குத் தொடர்பாகவோ உருப்படியாகச் எதகையும் செய்ய முடியாத் அமைப்புக்களாக அவற்றை சுருங்கச் செய்வது, அதனூடாக காலவோட்டத்தில் தமிழீழ இலக்குத் தொடர்பான புலத்துத் தமிழ் மக்களது அக்கறையினை நீர்த்துப் போகச் செய்வது உட்பட்ட திட்டங்களை உத்திகளாகக் கொண்டுள்ளது. இத்ததைய ஒரு சவால் மிக்க சூழலை ஈழத் தமிழர் சமூகம் எப்படி எதிர்கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப்போகிறது? இதுவே இன்று ஈழத் தமிழர் சமூகத்தின் முன்னுள்ள அவசியமானதும் அவசரமானதுமான கேள்வியாகும். இதற்கான உடனடி நடவடிக்கைகளும் அவசியமானது. தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியிலும் சிங்கள இனவாதப்பூதம் ஈழத்தமிழகத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் மறந்துவிடமுடியாது.
உதாரணத்துக்கு ஒரு விடயத்தை கவனத்துக்கு எடுத்துக் கொள்வோம். யாழ் மாவட்டத்தில் தற்போது இருக்கும் சனத்தொகையில் குறைந்தது 25 வீதமாவது தெற்கிலிருந்து வருகை தந்த சிங்களவர்கள் இருப்பார்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கிலிருந்து வியாபார நோக்கத்துக்காக மட்டுமல்ல, குடியிருக்கும் நோக்குடன் சிங்களவர்களை அரசு உற்சாகப்படுத்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது. விரைவில் யாழ் மாவட்டத்தில் புதிய குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப் புதிய குடிசனமதிப்பீட்டின் அடிப்படையிலேயே புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படப் போகிறது. தற்போது யாழ்மாவட்டத்து வாக்காளர் பட்டியலில் உள்ள ஏறத்தாழ 730,000 பேரில் குறைந்தது 300,000 பேர் தற்போது புலம் பெயர்ந்து விட்டார்கள். இவர்களின் பெர்கள் பதிய குடிசனமதிப்பீட்டின்பின் வாக்காளர் பட்டியிலில் இருநஇது நீக்கப்பட்டுவிடும். புதிய குடிசனமதிப்பீட்டில் அங்கிருக்கும், வந்து போகும் சிங்களவர்கள் தங்களை யாழ் மாவட்டவாசிகளாகப் பதிந்து கொண்டு, யாழ் மாவட்டத்து வாக்காளர் பட்டியலிலும் இடம் பிடித்துக் கொள்வார்கள். ஒரு மதிப்பீட்டின் படி அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகப் போகும் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர் பட்டியலில் 30-40 வீதமான சிங்களவர்கள் வாக்காளர்களாக இருக்கக்கூடிய நிலைமைகள் உள்ளன. இத்தகைய நிலையில் யாழப்பாணத்தில் தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளாக கணிசமான சிங்களப்பிரதிநிதிகளும், சிங்களக்கட்சிகளின் பிரதிநிதிகளே பெரும்பான்மையினராக வருவதற்குமான நிலைமைகள் உள்ளன. இந் நிலைமையினை நாம் எமது மனக்கண்ணில் கொண்டு வரும் போது தமிழ்த் தேசிய அரசியல் எதிர் கொள்ளக் கூடிய ஆபத்துகளைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.


சிறிலங்கா அரசின் இத்தகைய முயற்சிகு எதிராக சர்வதேச ஆதரவினை வென்றெடுப்பதும் இலகுவானதல்ல. இது அரசால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றம் என்ற வகையில் மேற்கொள்ளப்படவில்ல. சிங்கள மக்கள் தாங்களாக விரும்பி வடக்கு நோக்கி இடம் பெயர்வதாகவே இது சித்தரிக்கப்படும். மக்கள் எவரும் எங்கும் போகலாம். எங்கும் வசிக்கலாம்;. இதில் என்ன தப்பு இருக்கிறது. தமிழர்கள் சிங்களப் பகுதியில் வாழ்கிறார்கள். இப்போது சிங்களவர்கள் தமிழ்ப்பகுதிகளில் வாழ்வதற்காகப் போகிறார்கள். அவ்வளவுதான். இப்படித்தான் போகும் சிங்களத்தின் நியாயம். ஆனால், இத்ததைய ஆபத்துக்களையும், சிங்களத்தின் தமிழர் தேசத்துக்கெதிரான மூலோபாயங்களையும் உத்திகளையும் புரிந்து கொண்டு புலத்தில் உள்ள தமிழ்த் தேசியர்கள் செயற்படுவதாகத் தெரியவில்லை. பல்வேறு தளங்களில் வகுக்கப்பட்டுள்ள சிங்களத்தின் உத்திகளை எதிர்கொள்வதற்கு உரிய திட்டங்கள் இவர்கள் கைகளில் உள்ளதாகவும் உணரமுடியவில்லை.


தற்போதய சூழலில் தமிழத் தேசியர்களை மூன்றாக வகைப்படுத்த முடியும்.


விடுதலைப்புலிகள் அமைப்பினை அரசியல் தலைமையாக ஏற்றுக் கொண்டு செயற்பட்ட தமிழ்த் தேசியர்கள்


மே 2009 க்குப் பின்னர் இரண்டு தொகுதியாகி விட்டனர். இவர்களில் தாங்களே உண்மையான விடுதலைப்புலிகள் என்று கூறுபவர்கள் ஒரு தொகுதியும் அதற்கு வெளியில் மறு தொகுதியுமாக இவர்கள் இயங்குகிறார்கள்.


விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வெளியிலும் தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்பட்டு வருபவர்கள் மூன்றாவது தொகுதியினராக உள்ளனர்.
புலத்தில் உள்ள தமிழ்த் தேசிய அணி பலமடைவதற்கு இம் முன்று தொகுதியினரும் ஒரு புரிந்துணர்வுக்கு வருவது ஒரு முன்னிபந்தனையாக இருக்கும். இதற்கு திறந்த மனதுடன் ஒருவரை ஒருவர் மதித்து கலந்து பேசுதலும் விவாதித்தலும் அடிப்படையாக அமையும். தமது தரப்பின் ஏகபோகமே முதன்மையானது என்ற சிந்தனை கைவிடப்பட்டாலே இத்தகைய ஒரு புரிந்துணர்வு குறித்த விவாதங்கள் சாத்தியமாகும்.


ஆனால்


நடைமுறையில் ஒரு தரப்பினர் தமது ஏகபோகத்தை நிலை நிறுத்துவதற்கே முனைந்து வருகின்றனர் . இவர்களுக்கு ஆதரவாக செயற்படும் ஆங்கிலமொழி ஊடகம்); உட்பட்ட சில ஊடகங்கள் தெடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன. வெவ்வேறு காரணங்களினால் இவர்களது கட்டமைப்பின் கீழ் இயங்க விரும்பாத தமிழ்த் தேசியர்களைத் துரோகிகளாகச் சித்தரித்து அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்ற இவர்கள் முனைகிறார்கள். இதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பாகவும் உருத்திரகுமாரன் தொடர்பாகவும் இவர்கள் நடந்து கொண்ட முறை நல்ல உதாரணமாகும். உருத்திரகுமாரனை அரங்கிலிருந்து அகற்றுவதற்கு இவர்கள் முனைந்தமைக்கு முக்கியமான காரணம் அவர் இவர்களது கட்டமைப்பின் கீழ் செயற்பட மறுத்தமையே.


தமது கட்டமைப்பின் ஏகபோகத்தை நிறுவுவதற்காக இந்தத் தமிழ்த் தேசியர்கள் பல சந்தர்ப்பங்களில் சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் தாமாகத் தாவிப் பாய்ந்து விழுந்து கொள்வதனையும் காணமுடிகிறது.
இதற்கு உதாரணங்களாக இருக்கக்கூடிய பல்வேறு உதாரணங்களில் இரண்டை இங்கு குறிப்பிடலாம்.


சிறிலங்கா அரசுடன் நெருக்கமாகப் பணியாற்றிவரும் பேராசிரியர் றோகான் குணரட்ணா அண்மையில் இந்திய ஊடகத்துக்குக் கொடுத்த பேட்டியொன்றில் அண்மையில் தாயகம் சென்ற புலத்துத் தமிழர்குழுவில் உருத்திரகுமாரனைத் தவிர நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்கள் அடங்கியிருந்ததாகக் கூறியிருந்தமையினை புலத்துத் தமிழத் தேசிய ஊடகங்கள் என்று தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் ஊடகங்கள் பிரசுரித்திருந்தன. இது ஒரு முழுப் பிழையான தகவல். திட்டமிட்ட வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை பலவீனப்படுத்த றோகன் குணரத்தின வெளியிட்டபட்ட தகவலை, சிங்களத்தின் நோக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு, இந்தத் தமிழ்த் தேசியர்கள் தமது கையில் எடுத்தார்கள்.


இதுபோன்றே, தாயகம் சென்ற குழுவில் இடம் பெற்ற மருத்துவர் அருட்குமாரன் வெளியிட்ட தகவல்களில் 2006 ஆம் ஆண்டு கேபியினை தான் சந்தித்ததாக கபில கெந்தவிதாரன தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல் குறித்த விடயமும் அமைகிறது.


இத் தகவலை கபில கெந்தவிதாரன தெரிவித்தாரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் இதே குழுவில் பயணித்த சார்ல்ஸ் பிபிசி தமிழோசைக்கு கொடுத்த செவ்வியில் இது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. மேலும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட மருத்துவர் இக் குழுவில் இடம் பெற்றதன் நோக்கம் தொடர்பாக தற்போது வெளிவரும் தகவல்கள் அவரின் பயணத்தின் பின்னால் உள்நோக்கம் கொண்ட சிரலது செயற்பாடுகள் உள்ளது போலவும் தெரிகிறது. இதேவேளை, கபில கெந்தவிதாரன அவ்வாறு கூறியிருந்தாலும்கூட அக் கூற்றின் நம்பகத்தன்மை குறித்தும் இக் கூற்று கூறப்படுவதன் நோக்கம் குறித்தும் தீவிரமாக ஆராய்ந்தே முடிவுக்குப் போக வேண்டும். ஆனால் செய்திகள் பரவ விடப்பட்ட முறையினைப் பார்க்கும்போது இத்தகைய தகவல்கள் இவர்களது ; ஏகபோகத்தை நிலைநிறுத்துவதற்கு உதவும் என்பதற்காக சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் தாமாகத் தாவிக் குதிக்கிறார்கள் இந்தத் தமிழ்த் தேசியர்கள் என்பது புரிகிறது.


இத்தகைய ஏகபோக அணுகுமுறை புலத்தில் தமிழ்த் தேசியம் பலமடைய உதவப்போவதில்லை. மாறாக சிங்களம் விரும்புவதனைப் போல தமிழ்த் தேசியர்கள் தமக்குள் குழம்பி முரண்படுவதற்கே வழிகோலும். இதனைத் தவிர்பதற்கு நாம் முன்னர் குறிப்பிட்ட தமிழ்த் தேசியத்தின் மூன்று தொகுதியினரும் உடனடியாக தமக்கிடையிலான விவாதங்களை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் தாங்களே புனிதர்கள் தாங்களே முதன்மையானவர்கள் ஏகபோக சிந்தனையினைக் கைவிட்டு திறந்த மனதுடனான விவாதங்களுக்கு அனைத்து தமிழ்த் தேசியர்கள் தயாராக வேண்டும்.


விடுதலைப்புலிகள் அமைப்பில், நாடு கடந்த தமிழீழ அரசாங்க முன்னெடுப்பில் கேயியுடன் முன்னர் செயற்பட்டவர்கள் தற்போது சிறிலங்கா அரசின் கைதியாக உள்ள அவரின் செயற்பாடுகளுக்கத் துணைபோகிறார்கள் என்று மேற்கொள்ளப்படும் அவதூறினையும் அவர்கள் நிறுத்த வேண்டும். விடுதலைப்புலிகள் பின்னணி கொண்டிராத தமிழ்த் தேசியர்களுக்கும் கூட உரிய மரியாதையும் இடமும் தமிழத் தேசியத்தின் எதிர்கால முன்னெடுப்பில் கொடுக்கப்பட வேண்டும். சிங்கள அரசின் சூழ்ச்சியில் இருந்த தமிழர் தேசத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அர்த்தபூர்வமாக ஆரம்பிப்பதற்கு இவை அவசியம்.


தமிழர் தேசத்தைப் பாதுகாத்தல் என்பது வெறும் கோசங்களில் இருந்து மேற்கொள்ளப்பட முடியாதது. புலத்தில் உள்ளவர்களால் மட்டும் இதனைச் செய்யவும் முடியாது. இது குறித்துச் சிந்திப்பதற்கு நாம் சில நடைமுறை யதார்த்தங்களைத் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.


தாயகத்கில் வாழும் மக்கள் எவ்வளவு தான் ஒடுக்குமுறைக்குள் வாழ்ந்தாலும், தமது அரசியல் அபிலாகைகளை வெளிப்படுத்துவதற்குத் தற்போது வாய்ப்புக்கள் இல்லாது இருப்பினும்கூட அவர்கள் சார்பில் புலத்துத் தமிழர் அரசியல் முடிவுகளை எடுக்க முடியாது.


புலத்துத் தமிழ் மக்கள் உருப்படியான முறையில் தாயகத்துத் தமிழ் மக்களது நலன்கள் குறித்துச் செயற்படாது தமிழீழ அரசியல் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் தாயகத் தமிழ் மக்களிடம் இருந்து புலத்துத் தமிழ் மக்கள் அரசியல்ரீதியாக அந்நியப்பட்டுப் போக வேண்டி வரும்.


இவ்வாறு தாயகமும் புலமும் தமக்கிடையே ஒருமைப்படாமல் அந்நியப்பட்டுப்போகும் சூழல் ஏற்படின் அது ஒட்டுமொத்த ஈழத் தமிழர் தேசத்தினையும் அரசியல் மற்றும் பொருயாதாரரீதியாகப் பலவீனப்படுத்தும்.


சிங்களம் புலத்துத் தமிழ் மக்கள் தமிழர் தாயகத்தைப் பொருளாதாரரீதியாகப் பலப்படுத்துவததை விரும்பப்போவதில்லை. தமிழ் மக்கள் பொருளாதாரரீதியாக சிங்களத்தில் தங்கி நிற்காத சூழல் ஏற்படின் தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் தனது திட்டத்தை முழுமைப்படுத்துவதில் சிக்கல்கள் உருவாகும் என்பதே இதற்கு முதன்மைக் காரணம்.


சிங்களத்தின் சம்மதத்துடன் தாயகத்திலோ அல்லது புலத்திலோ தாயகம் நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கும் எத்தகைய திட்டங்களும் அது எவர் மூலமாக முன்னெடுக்கப்பட்டாலும் அது தமிழ் மக்களுக்கு உதவும் நோக்கத்தினை விட தனது திட்டத்துக்கு உதவும் நோக்கத்துடனேயே அதனை வடிவமைக்க சிங்களம் முயலும்.


சிங்கள அரசின் சம்மதம் இன்றி தாயகத்தில் எத்தகைய பெரிய திட்டங்களையும் முன்னெடுப்பது தற்போதய நடைமுறைச் சாத்தியம் அற்றது.


காலம் செல்லச் செல்ல தமிழர் தாயகத்தில் சிங்களத்தின் பிடி இறுகிக் கொண்டே போகும்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளக்கிய ஒரு ஆடுகளத்திலேயே புலத்துத் தமிழத் தேசியர்கள் ஆட வேண்டிய ஒரு யதார்த்த சூழல் இருக்கிறது. இந்த ஆடுகளம் குறித்த விவாதங்கள் புலத்துத் தமிழ்த் தேசியர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.


இத்தகைய ஒரு சூழலில் தாயகமும் புலமும் இணைந்து பணியாற்றுவது எவ்வாறு?


சிங்களத்தின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் தாயகத்தினை சிங்கள இனக்கபளீகரத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி?


இதற்கான வேலைத்திட்டம்தான் என்ன?


இத்தயை வேலைத்திட்டங்கள் ஏதாவது உள்ளனவா?


அல்லது அதற்கான வேலைத்திட்டங்கள் எவ்வாறு அமைய முடியும்?
இவை குறித்தெல்லாம் மனந்திறந்த விவாதங்கள் தேவை. தமிழ் மக்களின் தேசிய விடுதலை விடுதலை குறித்து ஆக்கபூர்வமாகச் சிந்திப்பதற்கு முதலில் தமிழ்த்தேசியர்கள் தமது ஏகபோகச் சிந்தனையில் இருந்து விடுதலை பெற்றாக வேண்டும்!


நன்றி தாய்நிலம்

1 கருத்து:

  1. சிங்களத்தின் சம்மதத்துடன் தாயகத்திலோ அல்லது ///புலத்திலோ தாயகம் நோக்கி தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கும் எத்தகைய திட்டங்களும் அது எவர் மூலமாக முன்னெடுக்கப்பட்டாலும் அது தமிழ் மக்களுக்கு உதவும் நோக்கத்தினை விட தனது திட்டத்துக்கு உதவும் நோக்கத்துடனேயே அதனை வடிவமைக்க சிங்களம் முயலும்.////


    ///சிங்கள அரசின் சம்மதம் இன்றி தாயகத்தில் எத்தகைய பெரிய திட்டங்களையும் முன்னெடுப்பது தற்போதய நடைமுறைச் சாத்தியம் அற்றது. ///

    ஆக சிங்களத்துடன் சேர்ந்தியங்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லுகின்றார்
    கேபி போலவா ? அல்லது கருணா டக்ளஸ் போலவா ? என்று சொல்லாமல் விட்டு விட்டார்

    பதிலளிநீக்கு